March 8, 2012

எந்த ஒரு காரியமும் வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் ?




அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் - அந்தக் காரியம் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக - மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. 'நபிகள் நாயகம் ஸல் அவர்களைத் தனது இறுதித் தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ - இறைச் செய்தி - வர முடியாது' என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்." அல்குர்ஆன் 5:3

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்?

'மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது' என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

'நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி), நூல்: முஸ்லிம் 3243

'நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷாரலி), நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன?
நாம் எந்த ஒரு அமலை நல்லறத்தைச் செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித் திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.

'செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்' என்று நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: முஸ்லிம் 1435

'செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்' எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி),
நூல்: நஸயீ 1560

இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்னவென்பதை முஸ்லிம்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை

1 மிகவும் மிகவும் கெட்ட காரியம்.
2 வழிகேடு.
3 நரகத்தில் சேர்க்கும்

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன ?

மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும் நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கம் தான் நஃபிலாக இருக்க முடியும். புதிதாக நாமாக ஒரு வணக்கத்தை உருவாக்கி அதை நஃபில் என்று நாமாக சொல்லிக் கொள்ள முடியாது.

ஆனால் பித்அத்களில் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாமல் மனிதர்களாக உண்டாக்கிக் கொண்ட வணக்கங்களும் இருக்கலாம். உதாரணம் மவ்லிது, ஃபாத்திஹாக்கள்

மார்க்கத்தில் உள்ள ஒரு வணக்கத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப செய்வது நஃபிலாகும்.

யாரோ ஒருவர் நிர்ணயம் செய்த நேரத்திலும் அளவிலும் மற்றவர்களும் செய்வது பித்அத் ஆகும்.

ஒருவர் தனக்கு விருப்பமான நாளில் நேரத்தில் குறிப்பிட்ட குரிப்பிட்ட் ரக்அத்கள் தொழுதால் அது நஃபில் ஆகும். அனைவரும் குறிப்பிட்ட நாளில் 20 ரக் அத் அல்லது குறிப்பிட்ட ரக் அத் தொழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அது பித்அத் ஆகிவிடும்.

ஒருவர் தானாக விரும்பிச் செய்யாமல் மற்றவர் தீர்மானித்ததைப் பின்பற்றும் போது அல்லாஹ்வின் தூதருக்கு கொடுத்த இடம் மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதால் அது பித்அத் ஆகிவிடுகிறது.

அதாவது மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்றை வணக்கம் என்று சொன்னாலும் அது பித் அத் ஆகும். மார்க்கத்தில் சொல்லப்பட்ட வணக்கத்தின் அளவையும், நேரத்தையும் ஒருவர் தீர்மானித்து மற்றவர் மீது தினிப்பதும் பித்அத் ஆகும்.

உதாரணமாக ஒருவர் ஒரு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இரண்டு ரக்அத் தானாக விரும்பித் தொழ எண்ணுகிறார். அவ்வாறே தொழுகிறார். இது நஃபிலாகும்.

வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ரக்அத் தொழுவது நல்லது என்று பிரச்சாரம் செய்யப்பட்டால் அல்லது யாரும் பிரச்சாரம் செய்யாமலே அந்தக் கருத்து மக்களிடம் நிலை பெற்று விட்டால் அது பித்அத் ஆகும். ஏனெனில் அனைவரும் ஒன்றைச் செய்வது நல்லது என்று தீர்மானம் செய்வது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உள்ள அதிகாரமாகும். அதை மற்றவர்களுக்குக் கொடுத்தாலோ அல்லது மற்றவர்கள் எடுத்துக் கொண்டாலோ அது பித்அத் ஆகிவிடுகிறது.

உபரியான வணக்கத்துக்கு அனுமதி அளிக்கும் ஹதீஸில் நீயாக விரும்பிச் செய்தால தவிர என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லி இருப்பதில் இருந்து இதை அறியாலாம்.

Al Quran - 33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
................................................................................................
Jazakallah