நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.
இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காகச் துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.
எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.
- இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.
அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி 974
இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.
ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள்.
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் இந்த ஹதீஸ் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக அமைந்துள்ளதைக் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.மறுமையை நினைவுபடுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது 'இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும்' என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.
அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ, அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.
இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது.
பொது அடக்கஸ்தலம்
ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.
இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும்.
ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டடங்கள் நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல் பாடல் ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.
எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.
என் தாயாருக்கு பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1621, 1622
எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவ மன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(அல்குர்ஆன் 9:113)
நபிகள் நாயகத்தின் தாயாருக்காக பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.ஸியாரத் நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவுபடுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610,
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816,
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873,
இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி
என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும்.
எனவே ஸியாரத்துக்கும் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
மரணித்தவர்களிடம் உதவி தேடுதல்
- மனிதர்களிடம் உதவி தேடுதல்
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுங்கள் என்று நாம் கூறும் போது மற்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள்
நமது வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின் உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் (ஸல்) உட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்பதே அந்தக் கேள்வி.
இது பற்றி விவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன் 5:2)
இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.
மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதி உதவி தேடுவதை மட்டுமே இஸ்லாம் மறுக்கிறது.
இறந்தவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை.
ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே அநேக வித்தியாசங்கள் உள்ளன.
மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.
இறந்தவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாக இருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான்.
மறைவாக இருந்து கொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்தவருக்கும் அவன் அளித்து விடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.
மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.
இறந்தவரை அணுகுபவனின் நம்பிக்கை இப்படி இல்லை. 'இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது' என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.
ஒரு மருத்துவரை அணுகும் போது 'இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது' என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.
இறந்தவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் இவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.
மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று ஒருவன் நம்புகிறான்.
இறந்து போனவரின் கேட்கும் திறனோ, இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.
மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.
மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.
ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.
உதாரணத்துக்காகத் தான் மருத்துவரிடம் உதவி தேடுவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். ஒரு அமைச்சரிடமோ, அதிகாரியிடமோ, தொழிலதிபரிடமோ, தொழிலாளியிடமோ, வியாபாரியிடமோ, வேறு எவரிடமோ கேட்கும் உதவிகள் அனைத்தும் மருத்துவரிடம் தேடப்படும் உதவி போல் அமைந்துள்ளன.
ஆனால் மகான்கள், பெரியார்கள், மெஞ்ஞான குருநாதர்கள், என நம்பப்படுவோரிடம் தேடப்படும் உதவிகள் இறைவன் நிலையில் அவர்களை வைத்து உதவி தேடுவது போல் அமைந்துள்ளன. இந்த வேறுபாட்டை விளங்காததன் காரணமாகவே இக்கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.
தர்கா வணக்கஸ்தலம்
தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகமாகும். ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது.
- இவர்கள் ஒரு காலத்திலும் சொர்க்கத்தில் நுழைய முடியாது.
இணை வைத்தல்' என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன் 4:48)
'மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். 'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் கூறினார்.
(அல்குர்ஆன் 5:72)
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். 'உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்' எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:8)
'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 39:65, 66)
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
(அல்குர்ஆன் 6:88)
'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (6:82) என்ற வசனம் இறங்கியதும், 'அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியும்?' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ' (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 32, 3360, 3428, 3429, 4629, 4776, 6918
இறைவனின் இந்தக் கடும் எச்சரிக்கைக்கு அஞ்சி தர்கா வழிபாட்டை விட்டொழிப்போம்.
____________________________________________________________
Jazakallah www.onlinepj.com