May 24, 2013

► சூனியத்தை நம்புவது இணைவைப்பே .. ! மூடநம்பிக்கையே .. !



எந்த விதமான ஆயுதங்களும் இல்லாமல் ஒருவருக்கு  தீமை அளிப்பது என்பது இறைவனுக்கு மட்டுமே சாத்தியம். இந்த ஆற்றல் சூனியம் செய்வதன் மூலம் மனிதர்களுக்கும் உண்டு என்று நம்புவது இணைவைப்பே.

 சீப்பு துண்டுகளையும், சிக்குமுடிகளையும் கிணற்றுக்குள் போட்டு மந்திரம் பாடி ஒருவனுக்கு நோய் உண்டாகலாம் என்று நம்புவது மூடநம்பிக்கையே. 

__________________________________________


வழிக்கேடர்களும் அநியாயக்காரர்களும் தான் நபியை சூனியம் பிடித்தவர் என்று சொல்வான் அல் குர்ஆன் :

25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?”

25:8. “அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

25:9. (நபியே! உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

17:47 - "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்" என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதை நாம் நன்கு அறிவோம்.


நபிகளாரை மனித தீங்கை விட்டும் காப்பாற்றுவான் அல் குர்ஆன் :

 5 : 67 - தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.
 

ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்பட்ட நபிகளார் அல் குர்ஆன் :

16 : 99 நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானிற்கு) எந்த ஆதிக்கமும் இல்லை. அவனைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு ஆதிக்கம் உள்ளது.

26 : 221 ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.


 மறுக்கப்படவேண்டிய நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட சூனிய ஹதீத் : 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டி விட்டான் என்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப்பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால்பகுதியில் அமர்ந்து கொண்டார். இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன? என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் விடையளித்தார். இவருக்குச் சூனியம் செய்தவர் யார்? என்று முதலாமவர் கேட்டார். லபீத் பின் அல்அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான் என்று இரண்டாமவர் கூறினார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று விடையளித்தார். எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்குள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். அதை அப்புறப்படுத்திவிட்டீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இல்லை அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்துவிட்டான். மக்கள் மத்தியில் தீமையை பரப்பக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3268)

தம் மனைவியிடத்தில் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நூல் : புகாரி (5765)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் என்ற கிரந்தத்தில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது.

 நூல் : அஹ்மத் (23211)



மேற்கண்ட ஹதீதின் முரண்பாடுகள் :

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது அப்புறப்படுத்தவில்லை. அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியின் 3268 5763 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள் என்று புகாரியின் 5765 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்புகளிலும் முரண்பாடு காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அங்கு செல்லாமல் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும் அப்புறப்படுத்திய பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

எநதப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் இருந்தது. அப்போது நீங்கள் வெளியேற்றிவிடவில்லையா என்று நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறியதாக புகாரி 3268 வது செய்தியில் இடம் பெற்றுள்ளது.

ஆனால் புகாரியில் 5765 வது செய்தியில் இதற்கு மாற்றமாக உள்ளது. சூனியம் வைக்கப்பட்டப் பொருள் வெளியேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டப் பொருளை மக்களுக்கு திறந்து காட்டக் கூடாதா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்களுக்கு இதைத் திறந்து காட்டி அவர்களிடத்தில் தீமையைப் பரப்புவதை நான் விரும்பவில்லை என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக்கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை நபியவர்கள் அறிந்து கொண்டதாகவும் புகாரி 6391 வது ஹதீஸ் கூறுகிறது. நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான் என்று நேரடியாகக் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் அதிகமாக துஆ செய்துவிட்டு பிறகு ஆயிஷாவே எனக்கு எதில் நிவாரணம் இருக்கிறது என்று அல்லாஹ் எனக்கு அறிவித்துவிட்டான் என்று கூறியதாக புகாரியில் (5763) வது செய்தியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்த உடன் தான் கண்ட கணவை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியதாக அஹ்மதில் 23211 வது செய்தி கூறுகிறது.

