October 16, 2013

►அரஃபா நோன்பு ஓர் குழப்பமும் தெளிவும்




சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள். சுபுஹ் தொழுத பின் முஜ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மக்ரிப் வரை தங்கிவிட்டு மக்ரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள்.

இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

சவூதியின் பிறைக் கணக்குப்படி 9ஆம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிற 9 ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம்.

இது எப்படி அரஃபா நோன்பாகும்?

எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள்; சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம்.

நோன்பையும், நோன்புப் பெருநாளையும் கூட சவூதியை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், இவர்களின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. எப்படி என்று பார்ப்போம்.

ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.

அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும். அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும்.

அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.

நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா?

ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது. அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.

மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது?

மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் கூறுகின்றார்கள்.

நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா? என்பது தான். தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286) இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா? ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா? உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல. அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட செய்தி அமைந்துள்ளது.

நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். (நான் நோன்பு வைக்கவில்லை என்பதை அறிந்த ஆயிஷா (ரலி) அவர்கள்) இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்'' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே'' என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள்'' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் நூல்: பைஹகீ

மக்காவில் என்றைக்கு அரஃபா நாள் என அறிந்து கொண்டு மதீனாவிலுள்ள மக்கள் நோன்பிருக்கவில்லை. தாங்களாகவே பிறை பார்த்துத் தான் தீர்மானித்திருந்தார்கள் என்பதையும் அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

ஆகவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாள் உலகம் முழுவதும் அரஃபா நாள் என்று கூற முடியாது.

மற்றொரு கோணத்தில் சிந்தித்தால் அரஃபா நாளை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறானது என்பது சந்தேகத்துக்கிடமின்றி விளங்கும்.

ஒரு நாட்டில் துல்ஹஜ் மாதம் முதல் பிறையை ஜனவரி முதல் தேதியில் பார்க்கிறார்கள். அந்த நாளில் சவூதியில் முதல் பிறை தென்படவில்லை. எனவே ஜனவரி 2ஆம் தேதி தான் அவர்களுக்கு முதல் பிறை. இதன் அடிப்படையில் ஜனவரி 10 அன்று சவூதியில் அரஃபா நாள். ஆனால் ஜனவரி முதல் தேதி பிறை பார்த்தவர்களுக்கு ஜனவரி 10 அன்று பெருநாள். அதாவது நோன்பு நோற்பது ஹராமான நாள். இப்போது ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் நோன்பு நோற்காமல் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு நோற்கும் நிலை ஏற்படும். நாமே கண்ணால் பிறை பார்த்து நாட்களை எண்ணி, இது பத்தாவது நாள் - அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை அறிந்திருக்கும் போது, கண்ணால் கண்ட உண்மையை ஏற்பதா? அல்லது ஹாஜிகள் அரஃபாவில் கூடி விட்டதால் நாம் கண்ட உண்மையை நாமே மறுத்து, பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?

இதைச் சிந்தித்தால் இவர்கள் அரஃபா நோன்பை முடிவு செய்யும் விதம் அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும். தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது.

நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மக்ரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மக்ரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.

சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மக்ரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் சூரியன் மறையும் போது மக்ரிப் தொழ முடியாது.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.

எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும். இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்



ஜசாகல்லாஹ் : ஆன்லை பீஜே

"அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (சிந்தனையுடன் செவிசாய்ப்பார்கள்.)" அல்குர்ஆன்-25:73

October 12, 2013

தவறான வாதங்களும், தக்க பதில்களும்






























































October 11, 2013

பிழையாக விளங்கப்படும் ஹதீஸ் கலை விதிகள் ஓர் ஆய்வு


ஹதீஸ் கலை என்பது மிகவும் பெறுமதியான நுணுக்கமான ஒரு கலையாகும்.இஸ்லாத்தின் சட்டம் இயற்றும் ஏக அதிகாரமான மூலாதாரத்தை தீர்மானிகும் அதிகாரம் இந்த விதியின் ஊடாகவே அடையப்படும்.

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை கொச்சைபப்டுத்த பல வழிமுறைகளை பலர் செய்துள்ளனர் என்பதை அறிய ஹதீஸ் கலை மிகப்பெரும் பங்கை ஆற்றியுள்ளது.

இஸ்லாமிய மூலாதாரத்தின் முதல் வகையான அல் குர்ஆனில் எவரும் கை வைக்க முடியாது என்பதோடு கைவைப்பதட்கான வாயல் மூடப்பட்டே உள்ளது.ஆனாலும் இரண்டாவது மூலாதாரமான ஹதீஸ்கள் பெயரில் பல இட்டுகட்டப்பட்ட புனைவுகளும் கப்சாக்களும் புகுத்தப்பட்டன.

