November 3, 2011

முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல் ?





முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி..
திருக்குர்ஆன் 9:100

மார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும், ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.

நபித்தோழர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டதால் தான் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தை உரிய கவனத்துடன் அணுகாத காரணத்தால் தங்களின் தவறான கொள்கைக்கு இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

பின்பற்றுதல் என்ற சொல், பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருள் தரும் சொல்லாகும்.
குறிப்பிட்ட மனிதனின் பெயரைப் பயன்படுத்தி அவனைப் பின்பற்றி நடங்கள் எனக் கூறப்பட்டால் எல்லா வகையிலும் அவனைப் பின்பற்றுங்கள் எனப் பொருள் வரும்.

ஒரு மனிதனின் பதவி, தகுதியைக் குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால் அந்தத் தகுதியுடன் தொடர்புடைய விஷயங்களில் அவரைப் பின்பற்றுங்கள் என்று பொருள் வரும். காவல் துறை அதிகாரியைப் பின்பற்றுங்கள் என்றோ காவல் துறை அதிகாரியான மூஸாவைப் பின்பற்றுங்கள் என்றோ கூறப்பட்டால் காவல் துறை அதிகாரி என்ற முறையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத் தில் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். வியாபாரம், திருமணம், வணக்கம் போன்றவற்றில் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வராது.

கொடை வள்ளலை அல்லது கொடைவள்ளலான இப்ராஹீமைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்பட்டால் வாரி வழங்கும் தன்மையில் மட்டும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வரும். அவர் என்ன சொன்னாலும் கேளுங்கள்! அவர் என்ன செய்தாலும் அதையே செய்யுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

அல்குர்ஆன் 9:100 வசனத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வசனத்தில் எந்த மனிதரையும் பின்பற்றுமாறு கூறப்படவில்லை. மாறாக ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு தான் இவ்வசனம் கூறுகிறது.

அதாவது ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்களைப் பின்பற்றி சிலர் தாமதமாக ஹிஜ்ரத் செய்தனர் என்பதே இதன் பொருள். உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களைப் பின்பற்றினார்கள் என்றால் உதவுவதில் அவர்கள் வழியில் சென்றார்கள் என்பது தான் பொருள்.
ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்கள் மட்டுமின்றி அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்தவர்களும் இறை திருப்திக்கு உரியவர்கள். இதே போல் ஆரம்ப கால அன்ஸார்கள் எவ்வாறு இறை திருப்திக்கு உரியவர்களோ அது போல் பிற்காலத்தில் உதவிய அன்ஸார்களும் இறை திருப்திக்கு உரியவர்களே என்பதைத் தான் அல்குர்ஆன் 9:100 வசனம் கூறுகிறது.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்றுமாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்த கால வினைச் சொல்லாகக் கூறுகிறான். பின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார்களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் பின்பற்றி நடந்தவர்களைத்தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது எவ்வாறு நபித்தோழர்களைக் குறிக்குமோ அது போல் முஹாஜிர்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் அன்ஸார்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் நபித் தோழர்களைத் தான் குறிக்கும் என்பதையும் கவனிக்கத் தவறி விட்டனர்.

ஹிஜ்ரத் செய்வதிலும், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு உதவு வதிலும் முந்திச் சென்றவர்களைப் பின்பற்றியவர்களைப் புகழ்ந்து பேசும் போது மற்றொரு நிபந்தனையையும் இறைவன் இணைத்துக் கூறுகிறான்.

அழகிய நல்ல முறையில் அவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் என்பது தான் அந்த நிபந்தனை.

முன்னதாக ஹிஜ்ரத் செய்தவர்களிடம் ஹிஜ்ரத்தின் போது தவறான காரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகத் தான் அழகிய முறையில் பின் தொடர்ந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இவ்வசனத்தை விளங்கும் சரியான முறை இதுவேயாகும்.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் மார்க்கம் என்று எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்று பொருள் கொண்டால் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடைய வசனங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். அல்லது நபித் தோழர்களுக்கும் வஹீ வந்தது என்ற நிலை ஏற்படும். இரண்டுமே தவறாகும்.

எனவே நபித்தோழர்களின் சொற்கள், செயல்கள் மார்க்க ஆதாரங்களாகும் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

மாற்றுக் கருத்துடையவர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கம் தவறு என்பதை இது போல் அமைந்த மற்றொரு வசனத்தின் மூலமும் நாம் அறிய முடியும்.

"எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்."
அல்குர்ஆன் 52:21

நம்பிக்கை கொண்ட பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பின்பற்றுவது பற்றி இங்கே கூறப்படுகிறது.

அல்குர்ஆன் 9:100 வசனத்தை மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்கியது போல் இவ்வசனத்தையும்
விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

ஆனால் இவ்வசனத்தை விளங்கும் போது மட்டும் அவர்களின் சிந்தனை சரியாக வேலை செய்கிறது.
சரியான முறையில் நம்பிக்கை கொண்ட பெற்றோரை அது போல் சரியான நம்பிக்கை கொண்டு பிள்ளைகளும் பின்பற்றினால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப் போம் என்பது தான் இதன் பொருள்.

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.

என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்

குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுவது போலவே நபித் தோழர்களின் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோர் பின்வரும் நபிமொழியையும் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர் கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்பதே அந்த ஹதீஸ்.

இந்த ஹதீஸ் பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

முஸ்னத் அப்துபின் ஹுமைத் என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) வாழியாக இதை ஹம்ஸா அன்னஸீபீ என்பவர் அறிவிக்கிறார். இவர் முற்றிலும் பலவீனமானவர்.

தாரகுத்னீ என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர், (நபித் தோழரான ஜாபிர் அல்ல) ஜமீல் பின் ஸைத் இவ்விருவரும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று தாரகுத்னியே கூறுகிறார். இதுவும் பலவீனமானதாகும்.

பஸார் என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர் (ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துர் ரஹீம் பின் ஸைத் என்பார் பெரும் பொய்யர் ஆவார் என்று பஸார் கூறுகிறார். எனவே இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

முஸ்னத் ஷிஹாப் என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி) வழியாக இதை ஜஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமி என்பார் அறிவிக்கிறார். இவர் பெரும் பொய்யராவார்.

ஜாமிவுல் இல்ம், அல்இஹ்காம் ஆகிய நூல்களிலும் ஜாபிர் (ரலி) வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாரி பின் ஹுஸைன் என்பார் வழியாக இது அறிவிக்கப் படுகிறது. இவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னு அப்துல் பர், இப்னு ஹம் ஆகியோர் கூறுகின்றனர்.

இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூ பக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹம் கூறுகிறார்.

இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு கூட நிரூபணமாக வில்லை என்று இப்னுல் கையும், இப்னு ஹஜர் ஆகியோர் கூறுகின்றனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் பொய்யர்களும், யாரென அறியப்படாதவர்களும் உள்ளதால் இது பலவீனமாக அமைவதுடன் இதன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எத்தனையோ விஷயங்களில் நபித்தோழர்கள் நேர் முரணான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அது அறவே சாத்தியமற்ற தாகும். மது பானம் விற்பனை செய்வது ஹலால் என்று ஸமுரா பின் ஜுன்துப் என்ற நபித்தோழர் கூறியிருக்கிறார். நபித் தோழரில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற இந்தச் செய்தியின் அடிப்படையில் மதுபானம் விற்றால் அது சரியாகுமா? நோன்பு வைத்துக் கொண்டு ஐஸ்  கட்டியைச் சாப்பிட்டால் நோன்பு முறியாது என்று அபூ தல்ஹா என்ற நபித்தோழர் கூறியுள்ளாரே! இதைப் பின்பற்ற முடியுமா? மனைவியுடன் கூடிய பின் விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது அவசியம் இல்லை என்று அலி, உஸ்மான், தல்ஹா, அபூ அய்யூப், உபை பின் கஅப் ஆகியோர் கூறியுள்ளனரே! அதைப் பின்பற்ற முடியுமா? என்று அறிஞர் இப்னு ஹம் அவர்கள் கேள்வி எழுப்புகிறார். மேலும் நபித் தோழர்களிடம் ஏற்பட்ட பல தவறான முடிவுகளையும் பட்டியலிடுகிறார்.

மேலும் நபித் தோழர்கள் நட்சத்திரங்கள் போன்றவர்கள். அவர்களில் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்பதில் நட்சத்திரங்கள் அனைத்தும் வழிகாட்டுபவை என்ற கருத்து அடங்கியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சில் உண்மைக்கு மாறானவை இடம் பெறாது.

நட்சத்திரங்களில் மிகச் சில நட்சத்திரங்கள் தாம் இரவில் திசை காட்டக் கூடியதாகவும், நேரம் காட்டக் கூடியதாகவும் உள்ளது. மற்ற நட்சத்திரங்கள் எதற்கும் வழிகாட்டுவது இல்லை.

