கரண்டைக் காலில் ஆடை படும் வகையில் கீழாடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாக பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது.
ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறிக் கொண்டு வருகிறோம்.
நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது என்றும் கரண்டைக்கு மேல் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
பெருமை உள்ளவரும் பெருமை இல்லாதவரும் அனைவரும் இவ்வாறே அணிய வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
பெருமையை மையமாக வைத்து சட்டம் மாறுபடுவதாக நாம் கூறுகின்ற கருத்தை இன்றைக்கு பலர் விமர்சனம் செய்து கரண்டையில் ஆடை படவே கூடாது என்ற தங்களது கருத்து தான் சரியானது என்று வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் கருத்தை நம்பிய பலர் தங்களுடைய கீழாடை கரண்டையில் படாத அளவிற்கு அதன் நீளத்தை குறைத்துக் கொண்டனர். இவ்வாறே ஆடை அணிய வேண்டும் என்று மற்றவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். கரண்டையில் ஆடை படும் வகையில் ஆடை அணிபவர்களை விமர்சித்தும் வருகின்றனர்.
பெருமையுடன் அணிவது கூடாது; பெருமையின்றி அணியலாம் என நாம் வேறுபடுத்துவது தவறு என்ற இவர்களின் விமர்சனம் சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு பேச்சுக்கு இவ்வாறு வேறுபடுத்துவது தவறு என்று ஏற்றால் கூட ஆடை கரண்டையில் கீழாடை படக்கூடாது என்று கூற முடியாது. மாறாக கீழாடை கரண்டையில் படுவதாலோ கரண்டையை மூடினாலோ தரையில் இழுபடாத வரை தவறில்லை என்ற நமது கருத்தே அப்போதும் மேலோங்கி நிற்கும்.
இதை விளக்குவதற்காக இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஆடையைக் கீழே தொங்க விடுவது தொடர்பாக வரும் ஹதீஸ்களில்
ஜர்ரு (ஆடையை தரையில் படுமாறு இழுத்துச் செல்வது) மற்றும்
இஸ்பால் (தரையில் படுமளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது)
ஆகிய இரண்டும் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு அரபுச் சொற்களுக்கு அரபு அகராதியில் என்ன பொருள் என்று பார்த்தாலே இப்பிரச்சனைக்கு இலகுவாக முடிவு கண்டு விடலாம்.
ஜர்ரு மற்றும் இஸ்பால் என்பதன் பொருள்
ஜர்ரு என்றால் இழுத்துச் செல்லுதல் என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளை தரை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொருளை நகர்த்துவதற்கே இழுத்துச் செல்லுதல் என்று கூறப்படுகிறது.
பின்வரும் செய்தியில் ஜர்ரு (ஆடையை இழுத்துச் செல்வது) கண்டிக்கப்படுகின்றது.
5783 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி 5783
தரையில் படுமாறு இழுத்துச் செல்லுதல் என்ற அர்த்தத்தில் ஜர்ரு என்ற வார்த்தை பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு இதுவே சரியான பொருள் என்பதை அரபு படித்த அனைவரும் அறிவர். நமது கருத்துக்கு எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் கூட இந்த வார்த்தைக்கு நாம் கூறும் அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். அடுத்து இஸ்பால் என்ற வார்த்தையின் பொருளைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கரண்டைகள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம்
நூல் : அபூதாவூத் (3562)
மேற்கண்ட செய்தி இஸ்பால் செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.
ஒருவர் தன் ஆடையை இஸ்பால் செய்தார் என்றால் அதன் பொருள் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விட்டார் என்பதாகும்.
லிசானுல் அரப் (பாகம் : 11 பக்கம் : 319)
நடக்கும் போது தன் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுபவரே இஸ்பால் செய்பவர்.
நூல் : அந்நிஹாயது ஃபீ ஃகரீபில் அஸர் (பாகம் : 2 பக்கம் : 846)
இஸ்பால் என்றால் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்று கத்தாபீ என்பவர் கூறியுள்ளார்.
நூல் : துஹ்ஃபதுல் அஹ்வதீ (பாகம் : 1 பக்கம் : 407)
இஸ்பால் என்றால் நடக்கும் போது ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுவதாகும்.
நூல் : அவ்னுல் மஃபூத் (பாகம் : 2 பக்கம் : 340)
எனவே இஸ்பால் என்றாலும் ஜர்ரு என்றாலும் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுவதே இவ்விரு வார்த்தைகளின் பொருளாகும். இந்த அடிப்படையில் இவையிரண்டும் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளாகும். இவ்வாறு ஆடை அணிவது கூடாது என்றே ஹதீஸ்கள் கூறுகின்றன.