இட்டுகட்டியவர்களில் சிலர் அதை ஒப்புக்கொண்ட வரலாறும் உள்ளது.சிலர் தாம் இஸ்லாத்துக்கு நன்மை கருதியே இட்டுகட்டினோம் என்றும் சிலர் இஸ்லாத்தை கொச்சைப்படுத்த இட்டுகட்டினோம் என்று கூறியும் உள்ளனர்.

எனவே ஹதீஸில் இட்டுகட்டபட்டதுபோல் அல் குர்ஆனில் எதுவும் நடக்கவில்லை என்பதால் ஹதீஸ் பெயரால் வரக்கூடிய அணைத்து செய்திகளையும் எந்த வித சந்தேகமும் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையான அல் குர்ஆனின் இடத்தில் வைத்து பார்க்க முடியாது.

ஆனாலும் குர்ஆனில் உள்ள அடிப்படைகளுக்கு நேர்பாடாகவோ அடிப்படைகளுக்கு முரண் இல்லாதவாரோ அல்லது இணைவைப்பை தூண்டுகின்ற மூடநம்பிகையை ஏற்படுத்துகின்ற ஆபாசத்தை வலியுறுத்துகின்ற சட்டங்கள் இல்லாதவாரோ மேலதிக தகவல்களை சட்டங்களை ஹதீஸ் அறிவிப்புகள் கொண்டிருந்தாள் அதை நாம் பின்பற்றுவதில் எந்த பிழையும் இல்லை.

எதிலும் நடுநிலை சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமூகம் இந்த விடயத்திலும் நடுநிலை சமூகமாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்தில் மூன்று வகை கூட்டத்தை நாம் இனம் கண்டுள்ளோம்.

ஒன்று:அல் குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்ற கூட்டம்

இரண்டு: ஹதீஸ் என்று சொல்லப்பட்ட அனைத்தும் ஹதீஸ்கள்தான் என்ற கூட்டம்

மூன்று:அல் குர்ஆனுக்கு முரண் இல்லாத வகையில் சரியான அறிவிப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட கூடிய ஸஹீஹான அறிவிப்புகள் சரியானது என்ற கூட்டம்.

இதில் நாம் முதல் இரண்டு வகை அல்லாத மூன்றாவது வகையான நடுநிலையான இடத்தில் இருந்தே ஹதீஸ்கள் நபி ஸல் அவர்கள் வழியாக வந்த வஹியா இல்லையா என்பதை அறிய முடியும்.

எந்த வித சந்தேகமும் இல்லாத அல் குர்ஆனுடன் ஒப்பிட்டே ஹதீஸ் வழியாக வரக்கூடிய வஹியை இனம் காண வேண்டுமே தவிர சந்தேகமான ஒன்றின் ஊடாக வஹியை அறிய முடியாது என்பதை கூறி நமது ஆய்வை முன்வைக்கிறோம்.

ஒன்று:
======

இமாம் இப்னுல் கைய்யிமின் கூற்றை பிழையாக விளங்கியவர்கள்.

இமாம் இப்னுல் கய்யிம் எழுதிய இஃலாமுள் முஅக்கியீன் என்ற நூலில் கீல்கொண்டவாறு ஒரு வாசகம் கூறியுள்ளார்.அதன் அர்த்தம் என்ன என்று கூட தெரியாமல் உலரியுள்ளனர் இந்த அன்சார் மௌலவியின் வகைறாக்கள்.இப்போது இமாம் இப்னுல் கய்யிம் கூறியதை சரியாக மொழிபெயர்த்து வெறும் மொழிபெயர்ப்பை சரியாக விளங்கினாலே இவர்கள் அரபு மொழிகூட சரியாக புரியாதவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அரபியில் சொல்லப்பட்டதன் மொழிபெயர்ப்பை விளங்கினால்தான் ஆய்வுக்கே முதலில் செல்ல முடியும்.அரபு மொழியில் சொல்லப்பட்டது என்ன என்று அறியாமல் அதை ஆய்வு செய்து மக்களிடம் பரப்பினால் இவர்கள் விளங்கியதுபோல் அரைகுறையாகவே விளங்க வேண்டி வரும்.

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்:
قال إبن القيم معاذ الله أن نرد لرسول الله ص سنة صحيحة غير معلومة النسخ ابداً

மாற்றப்பட்ட சட்டங்களைக் கொண்ட ஹதீஸ்களை தவிர ஸஹீஹான சுன்னா எதையும் நாம் மறுப்பதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!!

