November 3, 2011

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு நிலைகள், ஒன்றே பின்பற்றுவதட்க்குரியது.




 நபித் தோழர்களை விட நபிமார்கள் சிறந்தவர்கள் என்பதில் எந்த முஸ்லீமுக்கும் இரண்டாவது கருத்தில்லை.

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களைத் தான் மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான். நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமை யாக்கிய இறைவன் அதைக் கூட நிபந்தனையுடன் தான் கடமையாக்குகிறான். நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் சுய சிந்தனையின் பேரில் நபிமார்கள் செய்தவைகளைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.

அப்படியானால் வஹீ எனும் இறைச் செய்தியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நபித் தோழர்களின் நட வடிக்கைளைப் பின்பற்றுவது எப்படி மார்க்கத்தின் கடமையாக அமையும் ? இதைச் சிந்தித்தாலே இந்தப் பிரச்சனையில் மாற்றுக் கருத்துடையவர்கள் தெளிவடைவார்கள்.

நம் அனைவருக்கும் தெரிந்த சில விபரங்களின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலமும் இதை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

  • வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத் தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.
அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக்கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவையாவும் இறைத் தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப்பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே ? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது ? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித்தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல் : முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல் : முஸ்லிம் 4356

மற்றொரு ஹதீஸும் இந்த அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது.

பரீரா என்ற பெண் முகீ என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப்பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீ அதிக அன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடிய வில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறினார்கள். அப்போது பரீரா இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை யில்லை, பரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியானால் எனக்கு முகீ வேண்டாம் என்று பரீரா கூறி விட்டார்.
நூல்: புகாரி 5283

கணவரைப் பிடிக்காத போது அவரிடமிருந்து விலகிக்கொள்ளும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தி பரீரா விலகிக்கொண்டார்.

கணவன் மனைவியர் சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் போது இருவரும் சேர்ந்து வாழலாமே என்று நாம் அறிவுரை கூறுவோம். பிரியும் உரிமை இருந்தாலும் கொஞ்சம் அனு சரித்துப் போகலாமே என்ற எண்ணத்தில் இவ்வாறு ஆலோசனை கூறுவோம். இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை கூறினார்களா ? அல்லது இனி மேல் இந்த உரிமை கிடையாது என்ற அடிப்படையில் ஆலோசனை கூறினார்களா ? என்று பரீராவுக்குச் சந்தேகம் வருகிறது.

எனவேதான் இது மார்க்கக் கட்டளையா ? அல்லது உங்களின் சொந்தக் கருத்தா ? என வினவுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எனக் கூறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விருப்பத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப் படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்.
வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை பரீரா ஏற்காததால் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கருதவில்லை. எந்த அறிஞரும் இவ்வாறு கருதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங்களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லை, வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் எனும் போது வஹீயுடன் தொடர்பில்லாத நபித் தோழர்களையோ, நல்லறிஞர்களையோ பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் எப்படி அனுமதி இருக்கும் ? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வஹீ தொடர்பில்லாத நபித் தோழர்களின் சொற்களோ, செயல்களோ மார்க்கத்தின் ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறினால் நபித் தோழர்களை இழிவு படுத்துவதாகப் பிரச்சாரம் செய்வது எந்த அளவுக்கு அறியாமை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டியபோது இது உடும்பு இறைச்சி என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்துவிட்டார்கள்.
அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதரே! இது ஹராமா? எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத்தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் கருத்து)
நூல் : புகாரி 5391, 5400, 5537

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் தான். எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படு கின்றது.

  • மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.
  • இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இவ்வாறு இருக்கும் போது இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காணமுடியும்.

சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான். இறைவனால் கண்டிக்கப்பட்ட இது போன்ற விஷயங்களை நாம் பின்பற்றக் கூடாது.

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான்.

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் : 66:1

நான் அனுமதித்ததை நீ எப்படி ஹராமாக்கலாம் ? என்று இறைவன் கேட்டதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவே இவ்வாறு ஹராமாக்கினார்கள் என்பதை அறியலாம். மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூற அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது.

எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனிமரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தபின் இந்த மனநிலையை மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள்.
அனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது..
திருக்குர்ஆன் : 18:28

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும் ? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம்மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.
திருக்குர்ஆன் : 80:1-10

நூல்கள் : திர்மிதி 3254, முஸ்னத் அபீ யஃலா 3123

அவர்களின் இந்த நடவடிக்கை வஹீயின் அடிப்படையில் அமையவில்லை என்பதை இறைவனே சுட்டிக்காட்டுவதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் வெளிப்படையாக முஸ்லிம்களைப் போலவே நடந்து வந்தனர். தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களிலும் பங்குபெற்று வந்தனர்.
ஆனால் போருக்குச் செல்லும் நிலைவந்தால் ஏதாவது பொய்க்காரணம் கூறி போரில் பங்கெடுக்காமல் இருப்பதற்கு நபிகள் நாயகத்திடம் விதிவிலக்குப் பெற்றுக் கொண்டனர்.

இது பற்றி இறைவனின் முடிவு என்ன? என்பதற்குக் காத்திராமல் அவர்களின் பொய்ச்சமாதானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இது தவறு எனப்பின் வருமாறு இறைவன் சுட்டிக்காட்டுகிறான்.