இதை இங்கே நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்பால் என்றால் கரண்டையைத் தொடுமாறு ஆடை அணியுதல் என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இஸ்பால் செய்வது ஹதீஸ்களில் கண்டிக்கப்படுவதால் கரண்டையில் ஆடை செல்லக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
இவர்களின் வாதம் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன
கரண்டையைத் தாண்டி தரையில் இழுபடுவதைத் தடுக்கும் ஹதீஸ்களை கரண்டையில் படுவதைத் தடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.
கீழாடை கணுக்கால்களைத் தொடலாமா?
கீழாடையின் எல்லையைப் பற்றி பேசும் ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளன. இந்த ஹதீஸ்கள் யாவும் கரண்டையில் ஆடை படவே கூடாது என்று கூறவில்லை. மாறாக கரண்டையையும் சேர்த்து அதை மூடும் வகையில் ஆடை அணிந்தால் தவறில்லை என்றே கூறுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் கீழாடை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (5787)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கணுக்கால்களுக்கு கீழே செல்லும் கீழாடை நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : சமுரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (19309)
இவ்விரு செய்திகளில் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணிவது தான் தவறு என்று கூறப்படுகின்றது. எனவே கணுக்காலில் ஆடை அணிவதை இச்செய்தி அனுமதிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)
நூல் : அபூதாவுத் (3562)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கீழாடை கெண்டைக்காலின் பாதி வரையும் கணுக்கால்கள் வரையும் இருக்கலாம். இதற்குக் கீழே செல்வதில் எந்த நன்மையும் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (13115)
கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்று இங்கே கூறப்படுகின்றது. கணுக்கால்கள் வரை என்றால் அதன் முடிவுப் பகுதி வரை அணிந்து கொள்ளலாம் என்பதே இதன் நேரடிப் பொருள். எனவே கீழாடை கணுக்கால்களை தொடும் வகையில் அணிவது தவறல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமுடைய கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்க வேண்டும். அல்லது கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும். யார் தனது கீழாடையை ஆணவத்துடன் இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : அபூதாவுத் (3570)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : தப்ரானீ
மேலுள்ள செய்திகள் அனைத்தும் கீழாடை கணுக்கால்களைத் தொடக்கூடாது என்று கூறவில்லை. மாறாக கீழாடை கணுக்கால்களைத் தொடுவதை அனுமதிக்கின்றன. கணுக்கால்களுக்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும் என்ற வாசகம் கணுக்கால்களில் ஆடை பட்டால் தவறில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
இந்தச் செய்திகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் இவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் வெவ்வேறான அறிவிப்புக்களாகும். கணுக்கால்களைத் தொடும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று கூறுவோருக்கு மறுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன.
கணுக்கால்களுக்குக் கீழ் என்பதன் விளக்கம்
மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்திகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்றும் கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்பதின் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பது தான். கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற உத்தரவை இந்தக் கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.
ஹுஜைம் குலத்தைச் சார்ந்தவரான ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) நீ கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை உடுத்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால் வரை (உடுத்திக் கொள்). கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : பைஹகீ (5853) அபூதாவுத் (3562)
இந்தச் செய்தியில் கணுக்கால் வரை அணியலாம் என்று முதலில் கூறப்படுகின்றது. இதன் பிறகு கீழாடையைத் தரையில் இழுத்துச் செல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்ற வாசகத்தைக் கூற வேண்டிய இடத்தில் தரையில் ஆடையை இழுத்துச் செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றால் தரையில் இழுபடுமாறு அணியக் கூடாது என்பதே அதன் பொருள் என இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.
சுருங்கச் சொல்வதென்றால் ஆடை தரையில் இழுபடாத அளவிற்கு நீட்டிக் கொள்ள நபியவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதே இந்த ஆய்வின் சுருக்கம். அதாவது கணுக்கால்கள் வரை ஆடையை நீட்டலாம் என்பதும் தரையில் இழுபடாமல் ஆடையை அணியலாம் என்பதும் வெவ்வேறான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரே கருத்தாகும்.
தரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்பதே சட்டம். இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு கணுக்கால்கள் வரை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
ஆடை தரையில் இழுபடாத வகையில் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு கீழே இறக்கினாலும் அவர் கணுக்கால்கள் வரை உடுத்தியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
நபியவர்களால் கண்டிக்கப்பட்டவர்கள்
கணுக்கால்களில் ஆடை படும் வகையில் அணிந்த ஒருவரை நபி (ஸல்) அவர்களோ நபித்தோழர்களோ கண்டித்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.