ஆயிஷாவே நான் எதிர்பார்த்த விஷயத்தில் அல்லாஹ் எனக்கு பதிலளித்து விட்டான் என்று நான் உணர்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஹ்மதில் 23165 வது செய்தியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அல்லாஹ் எனக்கு பதிலளித்ததை நீ உணர்ந்தாயா? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸ்கள் சொல்கிறது.

இந்த முரண்பாடுகளே இந்த ஹதீஸ் இறைவனிடமிருந்து வரவில்லை என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டது. ஏனென்றால் இறைவனுடைய கூற்றில் எந்த விதமான முரண்பாடும் வராது.


 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தியே
   
முதல் வாதம் :

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக மனிதர்களில் இருந்தே அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாக இருந்ததால் இறைவனின் தூதர்கள் என்று மக்கள் நம்பவில்லை. மக்கள் நம்புவதற்காக மனிதனால் சாத்தியமாகாத சில அற்புதங்களை இறைவனின் தூதர்கள் என்பதற்கு உரிய சான்றுகளாக இறைவன் கொடுத்தனுப்பினான்.

மனிதர்கள் செய்ய முடியாத இந்தக் காரியங்களைச் செய்து காட்டுவதைத் தான் இறைத்தூதர் என்பதற்குச் சான்றாக அல்லாஹ் வழங்கினான் என்று இறைத் தூதர்கள் வாதிட்டனர்.

மனிதனுக்குச் செய்ய முடியாத ஒரு காரியத்தை சூனியக்காரர்களும் செய்தால் இறைத் தூதர்களின் அற்புதம் அர்த்தமற்றுப் போய்விடும். அற்புதம் செய்த உம்மையே அதிசயமான முறையில் மனநோயாளியாக்கி விட்டார்களே என்ற விமர்சனம் நபிமார்களை நோக்கி எழும்.
இந்தக் காரணத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்திருக்க முடியாது.

இரண்டாவது வாதம் :

தாம் செய்ததை இல்லை என்று மறுக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்தின் மனநிலை பாதிப்பு இருந்தது என்று சூனியம் பற்றிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

இப்படி இருந்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் இறைத் தூதர் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மன நிலை பாதிப்பின் காரணமாக தன்னை இறைத் தூதர் என்கிறார். இவராக எதையோ சொல்லி விட்டு இறை வேதம் என்கிறார் என்ற எண்ணம் தான் மக்களிடம் ஏற்படும்.

இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி அப்போதே தடைப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏது நடக்கவில்லை என்பதில் இருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரத்திலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக அற்புதங்களை வழங்கி அருள் புரிந்த இறைவன் இறைத் தூதரின் மனநிலையைப் பாதிக்கச் செய்து இஸ்லாத்தின் பால் வராமல் மக்களை விரட்டியடிக்க மாட்டான்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி.

மூன்றாவது வாதம் :

இறை வேதத்தை இறை வேதம் என்று மக்கள் நம்புவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக்கி அவர்கள் மூலம் மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் வேதத்தை வழங்கினான். (பார்க்க திருக்குர்ஆன் 29:48) அப்படி இருக்கும் போது வேதத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் மன நலம் பாதிக்கும் எந்த நிலையையும் ஏற்படுத்த மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கிறோம்.

நான்காவது வாதம் :

நபிகள் நாயகத்தின் உள்ளத்தைப் பலப்படுத்திடவே குர்ஆனை சிறிது சிறிதாக அருளினோம் என்று அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 25:32)

ஒட்டு மொத்தமாக குர்ஆன் அரூளப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்த போதும் அதை இறைவன் நிராகரிக்கிறான். ஒட்டு மொத்தமாக அருளினால் உள்ளத்தில் பலமாகப் பதியாது என்பதையே காரணமாகக் கூறுகிறான். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பலப்படுத்துவதன் மூலமே குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதற்கு முரணாக மேற்கண்ட ஹதீஸ்கள் அமைந்துள்ளன. எங்கோ ஒருவன் இருந்து கொண்டு ஆட்டிப் படைத்து இல்லாததை இருப்பதாகக் கருதும் அளவுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் பலவீனமாக இருந்தது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவே முடியாது.