முஹம்மதே!) அருகில் கிடைக்கும் பொருளாகவும், நடுத்தரமான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் பயணம் அவர்களுக்குச் சிரமமாகவும், தூரமாகவும் இருந்தது. எங்களுக்கு இயலுமானால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர். தங்களையே அவர்கள் அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்பதை அல்லாஹ் அறிவான். (முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும்முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?
திருக்குர்ஆன் : 9:42,43

எனது கட்டளைக்குக் காத்திராமல் நீர் எப்படி அனுமதியளிக்கலாம் என்று கேட்டு மேற்கண்ட செயல் தவறு எனச் சுட்டிக்காட்டுகிறான்.

பணயத் தொகை பெற்றுக் கொண்டு போர்க்கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்ததுதவறு என்று இறைவன் கண்டித்துத் திருத்துகிறான்.

பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப் பிடித்தல் எந்த நபிக்கும்தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் : 8:67,

முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
திருக்குர்ஆன் : 8:68

வஹீ வருவதற்கு முன் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. வஹீக்கு மாற்றமாக கவனக் குறைவாக அவர்கள் எடுத்த முடிவையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மார்க்க விஷயத்தில் இறைவனின் வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மார்க்க ஆதாரமாகாது என்றால் நபித் தோழர்களின் செயல்களோ, மற்றவர்களின் கருத்துக்களோ எப்படி மார்க்க ஆதாரமாக அமைய முடியும்?

  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப் படுவார்கள்) அப்போது நான் அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்தவழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக்கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பா (ரலி)
நூல் : புகாரி 3349, 3447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?

நபித் தோழர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத்களை உருவாக்குவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் என்னைக்கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. என்னிடம் சில கூட்டத்தினர் வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன். 'உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்பது உமக்குத் தெரியாது' என்று கூறப்படும். எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான்; கேடு தான் என்று நான் கூறுவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.

இது பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது நியாயத் தீர்ப்பு நாளில் என் தோழர்களில் ஒரு கூட்டத்தினர் என்னிடம் வருவார்கள். அவர்கள் (கவ்ஸர்) தடாகத்தை விட்டும் தடுக்கப் படுவார்கள். அப்போது நான் என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்; என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் எனக் கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்ற அறிவு உமக்கு இல்லை. அவர்கள் வந்த வழியே பின்புறமாகத் திரும்பிச் சென்று விட்டனர் என்று இறைவன் கூறுவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6585, 6586

இதே கருத்து புகாரி 4740, 6526, 6576, 6582, 7049 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதையும், செய்ததையும் மட்டுமே நபித் தோழர்கள் செய்வார்கள். நபிவழியில் இல்லாத எந்த ஒன்றையும் நபித்தோழர்கள் செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் காரணம் கூறித்தான் நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று வாதிட்டு வருகின்றனர்.

அவை அனைத்துமே ஆதாரமற்ற பொய்க் கூற்று என்பது இந்த நபிமொழிகள் மூலம் தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததையும், செய்யாததையும் சில நபித் தோழர்கள் புதிதாக உருவாக்கி, அதன் காரணமாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றால் இந்தக் கடும் எச்சரிக்கையில் இருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்ன?

நபித்தோழர்களின் சொற்களாக இருந்தாலும், செயல்களாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிவழியில் இருந்தும் ஆதாரம் காட்டப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பின்பற்ற வேண்டும்.

நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவை மார்க்க ஆதாரமாகக் கருதக்கூடாது என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.

நபித்தோழர்கள் நம்மை விடப்பல மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது.

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்.
நூல் : புகாரி 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6868, 6869, 7077, 7078, 7080, 7447

ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு ஆளாயினர்.

ஆயிஷா (ரலி) தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித் தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்களும் அவர்களில் இருந்தனர்.

அலி (ரலி) அவர்களின் தலைமையில் அணி வகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்கள் இந்த அணியிலும் இருந்தனர்.
தலைமை தாங்கிய இருவரும் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் தாம்.

அப்படி இருந்தும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி போர் செய்தார்கள். ( அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக )

அவர்களை விமர்சனம் செய்வதற்காக இதனை நாம் எடுத்துக் காட்டவில்லை.

மனிதர்கள் என்ற முறையில் இத்தகைய பாரதூரமான காரியத்தையே அவர்கள் செய்திருக்கும் போது அவர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதற்காகவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

இது போலவே முஆவியா (ரலி) தலைமையிலும், அலி (ரலி) தலைமையிலும் நபித்தோழர்கள் அணி திரண்டு போர் செய்தனர். ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.

கொலை செய்தவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர்.

அதன் பின்னர் நடந்த கர்பலா யுத்தத்திலும் இரண்டு அணியிலும் சில நபித்தோழர்கள் இருந்தனர்.
ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் ஆயுதம் தாங்கி கொலை செய்வது மிகப் பெரிய பாவச்செயல் என்ற நிலையிலும் நபித்தோழர்களிடம் இது நிகழ்ந்துள்ளது.

வஹீயைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பானது இல்லை என்பதை அறிந்திட இது போதுமான சான்றாக அமைந்துள்ளது.

பொதுவாக நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களது சிந்தனையில், தீர்ப்புகளில் நிச்சயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஆதாரங்கள் விளக்குகின்றன.

குறிப்பாகவும் நபித்தோழர்கள் வாழ்வில் அதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

தொடரும் ...
________________________________________________________________________
Jazakallah http://onlinepj.com/books/nabithozarkalum-namathu-nilaiyum/