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வழி காட்டியோ அது போல் ஒவ்வொரு நபித்தோழரும் வழி காட்டுவார்கள் என்ற உவமையும் தவறாக அமைந்துள்ளது.

மிகச் சிறந்த சமுதாயம்

உங்களில் சிறந்தவர்கள் என்காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறை வேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்த வரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித் தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் நபித் தோழர்களைப் பின்பற்றச் சொல்லும் வகையில் ஒரு வாசகமும் இல்லை. இதன் பொருள் என்ன? என்பதை இதன் இறுதியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.

நபித்தோழர்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கருத்து அதனுள் அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணாக இந்த ஹதீஸை நாம் விளங்கினால் நபித்தோழர்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வந்துள்ளது என்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

எனக்குப் பின் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே! என்று அடுத்த ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற கருத்து அந்த நபிமொழியில் உள்ளதா? என்பதை விளக்குவதற்கு முன் இவர்களின் முரண்பாட்டை நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

இவர்களது வாதப்படி நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உமான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் தான். இந்த நபிமொழி இவர்களின் வாதப்படி இந்த நால்வரையும் பின்பற்றுமாறு தான் கூறுகிறது.

ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் இந்த நால்வரைத் தவிர மற்ற நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவதில்லை. எல்லா நபித்தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறிக் கொண்டு அதற்கு ஆதாரமாக இதைக் காட்டுவது அவர்களுக்கே எதிரானதாகும்.

நான்கு கலீபாக்களும் மார்க்கத்தில் எந்த ஒன்றை உருவாக்கினாலும் அதைப் பின்பற்றுங்கள் என்ற கருத்து இதில் உள்ளதா? இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தானா? என்பதைப் பார்ப்போம்.

இந்த நபிமொழி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றிரண்டு அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும் பெரும்பாலான அறிவிப்புகள் நம்பகமானவர்கள் வழியாகவே அறிவிக்கப் பட்டுள்ளன.

திர்மிதி 2600, அபூ தாவூத் 3991, இப்னு மாஜா 42, 43, முனத் அஹ்மத் 16519, 16521, 16522, தாரிமி 95
மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் முழு ஹதீஸையும், அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் காட்டுவதில்லை. பெரும் பகுதியை இருட்டடிப்புச் செய்து விட்டு எனது வழி முறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பதை மட்டும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முழு ஹதீஸையும் இவர்கள் ஆய்வு செய்தால் இவர்களுக்கே இதன் சரியான பொருள் விளங்கிவிடும். அல்லது சிந்திக்கும் திறன் உள்ள மக்கள் இதன் உண்மையான பொருளைக் கண்டு கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொருத்த வரை தமது சொல் எங்கெல்லாம் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு விடுமோ அங்கெல்லாம் சரியான பொருளைக் கண்டு கொள்ளும் வகையிலான வார்த்தை களையும் சேர்த்துக் கூறி விடுவார்கள்.

இஞ்சீலுக்குரியோர் அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.
திருக்குர்ஆன் : 5:47

இவர்கள் மேற்கண்ட நபிமொழியை விளங்கியது போல் இந்த வசனத்தையும் விளங்கினால் என்னவாகும்? கிறித்தவர்கள் இன்றளவும் பைபிளின் அடிப்படையில் வாழலாம் என்று குர்ஆன் அனுமதிப்பதாகப் பொருள்வரும். ஆனால் இவ்வாறு அவர்கள் பொருள் கொள்ள மாட்டார்கள். குர்ஆனில் இன்ஜீல் பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் தொகுத்து அவற்றுக்கு முரணில்லாத வகையில் அதை விளங்க வேண்டும் என்று நிலை மாறுவார்கள்.

இன்ஜீல் கூறுவதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்கள் ஏற்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்று விளக்கம் தருகின்றனர்.

இதே விதமான ஆய்வு மனப்பான்மையை இந்த நபிமொழியிலும் பயன்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?

மார்க்கம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று தெளிவான கட்டளை இருக்கும் போது அதற்கு முரணில்லாத வகையில் மேற்கண்ட ஹதீஸை விளங்கியிருக்க வேண்டாமா?

நாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப் படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங் களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும், வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.
மேலும் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸில் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.
இப்னு மாஜா 43, அஹ்மத் 16519

ஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.