ஆதாரம்:நூல் இஃலாமுல் முவக்கிஈன் (2/347)

முதலில் இமாம் இப்னுல் கய்யிம் கூறிய இந்த அரபு வாசகத்தை ஒவ்வொரு சொல்லாக பதிந்து கருத்தையும் பதிவோம்.

معاذ الله அல்லாஹ் பாதுகாப்பானாக.
أن نرد لرسول الله ص நபி ஸல் அவர்களுக்குரிய
سنة صحيحة ஸஹீஹான சுன்னாவை
غير معلومة النسخ ابداً மாற்றப்பட்ட (சட்டத்)தை தவிர

மாற்றப்பட்ட சட்டம் என்றால் என்ன?

ناسخ என்றால் நபி ஸல் அவர்கள் ஒரு சட்டம் சொல்லி இருப்பார்கள் பினனால் அந்த சட்டத்தை வேறொரு சட்டம் மூலம் மாற்றி இருப்பார்கள்.

மாற்றிய மாற்றப்பட்ட இருவகை சட்டமும் ஸஹீஹானது என்பதும் உறுதி.ஆனால் இரண்டும் ஸஹீஹ் என்றாலும் மாற்றப்பட்ட காரணத்தால் மாற்றப்பட்ட சட்டத்தை நாம் நமக்கு சட்டமாக ஏற்றுகொள்ள மாட்டோம்.அதனை மறுத்து விடுவோம்.

அதனால்தான் இப்னுல் கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள் மாற்றப்பட்ட சத்தை தவிர மற்ற ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை இட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக என்று.

இதை இவர்கள் விளங்கியது எப்படி என்றால் மாற்றப்பட்ட சட்டம் தவிர மற்ற எல்லா ஹதீஸ்களும் ஸஹிஹானது தான் என்று மடத்தனமாக விளங்கி உள்ளனர்.

இங்கு இப்னுல் கய்யிம் அவர்கள் மாற்றப்பட்டவை தவிர மற்ற எல்லா ஹதீஸ்களும் ஸஹீஹ் என்று சொல்லவில்லை மாறாக மாற்றப்பட்ட ஹதீஸை தவிர ஸஹீஹான ஹதீஸை மறுக்க கூடாது என்று கூறியுள்ளார்கள்.

இலகுவாக புரியும்படி இதற்கு ஒரு உதாரணம் ஒன்றை கூறுகிறேன் பாருங்கள்.
------------------------------------------------------------------------

"உடையாதது தவிர நல்ல முட்டைகள் அனைத்தும் பெறுமதியானது" என்று ஒருவர் சொன்னால் உடையாத அனைத்தும் நல்ல முட்டைகள் என்று சொல்வோமா?இல்லவே இல்லை நல்லதை தேடி நல்லதை மட்டும் எடுக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

உடையாதது தவிர முட்டைகளில் கூழ் முட்டை இல்லையா? கூழ் முட்டை எது நல்ல முட்டை எது என்று அறிய நமக்கு வாய்ப்பு இருந்தும் உடையாததை தவிர மற்றது எல்லாம் நல்ல முட்டை என்று சொல்லி முட்டைகள் அனைத்தையும் உண்ண முடியுமா?

இந்த சாதாரண விடயத்தை கூட விளங்க முடியாத இஸ்மாயீல் ஸலபி அன்ஸார் தப்லீகி கூட்டம் எதைத்தான் விளங்குமோ தெரியவில்லை.

இப்னுல் கய்யிம் இதை சொல்வதற்கு காரணம் என்ன?

மேலே சொல்லப்பட்ட வாசகம் எதற்காக சொல்லப்பட்டது என்பதை அறிந்தால் இப்னுல் கய்யிமின் கூற்றை சரியாக புரிய முடியும்.

ராபிலாக்களில் சிலர் குர்ஆனுக்கு மேலதிகமாக வரக்கூடிய சட்டங்கள் ஹதீஸில் இருந்தால் அதை மறுக்க கூடியவர்களாக இருந்தனர்.குர்ஆனின் சட்டத்துக்கு மேலதிக சட்டங்கள் ஹதீஸில் இல்லை என்று விளங்கினர் .அதற்கு மறுப்பு கொடுக்கவே இமாம் இப்னுல் கய்யிம் இதை கூறி உள்ளனர்.

குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்வது வேறு குர்ஆனுக்கு மேலதிகமாக உள்ளது என்று சொல்வது வேறு.
நாம் சொல்வது குர்ஆனுக்கு நேரடியாக முரண்படுகிறது என்று கூறியே மறுக்கின்றோம்.

இமாம் இப்னுல் கய்யிம் இமாம் ஷாபி போன்றவர்கள் அல் குர்ஆனுக்கு ஒரு ஹதீஸ் நேர்பாடாக வந்தால்தான் அது ஸஹீஹ் ஆகும் என்ற கருத்தை சொல்லி உள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

இரண்டு:
========

அல் குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண் ஆகும் என்பது பற்றிய ஹதீஸ் விதி உள்ளதா?