ஐந்தாவது வாதம் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் அல்ல என்று விமர்சனம் செய்த எதிரிகள் அவர்களைப் பைத்தியம் என்றும் சூனியம் வைக்கப்பட்ட்வர் என்றும் கூறினார்கள். ஆனால் இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுக்கிறான். சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது அல்லாஹ் அதைக் கண்டித்திருக்கிறான் என்றால் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட் முடியாது என்பது விளங்கவில்லையா? குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் பொய்யானவை என்பது உறுதி.

ஆறாவது வாதம் :

திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறுகிறான். எதிரிகள் சந்தேகம் கொள்ள இடமில்லாத வகையில் பல ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்திருக்கிறான்.

இந்த நிலையில் நபிகள் நாயகத்துக்கு மன நோய் ஏற்பட்டால அந்தப் பாதுகாப்பு உடைந்து விடுகிறது. அவர்களின் உள்ளம் தெளிவற்றதாக ஆகிவிடுகிறது. பாத்திரம் ஓட்டையாகி விட்டால் ஒழுகுகத் தான் செய்யும் என்று தான் மக்கள் கருதுவார்கள். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்த மாட்டான் என்பதால் இது பொய்யான செய்தியாகும்.


 தவறான வாதமும் சரியா பதிலும்

தவறான வாதம் 1 : 

நபிகள் நாயகத்தின் மனைவிகளுக்கு மட்டும் தான் சூனியம் செய்தது தெரியும்.

மக்களுக்குத் தெரியாது.

சரியான பதில் 1 :

மனிதர்கள் சூனியம் செய்யாமல் இது போன்ற பாதிப்பு நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் யாருக்கும் தெரியாது என்று கூறுவதை ஏற்கலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களில் லபீத் என்ற யூதன் சூனியம் செய்ததாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களூக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்காக அவன் சூனியம் செய்து அது பாதிப்பயும் ஏற்படுத்தி இருக்கும் போது அதைப் பற்றி எதிரிகளிடம் அவன் சொல்லாமல் இருப்பானா? இவ்வாறு சூனியம் செய்வதற்கு அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லாமல் இருக்க முடியாது. நபிகள் நாயகத்தையே வீழ்த்தி வெற்றி கண்டு விட்டேன் என்று காட்டுவது போன்ற நோக்கத்துக்காகத் தான் இதை அவன் செய்திருக்க முடியும். வேறு எந்த நோக்கத்துக்காக் அவன் செய்திருந்தாலும் அவன் மூலம் எதிரிகளுக்குப் பரவாமல் இருக்க முடியாது. மேலும் லபீத் எனும் யூதன் தான் சூனியத்தை செய்துள்ளான் மனைவிமார்கள் அல்ல அவர்களுக்கு மட்டும் இது தெரிய .

மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்பதற்கு இது மட்டுமின்றி மற்றொரு காரணமும் இருக்கிறது.

புஹாரி 5763 வது ஹதீஸில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.

சூனியம் எங்கே வைக்கப்பட்டது என்பது தெரிந்தவுடன் //தம் தோழர்கள் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்தார்கள்// என்று தான் கூறப்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்துள்ளது என்பதை இதில் இருந்தும் அறியலாம். மக்களுக்கு இது தெரியாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சனை என்பதால் தான் எதிரிகள் விமர்சனம் செய்யவில்லை என்று கூறுவது பிழையான வாதம். மக்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தது என்று தான் ஹதீஸ்களில் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சனை மட்டுமின்றி பொதுவாகவும் இந்த நிலை ஏற்பட்டது என்றும் ஹதீஸிலேயே கூறப்படுகிறது.

