March 12, 2012

நீங்கள் பொய்யராக மாறிவிட எளியவழி !


தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?
-----------------------------------------------------------------------------------

நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோ
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )

சகோதரர்களே இன்று இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதாவது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்களை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை காண்போமா?

பழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்
------------------------------------------------------------

பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்! ஆதாரம் இதோ



சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த பழங்களில்  அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா?

மிருகங்களின் வாயிலாக பொய்யை பரப்புதல்
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள்! ஆதாரம் இதோ



சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா? இவைகள் பேசிவிடுமா? பறக்குமா? சிரிக்குமா?

இப்படிப்பட்ட செய்திகள் உங்கள் மெயில் இன்பாக்ஸில் கண்டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்கள். இந்த செயல் யுத, கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும்! ஆதாரம் வேண்டுமா? இதோ



சிந்திக்க சில வழிகள்
-----------------------------

அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வி்ன் பெயர் தக்காளியில் வந்துவிட்டால் உடனே அதில் சிறப்பு என்கிறீர்களே அல்லாஹ்வின் பெயர் மட்டும்தான் தக்காளியில் தென்படுமா? இதோ இவைகளும் தென்படுகின்றன



கிராஃபிக்ஸ், எடிட்டிங் துணையுடன் பொய்களை பரப்புவது!
இன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது அதன் மூலம் மக்களை மூடர்களாக வழிதவற விடப்படுகிறார்கள்.

கிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்துவிட்டது!

ஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டு வீடியோ படமான மசூதியின் பறக்கும் மேற்கூறை ஆகியனவாகும்.


இவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே! இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா? இதோ

கப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்
கப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”

ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.” 
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)

மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா? இதை உணர வேண்டாமா?

இதோ முஸ்லிம்களில் பலவீனர்கள் பரப்பும் கப்ரு வேதனை பற்றிய புகைப்படங்கள்


இந்த புகைப்படம் கப்ரு வேதனைக்கு காட்டப்படும் போது கூறும் புழுகு மூட்டைகள் இதுதான்.

 
* இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம்தோண்டி எடுக்கப்பட்டது.
 
* உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

 
 * சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது. உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.

மேற்கண்ட இந்த கருத்துக்கள் புழுகு மூட்டைகளாக தென்படுகின்றன இதுபற்றி இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்!

தமிழகத்தில் தினமும் செய்திகளில் இடம்பெறும் மிக முக்கியமான தகவல்களில் ஒன்று கீழ்கண்ட செய்திதான்!

கள்ளக்காதல் தொடர்பால் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். காவல்துறையினரின் புலன்விசாரனையில் உண்மை வெளிவந்தது பிணத்தை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது”

இப்படிப்பட்ட பிணங்களை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கும் போதுகூட அந்த பிணங்கள் மேலே கப்ரு வேதனைக்கு காட்டப்படும் அளவுக்கு சின்னாபின்னமாக இருக்காது அப்படியானல் கள்ளக்காதலால் கொலையுண்டவர்களுக்க அதாபு இல்லையா? என்ற கேள்வி எழவில்லையா?

பிர்அவ்னுடைய உடல் படிப்பினையில்லையா?
மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான் அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது! எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா?

கப்ரு வேதனைக்கான ஞானம் மனிதனுக்கு உள்ளதா?
கப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை ஏனெனில் கடலில் தள்ளப்பட்ட பிணங்கள், நெருப்பில் எறிக்கப்படும் பிணங்கள் வேதனைகளை எப்படியாவது எங்கேயாவது அனுபவித்துக்கொண்டு இருக்கலாம் அதற்கான ஞானம் மனிதனுக்கு வந்துவிடுமா?

அல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கை வைக்காதீர்
தக்காளியில், ஆட்டு ரோமத்தில், தர்புசனியில், சுட்ட சப்பாத்தியில் அல்லாஹ்வின் பெயர் போன்ற அரபு எழுத்துக்களை கண்டவுடன் அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்தீரா என்று ஆஹா ஓஹோ என்று பேசுகிறீர்கள் இது பலவீனமான நம்பிக்கை மட்டுமல்லாமல் அல்லாஹ்வை கிண்டலடிக்கும் செயலுமாகும்!

சிந்தித்துப்பாருங்கள்
-----------------------------

மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா? உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா?

அல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா?

எது அதிசயம்
அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா? இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்!

இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்!

தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்!

துபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்!

வானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்!

எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்!

அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!

தக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை  முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்!

ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” 
என நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள் 
நூற்கள்: புஹாரி, முஸ்லிம்


"மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டு போடப்பட்டு விட்டனவா "
திருக்குர்ஆன் 47:24. 

என் இறைவன் அழகானவன்! தூய்மையானவன்! ஆற்றல்மிக்கவன்!
அல்ஹம்துலில்லாஹ்