இமாம் ஷாபியின் கூற்று:

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

காலி அப்துல் ஜப்பாரின் கூற்று:

"ஸஹாபாக்கள் ஆஹாதான ஹதீஸ்களை விட அல் குர்ஆனை முட்படுத்தினார்கள்"

நூல்:அஹ்காமுல் குர்ஆன் பாகம் : 4 பக்கம் :438

ஈஸா பின் இபானின் கூற்று:

"ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டு பார்ப்பது கடமையாகும்"
நூல்:அஹ்காமுல் குர்ஆன் பாகம் : 4 பக்கம் :438

இமாம் குர்துபியின் கூற்று:

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به. ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

மூன்று :
========

மாற்றப்படாத அனைத்து ஹதீஸ்களும் ஸஹீஹ் ஆகுமா?அப்படி ஒரு விதி உள்ளதா?

இப்னுல் கய்யிம் அவர்கள் மாற்றப்படாத மற்ற அனைத்தும் ஸஹீஹான ஹதீஸ்கள் என்று எங்கே சொல்லி உள்ளார்?

மாற்றப்படாதது தவிர மற்ற ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியாது என்றுதானே இப்னுல் கய்யிம் சொல்லி உள்ளார்.

மாற்றப்படாதது தவிர மற்ற ஹதீஸ்கள் எல்லாம் ஸஹீஹ் என்று சொல்வது வேறு மாற்றப்படாதது தவிர ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியாது என்று சொல்வது வேறு.

மாற்றப்படாததில் சரியானதை பின்பற்ற வேண்டும் என்றுதானே இப்னுல் கய்யிம் கூறி உள்ளார்.மாற்றப்படாதது தவிர மற்ற அனைத்தும் ஸஹீஹ் என்று அவர் கூறவே இல்லை.

ஸஹீஹ் ஆனதை பின்பற்ற சொல்லி உள்ளார்.ஸஹீஹானதை எது என்று அறியும் வழி முறை ஹதீஸ் விதிகள் ஊடாக அறிய முடியும்.சிலர் பார்வையில் சரியானது சிலர் பார்வையில் பிழையாக உள்ளதும் உள்ளது.

எனவே நாம் ஹதீஸ் விதிகளை கொண்டு ஆய்வு செய்து இப்னுல் கய்யிம் சொல்வதுபோவும் ஸஹீஹானதை அறிய முடியும்.

இந்த வித்தியாசம் தெரியாமல் கத்துகிறது கதருகிறது இந்த கூட்டம்.

நான்கு:
======

ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியுமா?

இமாம் இப்னுல் கய்யிமின் அந்த கூற்று எந்த வகையிலும் நமக்கு எதிராக அமையவில்லை மாறாக அந்த கூற்று நமத்து கருத்துக்கு ஒத்தே வருகிறது.

நாமும் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.எது ஸஹீஹ் ஆனது எது ஸஹீஹ் இல்லை என்பதில்தான் இவர்கள் நம்முடன் முரண்படுகின்றனர்.

மாற்றப்பட்ட ஸஹீஹானதை தவிர ஏனைய ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்க முடியாது என்பதில் இமாம் இப்னுல் கய்யிம் சொல்வதுபோல் நாம் உறுதியாக உள்ளோம்.

இனி..

ஐந்து:
======

அல் குர்ஆனுக்கு முரண் என்ற வகையில் அல்லாமல் வேறு வகையில் ஹதீஸை மறுக்க முடியுமா?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல நாம் "ஷாத்"என்ற ஹதீஸ் வகை பிரிவுக்கு செல்ல வேண்டும்.

"ஷாத்" என்றால் என்ன?

"ஷாத்" என்றால் பல அறிவிப்பாளருக்கு ஒரு அறிவிப்பாளர் மாற்றமாக அறிவிப்பது.

அல்லது

"பலமான அறிவிப்பாளருக்கு அதை விட பலம் குறைந்த அறிவிப்பாளர் முரணாக அறிவிப்பது"

இந்த அடிப்படையில் நோக்கினால் கூட ஹதீஸ்கள் என்பது அல் குர்ஆனின் அறிவிப்பைவிட குறைந்த பலம் உள்ளவையே.