தவறான வாதம் 2 :

நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதை காபீர்கள் விமர்சிக்காதது ஏன் ? என்று கேட்பது தவறு.

சரியான பதில் 2 :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டைருந்தால் கண்டிப்பாக அது குறித்து காபிர்கள் கேள்வி கேட்டிருப்பார்கள் என்பது காபிர்களின் வாதம் அல்ல. மூளையும் சிந்திக்கும் திறனும் உள்ளவர்களின் வாதம் தான்.

ஒரு காரியம் நடந்ததா? இல்லையா என்பதை அறிவதற்கான வழிமுறைகளில் விளைவுகளை வைத்துச் சிந்திப்பதும் ஒன்றாகும்.

ஒரு ஊரில் அணு குண்டு போடப்பட்டதாக ஒரு செய்தி கிடைக்கிறது. ஆனால் அந்த ஊரில் எந்த மனிதனுக்கோ அல்லது வேறு உயிரனங்களுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அங்கே அணுகுண்டு போடப்படவில்லை. அது பொய்யான செய்தி என்று நாம் முடிவு செய்வோம். அந்தச் செய்தியைச் சொல்பவர் எத்தகைய நம்பகமானவர் என்றாலும் அவ்வூரில் அணுகுண்டு போடப்பட்டது என்பதை நாம் நம்ப மாட்டோம்.

ஏனெனில் அணுகுண்டு போடப்பட்டால் அதனால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவுகள் ஏற்பட வேண்டும் என்று நாம் சிந்திப்பதே காரணம். நல்ல அறிஞர்கள் ஒன்று கூடி அங்கே அணுகுண்டு போடப்பட்டது என்று கூறினாலும் நாம் ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் தான் நாம் நமது பல கேள்விகளில் இக்கேள்வியையும் எடுத்து வைத்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது மார்க்கத்தையும் ஒழித்திட இணை வைப்பவர்களும் யூதர்களும் கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தனர். எப்படியாவது இவரை வீழ்த்த வேண்டும் என்று சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்தனர். சின்னச் சின்ன தோல்விகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட போதெல்லாம் இவரால் தான் இது ஏற்பட்டது என்று கூறி வந்தனர். ஆயிஷா ரலி மீது களங்கம் சுமத்தப்பட்ட போது அதை எப்படியெல்லாம் முனாஃபிக் கூட்டம் பரப்பியது என்பதை நாம் அறிவோம்.

இப்படியெல்லாம் இவர்கள் தக்க சந்தர்ப்பத்துக்காகக் காத்து கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது அவர்களுக்கு எவ்வளவு அற்புதமான வாய்ப்பு? ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறை விட இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் இது குறித்து யூதர்களோ, முஸ்லிம்களூடன் இரண்டறக் கலந்திருந்த நயவஞ்சகர்களோ எவ்வித் விமர்சனமும் செய்யவில்லை.

அப்படி எந்த விமர்சனமும் இல்லை என்றால் அப்படி ஒரு மந்திர வேலை நடக்கவில்லை என்பது உறுதி.

தவறான வாதம் 3 :

சூனியம் என்பது ஏமாற்று வித்தை என்று சொல்வது பிழை.

சரியான பதில் 3 :

"அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா? என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்"
(அல் குர்ஆன் 21:3)

சூனியத்தை ஏமாற்றும் தந்திர வித்தை என்று தான் யூதர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது உண்மை. சூனியம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட அவர்களே இப்படி புரிந்து வைத்திருந்தால் சூனியம் ஏமாற்றும் தந்திர வித்தை என்பது முற்றிலும் உண்மையே. சூனியம் என்பது மாபெரும் அற்புதம் என்றோ ஆன்மிகத்தின் உயர் நிலை என்றோ அவர்கள் கருதவில்லை என்பதும் உண்மை தான்.

