August 27, 2012

நபித்தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் எனும் நபிமொழியின் விளக்கம் என்ன ? ___________


1998 பிப்ரவரி மாதம் அல்ஜன்னத் இதழில் சகோ பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை - திருத்தங்களுடன்

இன்று தமிழகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத பல ஹதீஸ்களை அவர்கள் சொன்னதாக மவ்லவிகளில் பலர் ஜும்ஆ மேடைகளிலும் பொதுக் கூட்டங்களிலும் சொல்லி இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி வருவதைக் காண்கிறோம்.

இவ்வாறு தவறாகப் பரப்பப்பட்டவரும் ஹதீஸ்களை தக்க சான்றுகளோடு இத்தொடரில் சமுதாய மக்களுக்குத் தெளிவு படுத்துவோம். இன்ஷா அல்லாஹ். நாங்கள் சொல்வது சரியில்லை எனக் காண்கின்ற ஆலிம்கள் தங்கள் வாதத்தை தெளிவான ஆதாரங்களோடு எழுதுவார்களானால் அதை எங்கள் பத்திரிக்கையில் வெளியிடுவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஸஹாபாக்களின் தனிச் சிறப்பை எவருமே மறுக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு வாழ்ந்து அவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர்களின் மதிப்பை இந்த உம்மத்தில் எந்த இமாம்களும் அவ்லியாக்களும் அடைய முடியாது. காலமெல்லாம் இறை வழிபாட்டில் செலவு செய்தாலும் ஒரு சஹாபியின் அந்தஸ்தை எவரும் பெறவே முடியாது. இது ஷியாக்களைத் தவிர இந்த உம்மத்துக்கள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக் கொண்ட பேருண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இந்த உண்மையை நமக்குத் தெளிவாக்குகின்றன.

எனது தோழர்களை ஏசாதீர்கள். உங்களில் எவரும் உஹது மலை அளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அந்த ஸஹாபாக்கள் இரு கையளவு செய்த தர்மத்துக்கோ அல்லது அதில் பாதியளவு செய்த தர்மத்துக்கோ ஈடாக முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3673

நபித் தோழர்களின் தனிச் சிறப்பை எடுத்துரைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த நற்சான்று ஒன்றே போதுமானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் எவரும் அவர்களின் நிலையை எட்டவே முடியாது என்ற தகுதியை விட வேறு எந்தத் தகுதி உயர்ந்ததாக இருக்க முடியும்?

நபித் தோழர்களின் தூய்மையான எண்ணமும், மிகச் சிரமமான காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் நின்று செய்த தியாகங்களும் மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்தும் வெற்றி பெறுவோமா என்பது தெரியாத நிலையில் போர் முனைக்குச் சென்ற நெஞ்சுறுதியும் சுட்டெரிக்கும் பாலை மணலில் பொசுக்கப்பட்ட போதும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட போதும் இரு கூராகப் பிளக்கப்பட்ட போதும் ஈமானில் அவர்களுக்கு இருந்த பிடிப்பும் இன்று நினைத்தாலும் நம் கண்களைக் கலங்க வைத்து விடுகின்றது. (ரலியல்லாஹு அன்ஹும் வரழூ அன்ஹு

இவ்வளவு சிறப்பு மிக்க நிலையை எவர் தான் அடைய முடியும்? ஆனால் இன்று சிலர் ஸஹாபாக்களின் சிறப்பை எடுத்துச் சொல்கிறோம் என்று கூறிக் கொண்டு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களின் மூலம் ஸஹாபாக்களின் சிறப்பை நிலை நாட்டத் துவங்கியுள்ளனர். அவ்வகையில் மேடைகள் தோறும் முழங்கப்படுகின்ற ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.

أصحابي كالنجوم فبأيهم إقتديتم إهتديتم

அஸ்ஹாபீ கன்னுஜ‚மி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்

பொருள் : என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள் அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்.