அல் குர்ஆனின் அறிவிப்பு என்பது ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்துக்கு அறிவித்து இன்றுவரை அறிவிப்பாளர் தொடர் சமுதாயமாகவே இருக்கும்.அல் குர்ஆனின் பெயரின் எந்த ஹதீஸ் துறை அறிஞர்களும் சந்தேகமோ பலயீனம் என்றோ எதையும் மறுத்தது இல்லை ஆனால் ஹதீஸ்கள் விடயத்தில் அறிஞர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை புகாரியிலும் முஸ்லிமிலும் பலயீனமான ஹதீஸ்கள் உள்ளதாக கூறியே வருகின்றனர்.

சில அறிஞர்கள் ஹதீஸை ஸஹீஹ் என்பார்கள் சில அறிஞர்கள் அதே ஹதீஸை பலயீனம் என்று சொல்வார்கள்.இந்த கதை அன்று தொடக்கம் இன்றுவரை தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

உமர் ரலி அவர்கள் குர்ஆணை ஆதாரமாக கொண்டு பாத்திமா பின்த் கைஸ் என்ற ஸஹாபி பென்னை சந்தேகத்துக்கு உட்படுத்தினார்கள்.அல் குர்ஆன் இல்லை என்றால் பாத்திமா பின்த் கைசை எப்படி சந்தேகத்துக்குரிய அறிவிப்பாளராக ஆக்க முடியும் ?இதை உமர் ரலி அவர்கள் சொன்னது வெறும் கற்பனையிலா?இல்லை மிகவும் பலமான குர்ஆணை ஆதாரமாக நிறுத்தியா?

ஆறு:
=====

புகாரி முஸ்லிம் ஹதீஸ்கள் அனைத்தும் ஸஹீஹானதா?

அதே போன்று இமாம் புகாரி அவர்கள் முஸ்லிமில் வரும் செய்தியை மறுத்துள்ளார்கள்.இதுவும் அல் குர்ஆனுடன் ஒப்பிட்டே மறுத்துள்ளார்கள்.முஸ்லிமில் வந்தது எல்லாம் அல் குர்குர்ஆன் போன்று வஹிதான் என்றால் எதற்கு இமாம் முஸ்லிம் அவர்கள் ஹதீஸ் என்று பதிந்ததை இமாம் புகாரி மறுக்க வேண்டும்?

புகாரி முஸ்லிம் பற்றி இமாம் அல்பானியின் கூற்று

"சில காழ்ப்புணர்வு கொண்டவர்கள் புகாரி முஸ்லிமில் கிரந்தங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதோடு அவற்றில் உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் சரியானதுதான் என்ற ஜாஹிலிய பண்பில் உள்ளனர்".

ஆதாரம்:ஸில் ஸிளதுள் அஹாதீத் அல் ஸஹீஹா(2540)

நான் ஆய்வு செய்கையிலே புகாரி முஸ்லிமில் உள்ள ஹதீஸ்களில் சில பலயீனமான ஹதீஸ்கள் உள்ளது என்பது தெளிவாகிறது.நான் சொல்வதில் யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டால் "பத்ஹுள் பாரியை நாடுங்கள்" அதில் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் அதிகம் அதிகமான விமர்சனங்களை முன்வைத்துள்ளதை காண முடியும்.

ஆதாரம்: பத்வா அல்பானி ( 526)

புகாரியில் உள்ள ஹதீஸை முஸ்லிமே மறுத்துள்ளார்கள்.

இக்ரிமா என்ற அறிவிப்பாளர் வழியாக இமாம் புகாரி அறிவித்த ஹதீஸ்களை இமாம் முஸ்லிம் அவர்கள் மறுத்துள்ளார்கள்.இக்ரிமாவை இமாம் முஸ்லிம் அவர்கள் பலஈனமாக காண்கிறார்கள் ஆனால் இமாம் புகாரி இக்ரிமாவை பலமாக கண்டு அவர் வழியாக அறிவிக்கின்றார்கள்.

இங்கு புகாரி இமாம் ஏற்றுகொள்வதை இமாம் முஸ்லிம் அவர்கள் மறுக்கின்றறாக்கள்.

ஏழு
=====

புகாரி முஸ்லிமில் உள்ள சில ஹதீஸ்களை மறுத்த அறிஞர்கள் பட்டியல்.

புகாரி
முஸ்லிம்
அபூ சூர்ஆ
அபூ தாவூத்
அபூ ஹாதிம்
திர்மிதி
நசாயி
தார குத்னி
பைஹகி
இப்னு தைமியா
இப்னு ஹஜர்
அல்பானி
ஸாலிஹ் உதைமின்

முடிவுவுரை
=========

புகாரி முஸ்லிம் போன்ற நூல்கள் அல் குர்ஆன் போன்று தவறுக்கு அப்பால் பட்டது அல்ல என்பதை அதை எழுதிய இமாம்களான புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் துறை அறிஞர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

அத்தோடு எல்லோரும் ஏற்றுகொள்ளும் விதியான பலமானவர் பலம் குறைந்தவருக்கு மாற்றமாக அறிவிப்பது அல்லது பலருக்கு சிலர் முரண்பட்டு அறிவிப்பது என்ற ஹதீஸ் கலை நிபந்தனை ஊடாக சில முக்கிய குறிப்புகள் உள்ளன.