இந்த நிலையில் யூதர்கள் செய்த சூனியத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனநோயாளியாகி விட்டார்கள் என்பது உண்மை என்றால் யூதர்களின் அபிப்பிராயம் நிச்சயம் மாறி இருக்கும்.

சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்று நாம் எண்ணிக்கொண்டிருந்தோம் ஆனால் அதன் மூலம் மாபெரும் மதத் தலைவரையே மனநோயாளியாக்க முடிவதால் நம்முடைய சூனியம் செய்யும் நம்முடைய மத குருமார்களின் ஆன்மிக நிலை மிக உயர்ந்தது என்று கருதி சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்ற தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இதையே ஒரு பிரச்சார ஆயுதமாகக் கொண்டு இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுத்திருப்பார்கள். ஆக அவர்கள் கருத்தும் சூனியம் ஏமாற்று வித்தை தான் என்பது ஜயமில்லை.

சூனியக் கலையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களைப் போல் நடந்து கொண்ட யூதர்கள் சூனியத்தால் ஒன்றும் பண்ண முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் சூனியம் பற்றி எதுவும் அறியாத இவர்கள் சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத கலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று கூறுகிறார்.

தவறான வாதம் 4 :

சூனியம் உண்மை என்பதற்கு மூஸா நபி வரலாறு சான்று.

சரியான பதில் 4 :

ஒரு மனிதருக்கு சூனியம் செய்து அவர் பைத்தியமானார் என்பது வேறு. அவர் முன்னிலையில் சில பொருட்களின் மூலம் வித்தை செய்து காட்டுவது என்பது வேறு.

மூஸா நபியவர்களுக்கு யாரும் ஸிஹ்ர் செய்யவுமில்லை. அப்படி குர்ஆன் சொல்லவும் இல்லை. அவர்கள் முன்னிலையில் கயிறுகள் மூலமும் கைத்தடிகள் மூலமும் வித்தைகள் செய்யப்பட்டன என்று தான் குர் ஆன் கூறுகிறது.

ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் அவர்கள் முன்னிலையில் யாரோ வித்தை செய்து காட்டினார்கள் என்று கூறப்படவில்லை. அவர்களே மன நோயாளிகளாக ஆனார்கள் என்று தான் கூறப்படுகிறது.

மேலும் மூஸா நபி முன்னிலையில் கயிறுகளை பாம்புகள் காட்டினாலும் அது உடனடியாக முறியடிக்கப்பட்டு வித்தை தோற்கடிக்கப்பட்டது. மூஸா நபி தான் ஸிஹ்ரை வென்றார்களே தவிர அவர்களை ஸிஹ்ர் வெல்லவில்லை.

ஆனால் நபிகள் நாயகத்துக்கு ஸிஹ்ர் செய்யப்பட்ட கட்டுக் கதையில் அப்படி கூறப்படவில்லை.

கயிறுகளும் கைத்தடிகளும் ஸிஹ்ர் செய்யப்பயன் பட்ட பொருளாக இருந்தது போல் இங்கே நபிகள் நாயகத்தின் உடல் ஸிஹ்ர் செய்யும் களமாமக பொருளாக ஆக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே இவ்வாறு கூறுவது நிச்சயம் குர் ஆனுக்கு முரணானது தான் என்பதில் ஐயம் இல்லை.

எனவே நபிகள் நாயகத்துக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக யார் கூறினாலும் அவர் குர் ஆன் தீர்ப்புப்படி அநியாயக்காரர் தான்.

