October 7, 2013

குர்பானியின் சட்டங்கள் :



► யார்மீது கடமை?

இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக ஒரு கடமையைச் செய்ய வலியுறுத்தப்பட்டால் அதைச் செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.

► முக்கியமான சுன்னத்

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளது.

ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தியாகப் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்து விட்டிருப்பதைக் கண்டபோது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) நூல் : புகாரி (5500)

திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் திருக்குர்ஆனும் இதை வலியுறுத்தியுள்ளது.

(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன் 108: 1,2)

► கடன் வாங்கி குர்பானி

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் இதை நிறைவேற்றுவதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்குச் சான்றாக கடன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறக்கூடிய பைஹகீயில் இடம் பெறும் செய்தி ஆதரமற்றதாகும்.

கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர்மீது கட்டாயம் இல்லை. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது. கடன் இருக்கும் போதோ அல்லது கடன் வாங்கியோ அவர் குர்பானி கொடுப்பது கூடாது.

கடனைத் தவிர அனைத்து பாவமும் ஷஹீதிற்கு மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : முஸ்லிம் (3832)

எனவே வசதியற்றவர்கள் கடன்பட்டு குர்பானி கொடுக்கத் தேவையில்லை. வசதியில்லாததால் குர்பானி கொடுக்காதவரை அல்லாஹ் எந்த கேள்வியும் இது தொடர்பாக கேட்கமாட்டான். குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.

"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாயீ (4285)

► பிராணிகளின் தன்மைகள்

குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப்(ரலி) நூற்கள்: திர்மிதீ(1417), அபூதாவூத்(2420), நஸாயீ(4294) , இப்னுமாஜா (3135),அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள். அறிவிப்பாளர் : அலீ (ரலி) நூல் : நஸாயீ (4301)

தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும்.இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை.

பெரும்பாலான இடங்களில் அல்லாஹ்விற்காக வாங்கப்பட்ட பிராணிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி போட்டிவைக்கிறார்கள். இதனால் அப்பிராணிகளின் கொம்புகள் உடைந்துவிடுகின்றது. அவற்றுக்கு பலத்த காயமும் ஏற்படுகிறது.

இக்கேளிக்கையில் ஈடுபடுபவர் உயிரினங்களை கொடுமைப்படுத்திய குற்றத்தின் கீழ் சேர்க்கப்படுவார். பிராணியை அறுக்கும்போது அதற்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளும்படி வலியுறுத்தும் நம்மார்க்கம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்தரவதையை ஒருபோதும் ஏற்காது.

► நபிகளார் கொடுத்த குர்பானி ஆடு

நபி (ஸல்) அவர்கள் "கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூற்கள்: முஸ்லிம் (3977)

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும்.

► விலை உயர்ந்த பிராணி

குர்பானி பிராணிகள் வாங்கும் போது நல்ல தரமான உயர் ரகமானதை வாங்குவது நன்மையை அதிகரித்துத் தரும். அல்லாஹ் கூறியுள்ளான் என்பதற்காக நல்ல இறைச்சியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அவர்கள் உயர்தரமான இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கூடுதலான நன்மைகள் உண்டு. இதனைப் பின் வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

"நீ தூய்மையானதும், "தன்யீம்' என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு இந்த இடத்தில் என்னை சந்தி! (இப்படிச் செய்வதினால்) உன்னுடைய செலவுக்கும், உன் கஷ்டத்திற்கும் ஏற்ப கூலி கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி(1787)

சிறந்த அமல் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வை நம்புவதும் அவனுடைய பாதையில் போர் புரிவதுமாகும் என்று கூறினார்கள். அடிமை விடுதலை செய்வதில் சிறந்தது எது? என்று கேட்டேன். எஜமானால் விருப்பமுள்ள அதிக விலையுள்ள அடிமை (யை விடுதலை செய்வது) என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல் : புகாரி (2518)

► பிராணியின் வயது

"இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம்

பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.

முஸின்னா வைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் : ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகள் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால்தான் வயது விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முஸின்னா என்பது ஆட்டிலும் மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலியமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.

► பாலூட்டும் பிராணி

குட்டியை ஈன்று பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும் பாலுக்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனித்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.

அவர் (ஒரு அன்சாரித் தோழர்) இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : (4143)

► கூட்டுக் குர்பானி

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம். ஆடு வாங்கி குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த வகையில் சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுத்து குர்பானி கொடுத்த நன்மையை அடையலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஒர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூற்கள்: முஸ்லிம்(2540)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜ§ப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி (1421), நஸாயீ (4316),இப்னு மாஜா (3122)

மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரமாக உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

► அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிராணியை அறுக்கும் முன் கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது.

"எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) நூற்கள்: முஸ்லிம் (3955), திர்மிதி(1329) நஸாயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)

ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதை கல்லில் கூர்மையாக்கு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் (3977)

► குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா?

குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானவையாக உள்ளது.

ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி பிராணியின் முதலாவது சொட்டு விழும்போதே உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானதுதான் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல் : பைஹகீ (19161,19162)

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அமீர் பின் காலித் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகையால் குடும்பத்தினர் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் குடும்பத்தினர்கள் அறுப்பதை பார்க்க விரும்பி அவர்களாகவே முன்வந்தால் அதில் எந்தக் குற்றமும் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று பார்த்துள்ளார்கள்.

குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்கித்தான் அறுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூஹர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

இது தொடர்பாக பைஹகியில் இடம் பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே எந்த திசை அறுப்பவருக்கு தோதுவாக உள்ளதோ அந்த திசையில் அறுக்கலாம்.

சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர். இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும். மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத, மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட "பித்அத்'தான நடைமுறைகளாகும். இவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

► குர்பானி கொடுக்கும் போது கூற வேண்டியவை

பிராணியை அறுக்கும் போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இதுபற்றி அபூதாவூத், பைஹகீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் ஒரு பலகீனமான ஹதீஸ் இடம்பெறுகிறது. ஆகையால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகளையே கூறவேண்டும்.

அறுக்கும்போது "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும்.

"நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூற்கள்: புகாரி(5565),

முஸ்லிம் (3976) முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று கூறியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

► தானே அறுப்பது சிறந்தது

பெருநாள் தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலில் பணிபுரியும் ஹஜ்ரத்மார்களுக்கும் மோதினாருக்கும் கடுமையான கிராக்கி வந்துவிடும். ஒவ்வொருவரும் தங்களுடைய குர்பானி பிராணியை அறுப்பதற்காக அவர்களையே நாடிஇருப்பார்கள். இவர்கள் அறுத்தாலே குர்பானி ஏற்கப்படும் என்று பலர் இன்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய கரத்தால் அறுத்துள்ளதால் குர்பானி கொடுப்பவர் தானே அறுப்பதே சிறந்ததாகும். அறுக்கத் தெரியாதவர் "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று கூறி அறுக்கத் தெரிந்த எந்த ஒரு முஸ்லிமைக் கொண்டும் அறுக்கலாம்.

► பெண்கள் அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக்(ரலி), நூல்: புகாரி(5504)

► எப்போது அறுக்க வேண்டும்?

குர்பனிப் பிராணியை "உலுஹியா, குர்பானி'' என்று பிரித்து "உலுஹியா'' என்றால் தொழுகைக்கு முன்பு அறுக்கலாம் என்றும், "குர்பானி'' என்றால் தொழுகைக்குப் பின்புதான் அறுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரித்துச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உலுஹியா என்பதும், குர்பானி என்பதும் ஒன்றுதான்.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர் கொடுத்தால் அது குர்பானியாக கணக்கில் கொள்ளப்படாது.

அறுப்பதற்குரிய ஆரம்ப நேரமாக தொழுகையை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்து விட்டதால் அதையே துவங்குவதற்குரிய நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் இதை அறியாமல் ஃபஜர் ஆரம்பித்த உடனே அறுத்து விடுகிறார்கள். தெரியாமல் தொழுகைக்கு முன் அறுத்து விட்டால் தொழுத பின் மற்றொரு பிராணியை அறுக்க வேண்டும்.

"இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதி யில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3965) அறிவிப்பவர் : பரா(ரலி)

எத்தனை நாட்கள் கொடுக்கலாம்? ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்குப் பிறகுள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.

"தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல் : தாரகுத்னீ (பாகம் : 4,பக்கம் : 284)

► எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

நூற்கள்: புகாரி(5565), முஸ்லிம் (3976) அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில் 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்துள்ளார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அறுக்கும் படி கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளை சமைத்து சாப்பிட்டதாக இடம் பெற்றுள்ளது.

நூல் : முஸ்லிம் (2137)

► பங்கிடுதல்

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், அடுத்தது ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

"அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

(அல்குர்ஆன் 22 : 36)

இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல் : புகாரி (1717) அறிவிப்பாளர் : அலீ (ரலி) 3643

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜ§ப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர்ப்பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் (அன்று) வந்திருந்த பலகீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (3986)

குர்பானி மாமிசத்தை காஃபிர்களுக்கு கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும்தான் கூறுகிறான். ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் காஃபிரான ஏழைக்கும் வழங்குவதில் எந்த குற்றமும் இல்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரமப்படக்கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக அதிகம் இருந்தால் காஃபிர்களுக்கும் வழங்கலாம்.

► தோல்

குர்பானி பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

"ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : அலீ(ரலி) நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2535)

தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாக கொடுப்பதை தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்றுவிடும்போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

► ஹஜ்ஜு சென்றிருப்பவர்கள் உள்ளூரில் குர்பானி கொடுக்கவேண்டுமா?

ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நபி(ஸல்) அவர்கள் அவர்களுடன் சென்ற மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.

► இறந்துவிட்டவர்கள் சார்பாக குர்பானி

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாகும்.இதில் அபுல்ஹஸனா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். மேலும் இதில் ஷரீக் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். இத்துடன் ஆதாரப்பூர்வமான பின்வரும் ஹதீசுடன் இக்கருத்து மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பயன்தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (3358)

"நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா

மேற்கண்ட ஹதீஸ் நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கும் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கட்டளையிடவும் இல்லை.

_________________________
வெளியீடு : தீன்குலப் பெண்மணி இதழ்
அப்பாஸ் அலீ, மதுரை