ஹதீஸ் கிரந்தங்களில் வரும் ஹதீஸ்களை விட அல் குர்ஆன் மிகவும் பலமான அறிவிப்பில் வந்துள்ளது.

ஹதீஸ்களை அறிவித்தவர்களைவிட அல்குர்ஆனை அறிவித்தவர்கள் அதிகமானவர்கள்

ஹதீஸ கலை அறிஞர்கள் எவருமே ஹதீஸ் விடயத்தில் செய்ததுபோல் அல்குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுத்த வரலாறு இல்லை.

ஹதீஸ்கள் இட்டுகட்டபட்டது போன்று அல் குர்ஆனின் பெயரில் இட்டுகட்டவும் முடியாது இட்டுக்கட்டப்படவும் இல்லை.

ஹதீஸை அறிவிப்பதில் நினைவு சக்தி குறைவு ஏற்படுவதுபோல் அல் குர்ஆனை அறிவிப்பதில் நினைவு சக்தி குறைகள் ஏற்படவில்லை

சில ஹதீஸ்களை சில இமாம்கள் பலயீனம் என்று சொல்லி உள்ளனர் அதே ஹதீஸ்களை சில இமாம்கள் ஸஹீஹ் என்று சொல்லி உள்ளனர் இவ்வாறு குர்ஆனுக்கு சொல்ல முடியாது.

மாற்றப்பட்ட ஹதீஸ்கள் தவிர ஸஹீஹான ஹதீஸை மறுக்க கூடாது என்றால் ஸஹீஹான ஹதீஸ்களில் மாற்றப்பட்டதை தவிர மற்ற ஸஹீஹான ஹதீஸ்கள் மறுக்கப்பட கூடாது என்பதுவே அல்லாமல் மாற்றப்பட்டது தவிர மற்ற எல்லாம் ஸஹீஹ் என்பது அல்ல.

எனவே எந்த ஹதீஸாக இருந்தாலும் அது எந்த ஹதீஸ் கிரந்தத்தில் இருந்தாலும் எந்த வித சந்தேகத்துக்கும் இடம் இல்லாத எந்த குறையும் இல்லாத யாராலும் மாற்ற முடியாத இட்டுகட்ட முடியாத அல் குர்ஆனுக்கு அது முரண்படுமாயின் அதை நாம் அல்குர்ஆணை விட முற்படுத்த முடியாது.

அல் குர்ஆனை மறுத்தவர்களை நாம் காபிர்கள் என்று சொல்வதுபோல் புகாரி முஸ்லிமில் போன்ற ஹதீஸ் நூல்களில் உள்ள சில ஹதீஸ்களை மறுத்தவர்கள் அனைவரையும் வழிகேடர்கள் காபிர்கள் என்று இஸ்மாஈல் அன்சார் தப்லீகி போன்ற குழப்பி கும்பல் சொல்ல தயாரா? என்ற சவாலுடன் இந்த பதிவை முடித்து கொள்கிறேன்.

இது பற்றிய இன்னும் ஆழமாக எழுத வேண்டி இருந்தாலும் இப்போது புதிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று சில நண்பர்கள் எமக்கு சொன்னதன் அதன் நண்மை கருதி சில தகவல்களை இங்கு நாம் பதியவில்லை.

---நன்றி---
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)

October 7, 2013

குர்பானியின் சட்டங்கள் :



► யார்மீது கடமை?

இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக ஒரு கடமையைச் செய்ய வலியுறுத்தப்பட்டால் அதைச் செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.

► முக்கியமான சுன்னத்

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளது.

ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தியாகப் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்து விட்டிருப்பதைக் கண்டபோது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) நூல் : புகாரி (5500)

திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் திருக்குர்ஆனும் இதை வலியுறுத்தியுள்ளது.

(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன் 108: 1,2)

► கடன் வாங்கி குர்பானி

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் இதை நிறைவேற்றுவதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்குச் சான்றாக கடன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறக்கூடிய பைஹகீயில் இடம் பெறும் செய்தி ஆதரமற்றதாகும்.

கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர்மீது கட்டாயம் இல்லை. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது. கடன் இருக்கும் போதோ அல்லது கடன் வாங்கியோ அவர் குர்பானி கொடுப்பது கூடாது.