மேலும் அதே ஹதீஸில் இறை நம்பிக்கையாளன் மூக்கணாங்கயிறு போட்ட ஒட்டகம் போன்றவன்.
இழுத்த இழுப்புக்கு கட்டுப்படுபவன் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.
இப்னுமாஜா 43

இந்தச் சொற்றொடர் மார்க்க விஷயத்தைக் குறிக்காது. மார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அதே ஹதீஸில் நான் உங்களைப் பளீரென்ற பாதையில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகப் போகுபவனைத் தவிர வேறு யாரும் வழி கெட மாட்டார்கள் என்பதையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங்கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.

அபூபக்ரையும், உமரையும் பின்பற்றுங்கள்

எனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். இந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை. இந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.

மார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விரு வரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.

அடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத்தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.

ஃபாத்திஹா அத்தியாயம் கூறுவது என்ன?

நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். இது சஹாபாக்களைத் தான் குறிக்கிறது எனவும் இவர்கள் வாதம் செய்கின்றனர்.

இவர்கள் எந்த அளவுக்கு சிந்தனைத்திறன் அற்றவர்களாக உள்ளனர் என்பதை இந்த வாதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்தப் பிரார்த்தனையை நாம் மட்டும் செய்வதில்லை. முதன் முதலில் இதைச் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். இறைவா! எனக்கு சஹாபாக்கள் வழியைக் காட்டு என்ற அர்த்தத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா?

சஹாபாக்களும் கூட இதே பிரார்த்தனையைச் செய்தார்களே! அதன் பொருள் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் இது இறைவனால் அருளப்பட்டது போல் எண்ணிக் கொண்டு இவ்வாறு வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏராளமான நபிமார்கள், நல்லவர்கள் சென்று விட்டனர். அவர்கள் நேர்வழியில் சென்றதால் இறைவனின் அருளையும் பெற்றனர். அவர்கள் எந்த வழியில் சென்றனர் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. எனவே தான் இறைவா! இதற்கு முன்னர் நீயாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழியைக் காட்டு என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கற்றுத் தந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அந்த நேர்வழி எது? என்பதையும் காட்டி விட்டான். இதைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும்.

  • குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டதையும் தவிர வேறு எதுவும் மார்க்க ஆதாரமாக முடியாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப்படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

நபித்தோழர்களின் கடைசி காலத்தில் தான் குர்ஆன் முழுமையாக ஒன்றினைக்கப்பட்டது. ஆனாலும் அச்சிட்டு பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் நிலை இருக்கவில்லை.

மனனம் செய்தவர்களும், ஏடுகளில் எழுதி வைத்துக் கொண்டவர்களுமான மிகச் சில நபித்தோழர்கள் தவிர பெரும்பாலான நபித் தோழர்களுக்கு முழுக் குர்ஆனும் கிடைக்கவில்லை.

  • சந்தேகம் வந்தால் புரட்டிப் பார்க்கும் வகையில் ஏடுகளாகவும் அனைவரிடமும் இருக்கவில்லை.அது போல் நபிமொழியை எடுத்துக் கொண்டால் இதற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது.
  • முழு ஹதீஸ்களையும் எழுதி வைத்த ஒரு நபித்தோழரும் இருக்கவில்லை.
  • முழு ஹதீஸையும் மனனம் செய்த ஒரு நபித்தோழரும் இருக்கவில்லை.
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பத்து சதவீதத்தை மனனம் செய்தவர்களோ எழுதி வைத்துக் கொண்டவர்களோ கூட அன்றைக்கு இருக்க வில்லை.

இந்த நிலையில் நபித் தோழர்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பை பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத்தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.

ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் தமக்கென குர்ஆனை வைத் துள்ளோம்.

ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங்களிலும், மதரஸாக்களிலும் அவை உள்ளன.
சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.

எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்தக் காலத்தில் நபித்தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான பத்வாக்களை வழங்குவார்கள். அவர்கள் காலத்தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத்தவறு செய்பவர்களாக நாம் இருப்போம்.

இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.
புகாரி : 1741, 7074

உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப் பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.
எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.

சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.

இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

ஆழ்கடலில் அலைகள் உள்ளன.
வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம்.
மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம்.
ஃபிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து வைத்துள்ளோம்.
ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.

இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித்தோழர்களால் விளங்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!!
திருக்குர்ஆன் 6:67

எனவே குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

---------------------------------------------------------------------------------------------------------
Jazaakallah http://onlinepj.com/books/nabithozarkalum-namathu-nilaiyum/