இப்படி ஒரு ஹதீஸை பல மவ்லவிகள் கூறுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஹதீஸ் ஒரு சில நூல்களில் இடம் பெற்றிருந்தாலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளன. இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற கருத்தும் குர்ஆன் ஹதீஸ் போதனைக்களுக்கு முரண்படுகின்றது. முதலில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்போம்.

இந்த ஹதீஸை இமாம் இப்னு ஹஸ்மு ரஹ் அவர்கள் தமது அல்இஹ்காம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதைப் பதிவு செய்த அதே இமாம் அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி இது ஏற்கத் தகாத ஹதீஸாகும் என்று குறிப்பிடுகிறார்கள்.

وأما الرواية: أصحابي كالنجوم فرواية ساقطة، وهذا حديث حدثنيه أبو العباس أحمد بن عمر بن أنس العذري قال: أنا أبو ذر عبد بن أحمد بن محمد الهروي الانصاري قال: أنا علي بن عمر بن أحمد الدارقطني، ثنا القاضي أحمد كامل بن كامل خلف، ثنا عبد الله بن روح، ثنا سلام بن سليمان، ثنا الحارث بن غصين، عن الاعمش، عن أبي سفيان، عن جابر قال: قال رسول الله (ص): أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم.

قال أبو محمد: أبو سفيان ضعيف، والحارث بن غصين هذا هو أبو وهب الثقفي، وسلام بن سليمان يروي الاحاديث الموضوعة، وهذا منها بلا شك، فهذا رواية ساقطة من طريق ضعيف إسنادها.

الأحكام لابن حزم [6 /810]

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய அபூ சுஃப்யான் என்பார் பலவீனமானவர். ஸலாம் இப்னு ஸுலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். இந்த ஹதீஸும் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும் என்று இமாம் இப்னு ஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

(அல்இஹ்காம் பாகம் 6, பக்கம்:28

இந்த ஹதீஸை இமாம் இப்னு அல்தில்பர் அவர்களும் தமது ஜாமிவுல் இல்ம் என்ற நூலில் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்து விட்டு அதன் அடியில்

1080 - حدثنا محمد بن إبراهيم بن سعيد ، قراءة مني عليه أن محمد بن أحمد بن يحيى ، حدثهم قال : نا أبو الحسن محمد بن أيوب الرقي قال : قال لنا أبو بكر أحمد بن عمرو بن عبد الخالق ، سألتم عما يروى عن النبي صلى الله عليه وسلم مما في أيدي العامة يروونه عن النبي صلى الله عليه وسلم أنه قال : « إنما مثل أصحابي كمثل النجوم » أو « أصحابي كالنجوم فأيها اقتدوا اهتدوا » ، هذا الكلام لا يصح عن النبي صلى الله عليه رواه عبد الرحيم بن زيد العمي ، عن أبيه ، عن سعيد بن المسيب ، عن ابن عمر ، عن النبي صلى الله عليه وسلم وربما رواه عبد الرحيم عن أبيه ، عن ابن عمر ، وأسقط سعيد بن المسيب بينهما وإنما أتى ضعف هذا الحديث من قبل عبد الرحيم بن زيد ؛ لأن أهل العلم قد سكتوا عن الرواية لحديثه ، والكلام أيضا منكر عن النبي صلى الله عليه وسلم

இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இடம் பெறுகின்ற அப்துர்ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ பலவீனமானவர். இது நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் என்றும் குறிப்பிடுகிறார்கள். பஸ்ஸார் என்ற நூலிலும் மேற்கண்ட அப்துர்ராஹீம் அல் அம்மீ வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதுவும் பலவீனமானதாகும்.

(ஜாமிவுல் இல்ம், பாகம் 2.பக்கம் 91)

حديث أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم عبد بن حميد في مسنده من طريق حمزة النصيبي عن نافع عن بن عمر وحمزة ضعيف جدا

முஸ்னத் அப்த் பின் ஹுமைத் எனும் நூலிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் ஹம்ஸா அன்னஸீபீ என்பார் மிகவும் பலவீனமானவர்.