கடனைத் தவிர அனைத்து பாவமும் ஷஹீதிற்கு மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : முஸ்லிம் (3832)

எனவே வசதியற்றவர்கள் கடன்பட்டு குர்பானி கொடுக்கத் தேவையில்லை. வசதியில்லாததால் குர்பானி கொடுக்காதவரை அல்லாஹ் எந்த கேள்வியும் இது தொடர்பாக கேட்கமாட்டான். குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.

"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாயீ (4285)

► பிராணிகளின் தன்மைகள்

குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப்(ரலி) நூற்கள்: திர்மிதீ(1417), அபூதாவூத்(2420), நஸாயீ(4294) , இப்னுமாஜா (3135),அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள். அறிவிப்பாளர் : அலீ (ரலி) நூல் : நஸாயீ (4301)

தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும்.இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை.

பெரும்பாலான இடங்களில் அல்லாஹ்விற்காக வாங்கப்பட்ட பிராணிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி போட்டிவைக்கிறார்கள். இதனால் அப்பிராணிகளின் கொம்புகள் உடைந்துவிடுகின்றது. அவற்றுக்கு பலத்த காயமும் ஏற்படுகிறது.

இக்கேளிக்கையில் ஈடுபடுபவர் உயிரினங்களை கொடுமைப்படுத்திய குற்றத்தின் கீழ் சேர்க்கப்படுவார். பிராணியை அறுக்கும்போது அதற்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளும்படி வலியுறுத்தும் நம்மார்க்கம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்தரவதையை ஒருபோதும் ஏற்காது.

► நபிகளார் கொடுத்த குர்பானி ஆடு

நபி (ஸல்) அவர்கள் "கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூற்கள்: முஸ்லிம் (3977)

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும்.

► விலை உயர்ந்த பிராணி

குர்பானி பிராணிகள் வாங்கும் போது நல்ல தரமான உயர் ரகமானதை வாங்குவது நன்மையை அதிகரித்துத் தரும். அல்லாஹ் கூறியுள்ளான் என்பதற்காக நல்ல இறைச்சியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அவர்கள் உயர்தரமான இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கூடுதலான நன்மைகள் உண்டு. இதனைப் பின் வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

"நீ தூய்மையானதும், "தன்யீம்' என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு இந்த இடத்தில் என்னை சந்தி! (இப்படிச் செய்வதினால்) உன்னுடைய செலவுக்கும், உன் கஷ்டத்திற்கும் ஏற்ப கூலி கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி(1787)

சிறந்த அமல் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வை நம்புவதும் அவனுடைய பாதையில் போர் புரிவதுமாகும் என்று கூறினார்கள். அடிமை விடுதலை செய்வதில் சிறந்தது எது? என்று கேட்டேன். எஜமானால் விருப்பமுள்ள அதிக விலையுள்ள அடிமை (யை விடுதலை செய்வது) என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல் : புகாரி (2518)

► பிராணியின் வயது

"இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம்

பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.

முஸின்னா வைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் : ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகள் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால்தான் வயது விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முஸின்னா என்பது ஆட்டிலும் மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலியமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.

► பாலூட்டும் பிராணி

குட்டியை ஈன்று பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும் பாலுக்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனித்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.

அவர் (ஒரு அன்சாரித் தோழர்) இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : (4143)

► கூட்டுக் குர்பானி

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம். ஆடு வாங்கி குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த வகையில் சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுத்து குர்பானி கொடுத்த நன்மையை அடையலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஒர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூற்கள்: முஸ்லிம்(2540)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜ§ப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி (1421), நஸாயீ (4316),இப்னு மாஜா (3122)

மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரமாக உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

► அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிராணியை அறுக்கும் முன் கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது.

"எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) நூற்கள்: முஸ்லிம் (3955), திர்மிதி(1329) நஸாயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)

ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதை கல்லில் கூர்மையாக்கு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் (3977)

► குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா?

குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானவையாக உள்ளது.

ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி பிராணியின் முதலாவது சொட்டு விழும்போதே உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானதுதான் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல் : பைஹகீ (19161,19162)

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அமீர் பின் காலித் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகையால் குடும்பத்தினர் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் குடும்பத்தினர்கள் அறுப்பதை பார்க்க விரும்பி அவர்களாகவே முன்வந்தால் அதில் எந்தக் குற்றமும் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று பார்த்துள்ளார்கள்.

குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்கித்தான் அறுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூஹர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

இது தொடர்பாக பைஹகியில் இடம் பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே எந்த திசை அறுப்பவருக்கு தோதுவாக உள்ளதோ அந்த திசையில் அறுக்கலாம்.

சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர். இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும். மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத, மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட "பித்அத்'தான நடைமுறைகளாகும். இவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

► குர்பானி கொடுக்கும் போது கூற வேண்டியவை

பிராணியை அறுக்கும் போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இதுபற்றி அபூதாவூத், பைஹகீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் ஒரு பலகீனமான ஹதீஸ் இடம்பெறுகிறது. ஆகையால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகளையே கூறவேண்டும்.

அறுக்கும்போது "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும்.

"நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூற்கள்: புகாரி(5565),

முஸ்லிம் (3976) முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று கூறியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

► தானே அறுப்பது சிறந்தது

பெருநாள் தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலில் பணிபுரியும் ஹஜ்ரத்மார்களுக்கும் மோதினாருக்கும் கடுமையான கிராக்கி வந்துவிடும். ஒவ்வொருவரும் தங்களுடைய குர்பானி பிராணியை அறுப்பதற்காக அவர்களையே நாடிஇருப்பார்கள். இவர்கள் அறுத்தாலே குர்பானி ஏற்கப்படும் என்று பலர் இன்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய கரத்தால் அறுத்துள்ளதால் குர்பானி கொடுப்பவர் தானே அறுப்பதே சிறந்ததாகும். அறுக்கத் தெரியாதவர் "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று கூறி அறுக்கத் தெரிந்த எந்த ஒரு முஸ்லிமைக் கொண்டும் அறுக்கலாம்.

► பெண்கள் அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக்(ரலி), நூல்: புகாரி(5504)

► எப்போது அறுக்க வேண்டும்?

குர்பனிப் பிராணியை "உலுஹியா, குர்பானி'' என்று பிரித்து "உலுஹியா'' என்றால் தொழுகைக்கு முன்பு அறுக்கலாம் என்றும், "குர்பானி'' என்றால் தொழுகைக்குப் பின்புதான் அறுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரித்துச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உலுஹியா என்பதும், குர்பானி என்பதும் ஒன்றுதான்.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர் கொடுத்தால் அது குர்பானியாக கணக்கில் கொள்ளப்படாது.

அறுப்பதற்குரிய ஆரம்ப நேரமாக தொழுகையை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்து விட்டதால் அதையே துவங்குவதற்குரிய நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் இதை அறியாமல் ஃபஜர் ஆரம்பித்த உடனே அறுத்து விடுகிறார்கள். தெரியாமல் தொழுகைக்கு முன் அறுத்து விட்டால் தொழுத பின் மற்றொரு பிராணியை அறுக்க வேண்டும்.

"இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதி யில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3965) அறிவிப்பவர் : பரா(ரலி)

எத்தனை நாட்கள் கொடுக்கலாம்? ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்குப் பிறகுள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.

"தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல் : தாரகுத்னீ (பாகம் : 4,பக்கம் : 284)

► எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

நூற்கள்: புகாரி(5565), முஸ்லிம் (3976) அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில் 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்துள்ளார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அறுக்கும் படி கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளை சமைத்து சாப்பிட்டதாக இடம் பெற்றுள்ளது.

நூல் : முஸ்லிம் (2137)

► பங்கிடுதல்

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், அடுத்தது ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

"அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

(அல்குர்ஆன் 22 : 36)

இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல் : புகாரி (1717) அறிவிப்பாளர் : அலீ (ரலி) 3643

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜ§ப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர்ப்பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் (அன்று) வந்திருந்த பலகீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (3986)

குர்பானி மாமிசத்தை காஃபிர்களுக்கு கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும்தான் கூறுகிறான். ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் காஃபிரான ஏழைக்கும் வழங்குவதில் எந்த குற்றமும் இல்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரமப்படக்கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக அதிகம் இருந்தால் காஃபிர்களுக்கும் வழங்கலாம்.

► தோல்

குர்பானி பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

"ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : அலீ(ரலி) நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2535)

தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாக கொடுப்பதை தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்றுவிடும்போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

► ஹஜ்ஜு சென்றிருப்பவர்கள் உள்ளூரில் குர்பானி கொடுக்கவேண்டுமா?

ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நபி(ஸல்) அவர்கள் அவர்களுடன் சென்ற மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.

► இறந்துவிட்டவர்கள் சார்பாக குர்பானி

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாகும்.இதில் அபுல்ஹஸனா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். மேலும் இதில் ஷரீக் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். இத்துடன் ஆதாரப்பூர்வமான பின்வரும் ஹதீசுடன் இக்கருத்து மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பயன்தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (3358)

"நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா

மேற்கண்ட ஹதீஸ் நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கும் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கட்டளையிடவும் இல்லை.

_________________________
வெளியீடு : தீன்குலப் பெண்மணி இதழ்
அப்பாஸ் அலீ, மதுரை