மாறாக ஆடை தரையில் படுமாறு இழுத்துச் சென்றவரை மட்டுமே நபியவர்கள் கண்டித்ததாக ஆதாரங்கள் உள்ளன. இதே போன்று நபித் தோழர்களும் ஆடையைத் தரையில் இழுத்துச் செல்பவர்களை மட்டுமே கண்டித்துள்ளார்கள்.
ஷரீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
தனது கீழாடையை இழுத்துச் சென்ற ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவரிடம் விரைந்து அல்லது ஓடிச் சென்று அல்லாஹ்வை அஞ்சிக் கொள். உனது கீழாடையை உயர்த்து என்று கூறினார்கள். நான் கவட்டைக் கால்களைக் கொண்டவன். என்னுடைய இரு முட்டுக்களும் மோதிக் கொள்ளும் (எனவே தான் இவ்வாறு அணிந்துள்ளேன்) என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனது கீழாடையை உயர்த்திக் கொள். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வின் படைப்பு அனைத்தும் அழகானதே என்று கூறினார்கள். இதற்குப் பிறகு அம்மனிதரின் கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்கும் நிலையிலேயே அம்மனிதர் தென்பட்டார்.
நூல் : அஹ்மது (18656)
முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, “நீர் யார்?” என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில் படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்’ என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
முஸ்லிம் (4236)
முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்த போது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு “(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்” என்று (இடித்துக்) கூறலானார்கள்.
பிறகு “அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் “அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (4239)
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
(உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு) இளைஞர் திரும்பிச் சென்ற போது அவரது கீழங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), “எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள்.
புகாரி (3700)
கணுக்காலில் ஆடை படக்கூடாது என்போரின் ஆதாரங்கள்
முதல் ஆதாரம்
ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (15389)
இந்தச் செய்தியில் ஆடையை நீட்டுவதற்குக் கடைசி எல்லையாக கணுக்கால்களின் மேல் பகுதி கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாக வைத்து கணுக்காலில் ஆடை விழக் கூடாது. கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே ஆடையை இறக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
இந்த அறிவிப்பை அபூ தமீமா என்பாரிடமிருந்து அபுஸ்ஸலீல் என்பவர் அறிவிக்கின்றார். இந்தச் செய்தியை அபூ தமீமாவிடமிருந்து அபுஸ் ஸலீல் மட்டும் அறிவிக்கவில்லை. அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் உட்பட காலித் மற்றும் அபூ ஃகிஃபார் ஆகிய மூவர் அறிவித்துள்ளனர்.
இந்த மூவரும் நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அபுஸ்ஸலீல் காலிதுக்கும் அபூ ஃகிஃபாருக்கும் மாற்றமாக இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.
காலிதுடைய அறிவிப்பிலும் அபூஃகிஃபாருடைய அறிவிப்பிலும் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால்களின் மீது ஆடை படுவது தவறல்ல என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பவில் கணுக்கால்கள் மீது ஆடை விழவே கூடாது என்று இதற்கு மாற்றமாகக் கூறப்பட்டுள்ளது.
அபுஸ்ஸலீலை விட காலிதே உறுதியானவர் என்பதாலும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு காலிதுடைய அறிவிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாலும் கீழாடை கணுக்கால்களைத் தொடலாம் என்று கூறும் காலிதுடைய அறிவிப்பே சரியானதாகும். கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய மேற்கண்ட அறிவிப்பு பலவீனமாகும்.
காலிதுடைய அறிவிப்பு
கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மது (22121)
அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (3562)
அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) அபூசயீத் (ரலி) அனஸ் (ரலி) சமுரா (ரலி) ஆகிய ஐந்து நபித்தோழர்கள் வழியாக வந்த அறிவிப்புகளை முன்னர் பார்த்தோம். இந்த அறிவிப்புகளும் கணுக்காலில் ஆடை படுவதை அனுமதிக்கின்றன.
எனவே கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு காலித் மற்றும் அபூஃகிஃபாருடைய அறிவிப்புக்கும் அந்த ஐந்து நபித்தோழர்கள் வழியாக வரும் அறிவிப்புகளுக்கும் மாற்றமாக இருப்பதால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு தவறானதாகும்.
மேலும் காலித் மற்றும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்படுவதைத் தொடர்ந்து தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்றும் சேர்த்து கூறப்படுகின்றது.
ஆனால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பில் தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்ற தகவல் கூறப்படவில்லை. எனவே அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு முழுமையற்றதாகவும் பிழையானதாகவும் உள்ளது.