தவறான வாதம் 5 :

சூனியம் செய்யப்பட்டாலும் அவர்கள் குர்ஆனை மறக்கவில்லை. சரியான பதில் 5 :

குர்ஆன் முதலில் காபிர்களைத் தான் அடைந்தது. அது தான் அவர்களை முஸ்லிம்களாக மாற்றியது என்ற அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். காபிர்கள் தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டியிருப்பதால் அவர்கள் நம்பும் வகையில் தான் அல்லாஹ்வே தர்க்க வாதங்களை முன் வைக்கிறான். அதனால் தான் காபிர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

எந்த விஷயத்தில் காபிர்களும் நம்புவதற்கேற்ப அல்லாஹ் வாதங்களை வைக்கிறானோ அந்த விஷயங்களில் நாமும் அதற்கேற்ப வாதம் வைப்பது தவறாகாது.

அப்படியானால் குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறானே எனவே சூனியம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் குர்ஆனை மறக்காமல் இருக்கலாம் அல்லவா? என்பது தவறான வாதம்

குர் ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் தான் அந்தப் பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தும் மனநோய் ஏற்பட்டது என்பதை மறுக்கிறோம்.

ஒருவரை மன நோயாளி என்று கூறினால் அவர் எந்தச் செய்தியையும் பாதுகாக்க மாட்டார் என்பது தான் அதன் பொருள்.

மன நோயாளி தான் ஆனால் அனைத்தையும் சரியாக நினைவில் வைத்திருப்பார் என்றால் அது முரண்பாடாகும்.

மறக்க மாட்டார் ஆனால் மறப்பார் என்று கூறுவது போல் இந்த வாதம் அமையும்.

குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன நோயாளியாக ஆகவில்லை என்று நாம் கூறுகிறோம். மன நோயாளியாக ஆனார்கள் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்களை மறுக்கிறோம்.

குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் அதற்கேற்ற வகையில் நபிகள் நாயகத்தின் சிந்தனையைப் பாதுகாக்க வேண்டும். மன நோயாளியாக ஆக்கி விட்டு குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறினால் அதுவே குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தாதா?

குர்ஆனைப் பாதுகாத்தல் என்பதில் அவர்களின் நினைவாற்றல் பாதுகாக்கப்படுவதும் அவர்களின் சிந்தனை தெளிவாக இருப்பதும் அடங்காதா?

மறதி என்பது மனிதனின் இயல்பில் உள்ளது. மறதி இல்லாத ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. யாராலும் தவிர்க்க முடியாத மறதி எனும் இந்தப் பலவீனம் நபிகள் நாயகத்துக்கும் இருந்தது. அனைவருக்கும் இருந்தே தீர வேண்டிய இந்தப் பலவீனம் குர்ஆன் விஷயத்தில் மட்டுமாவது நபிகள் நாயகத்துக்கு இருக்கக் கூடாது என்று அல்லாஹ் சிறப்பு ஏற்பாடு செய்கிறான். குர்ஆனை மறக்கவே முடியாத தனித் தகுதியை அவர்களுக்கு வழங்குகிறான்.

மனதில் பதித்துக் கொள்வதில் மறதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்து மனநோயை எப்படி கொடுப்பான்? செய்யாததைச் செய்ததாகக் கூறினால் அவர்களது உள்ளத்தின் பாதுகாப்புத் திறன் குறைந்து விட்டது என்பது தான் பொருள். இப்படி இருக்கும் போது மன நோயாளியாக எப்படி அவர்களை ஆக்குவான் என்று விளங்காமல் தலை கீழாக விளங்குகிறார்.

தவறான வாதம் 6 :

சூனியம் என்பது நிஜம் என்பதால் தான் பல நபிமார்களுக்கும் சூனியம் செய்யப்பட்டவர் என்று காபீர்கள் விமர்சித்தனர்.

சரியான பதில் 6 :

மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இலிருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

நபிகள் நாயகம் (ஸல்) சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம்; அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்படிருக்கலாம் அல்லவா? என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.

திருக்குர்ஆன் 25:9

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.

திருக்குர்ஆன் 17:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத் தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.

► மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால் இணைக்கப்படும் இன்ஷால்லாஹ் ......

தேவையானவைகளை தேடி தொகுக்கப்பட்டது Jazakallah : By onlinepj.com