தாரகுத்னீயிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ورواه الدارقطني في غرائب مالك من طريق جميل بن زيد عن مالك عن جعفر بن محمد عن أبيه عن جابر وجميل لا يعرف

இதன் அறிவிப்பாளர் ஜமீல் பின் ஸைத் யாரென அறியப்படாதவர்.

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம்கள் இது இட்டுக்கட்டப்பட்டது என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்கள். இதன் பின்னரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இதை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார்களே அதுதான் வியப்பாக உள்ளது.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள் என இமாம் இப்னு குதாமா தமது அல்முன்தகப் என்ற நூலில் குறப்பிட்டுள்ளார்கள்.

அதே கருத்தை உணர்த்தக் கூடிய வேறு வார்த்தைகளை கொண்ட ஹதீஸ்கள் பல உள்ளன. அவை அனைத்தையும் இட்டுக்கட்டப்பட்டவையாகவே அமைந்துள்ளன. இனி கருத்துக்கள் அடிப்படையில் இந்த ஹதீஸை ஆராய்வோம்.

# முதல் தவறு

நபி ஸல் அவர்கள் மிகவும் இலக்கியத் தரத்துடன் பேசக் கூடியவர்கள். அவர்களின் ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் அவர்கள் வார்த்தைகளைக் கையாளும் விதமும் உவமை நயமும் பண்டிதர்களையும் திகைக்கச் செய்து விடுமளவுக்கு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த ஹதீஸில் காட்டப்பட்டுள்ள உவமைகளை நோக்கும் போது நபி ஸல் அவர்கள் நிச்சயம் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதை உணர முடியும்.

எனது தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீஙகள் நேர்வழி அடைவீர்கள் என்ற இந்த வாசகத்தில் நட்சத்திரங்களுடன் ஸஹாபாக்கள் ஒப்பிடப்படுகிறார்கள்.

அதாவது நட்சத்திரங்களில் எதைப் பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்து கொள்வது போல் ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழியடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளது. இந்த உவமை எவ்விதத்திலும் சரியானதன்று. ஏனெனில் நட்சத்திரங்களில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் தான் திசை காட்ட முடியும் அனைத்து நட்சத்திரங்களும் திசை காட்டுவதில்லை. எந்த நட்சத்திரத்தைப் பார்த்தாலும் நமக்கு திசைகளை அறிய முடிவதில்லை.

நட்சத்திரங்களில் எதன் மூலமாகவும் திசைகளை அறிவது போல் ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றியும் நேர்வழி அடையலாம் என்று கூறப்படுவதில் உவமை பொருத்தமாகப் படவில்லை.

அறிவுக்குப் பொருத்தமற்ற இது போன்ற தவறான உவமைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் கூறமாட்டார்கள். அவர்களின் பல பொன்மொழிகளை நாம் பார்க்கும் போது இது போன்ற தவறான உவமைகள் காணப்படவே இல்லை. இதன் காரணமாகவும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டபட்டது என்பதை உணரமுடிகிறது.

# இரண்டாவது தவறு

நபித்தோழர்களில் பல்வேறு தரத்தினர் இருந்துள்ளனர். சொல் முறைகளிலும் சிந்தனைகளிலும் அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வு இருந்துள்ளது. அவர்களின் அந்தஸ்தும் சமமானது அல்ல. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அவர்களிலும் சொர்க்கத்தின் நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்த பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்த நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது. அந்த இருவரில் கூட அபூபக்ரு (ரலி) அவர்கள் மிகமிக மேலான தகுதியைப் பெற்றவர்களாவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின்) வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள். எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையே நன்கு தெரிந்தவன். (57:10)

நபித்தோழர்களில் இவ்வளவு வேறுபாடு இருக்கும் போது அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று சொல்லி அனைவரையும் சமநிலையில் வைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா?

நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது எந்தக் கருத்தைப் பின்பற்றினாலும் நேர்வழி பெற முடியுமா? கருத்து வேறுபாடு தோன்றும் போது குர்ஆன் ஹதீஸ் இவ்விரண்டிலும் உரசிப் பார்க்கும்படி தானே அல்லாஹ் நமக்குப் போதனை செய்கிறான். எந்தக் கருத்தை வேண்டுமானாலும் பின்பற்றி பலவழி செல்லுங்கள் என்று அல்லாஹ் நமக்கு அனுமதிக்கவில்லையே.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

அல்குர்ஆன்(4:59)

இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று எப்படி நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்க முடியும்.