பல நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு ஒருவரின் அறிவிப்பு மாற்றமாக இருந்தால் அவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஹதீஸ் கலை விதியின் படி இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இரண்டாவது ஆதாரம்
அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக் கால்களின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குக் கீழே கணுக்கால்களுக்கு மேல் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (10151)
இந்தச் செய்தியில் கணுக்காலின் மேல் பகுதி இறுதி எல்லையாகக் கூறப்படுவதால் இதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். இந்தச் செய்தியில் முஹம்மது பின் அம்ர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் எனினும் இவரிடமிருந்து தவறுகள் பல ஏற்படும் என்று இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இவர் தவறிழைத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. ஏனென்றால் இந்தச் செய்தியை அவர் அப்துர் ரஹ்மான் பின் யஃகூப் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்.
அப்துர் ரஹ்மான் பின் யஃகூபிடமிருந்து முஹம்மது பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். கீழாடை கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும் என்றே இவரது அறிவிப்பில் உள்ளது. அதாவது கீழாடை கணுக்கால்களைத் தொடுவது தவறல்ல என்றே இவருடைய அறிவிப்பில் உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மது (7519)
முஹம்மது பின் இப்ராஹீம் உறுதியானவர் நம்பகமானவர். இவர் முஹம்மது பின் அம்ரை விட வலிமையானவர். எனவே இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பை ஏற்க இயலாது.
மேலும் இதே செய்தி அபூ சயீத் மற்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் வழியாகவும் வந்துள்ளது. இந்த சரியான அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அதாவது கணுக்கால்களை கீழாடை தொடலாம் என்றே கூறப்பட்டுள்ளது. கணுக்கால்களுக்கு மேல் வரை அணிய வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த அறிவிப்புகளை முன்பே நாம் பார்த்து விட்டோம்.
எனவே முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பு நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருப்பதால் கணுக்கால்களுக்கு மேல் அணிய வேண்டும் என இவர் தவறுதலாக அறிவித்திருப்பது தெளிவாகி விட்டது. இந்த தவறான அறிவிப்பை ஆதாரமாக எடுக்க இயலாது.
மூன்றாவது ஆதாரம்
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடம். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பா விட்டால் கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)
இந்தச் செய்தியில் ஹுதைஃபா (ரலி) முஸ்லிம் பின் நதீர் அபூ இஸ்ஹாக் அபுல் அஹ்வஸ் மற்றும் குதைபா ஆகியோர் அறிவிப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இதில் இரண்டாவதாக இடம்பெறும் அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீர் நம்பகமானவர் என்று அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை. இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை எல்லாம் நம்பகமானவர் என்று கூறும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை ஏற்க முடியாது.
நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்ற வாசகத்தால் குறிப்பிடுவது வழக்கம். அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீரை இமாம் இப்னு ஹஜர் மக்பூல் என்றே குறிப்பிட்டுள்ளார்.
இவரது அறிவிப்பை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற செய்திகளை வலுவூட்டுவதற்கு துணைச்சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் தஹபீ மற்றும் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேற்கண்ட செய்தியை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவிக்கின்றார். அத்துடன் கீழாடை கணுக்கால்களைத் தொடுவதால் தவறல்ல என்று கூறும் ஏராளமான சரியான அறிவிப்புகளுடன் முரண்படும் வகையில் அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவித்தாலே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்தால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பை ஏற்க இயலாது.
இவர் மேற்கண்ட செய்தியைப் பிழையாக அறிவித்திருந்தாலும் வேறு ஒரு நேரத்தில் சரியாக அறிவித்துள்ளார்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)
இந்த அறிவிப்பில் கணுக்கால்களுக்குக் கீழே எந்த உரிமையும் இல்லை என முஸ்லிம் பின் நதீர் சரியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே மற்ற சரியான ஆதரங்களுடன் ஒத்துப் போகின்றது. எனவே கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் அறிவித்தது தவறு என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.
ஆய்வின் சுருக்கம்
கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.
அதே நேரத்தில் ஆடையை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் காட்டிலும் மேலே உயர்த்தி அணிவது சிறந்ததாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்காலின் பாதி வரை அணிய வேண்டும் என்பதை முதல் உத்தரவாக பிறப்பிக்கின்றார்கள். இதை விரும்பா விட்டாலே இதற்கு அடுத்த நிலையை கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்கள். எனவே ஆடையை உயர்த்திக் கட்டுவது மார்க்கத்தில் சிறந்த நிலையாகும்.
Jazakallah By onlinepj.com