இந்த இடத்தில் இமாம் இப்னு ஹஸ்மு அவர்கள் சில கேள்விகளைத் தொகுத்து இந்த ஹதீஸ் பொய்யென நிலை நாட்டுகிறார்கள் . அதை அப்படியே காண்போம்.

அல்லாஹ் தன் நபியைப் பற்றி அந்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இவர்தன் மனோ இச்சைப்படி எதையும் பேச மாட்டார். இது இறைவன் மூலமாக அறிவிக்கப்படுகின்ற செய்தியைத் தவிர வேறெதுவுமில்லை என்று கூறுகிறான். அது போல் அல்லாஹ் தன் வேதத்தைப் பற்றிக் கூறும் போது இது அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடம் இருந்து வந்திருக்குமானால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். என்று (அன்னிஸா அத்தியாயத்தின் 82 வது வசனத்தில் ) குறிப்பிடுகிறான். இறைவனிடமிருந்து வந்த இந்தக் குர்ஆனிலும் இறைச் செய்தியை எடுத்துச் சொன்ன நபிமொழிகளிலும் முரண்பாடுகள் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

எந்த சஹாபியையும் பின்பற்றலாமென்றால் ஒரு விஷயத்தில் சிலர் ஹலால் என்றும் வேறு சிலர் ஹராம் என்றும் கூறியிருக்கும் போது எதையும் பின்பற்றி இரண்டு பிரிவுகளாக நாம் ஆக வேண்டுமா? அவ்வாறு பிளவுபடுவதை அல்லாஹ் அனுமதிப்பானா? மாறாக அல்அன்பால் என்ற அத்தியாயத்தில் 46வது வசனத்தில் பிளவுபடுவதைக் கண்டிக்கவே செய்கிறான்.

இவ்வாறு பல கருத்துக்கள் நபித்தோழர்களிடம் காணப்படும் போது அல்லாஹ்வின் வேதத்திலும் அவனது தூதரின் பொன் மொழியிலும் உரசிப் பார்த்து எது குர்ஆன் ஹதீஸிற்கு பொருத்தமானது என்று பார்க்கும்படி தான் அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

இந்த ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று சமுரத் இப்னு ஜ‚ன்துப் என்ற நபித் தோழர் கூறியுள்ளார்களே இந்தக் கருத்தை குர்ஆன் ஹதீஸில் உரசிப்பார்க்கக் கூடாதா?

நோன்பு வைத்துக் கொண்டு பனிக்கட்டிகளைச் சாப்பிடலாம் ஏனெனில் அது உணவுமல்ல பானமுமல்ல என்று அபூதல்ஹா என்ற நபித் தோழர் கருத்து தெரிவித்துள்ளார்களே அதைப்பின் பற்றி நாம் அவ்வாறு செய்தால் நேர்வழி அடைய முடியுமா? நமது நோன்பு முறியாமலிருக்குமா? அப்படி யாராவது ஃபத்வா கொடுத்தால் அவர் நேர் வழியில் இருப்பதாக நாம் ஒப்புக் கொள்ள முடியுமா?

இப்படி ஒரு நிலமையை நபி ஸல் அவர்கள் அங்கீகரிப்பார்களா? என்று இப்னு ஹஸ்ம் ரஹ் அவர்கள் கூறிவிட்டு இன்னும் ஏராளமான மஸ்அலாக்களில் ஸஹாபாக்களின் வேறுபட்ட பல முடிவுகளை வரிசைப்படுத்துகிறார்கள்.

(அல்இஹ்காம் பாகம்:2,பக்கம் :83)

கருத்து வேறுபாடு தோன்றும் போது எவரை வேண்டுமானாலும் பின்பற்றும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட்டுச் செல்லவில்லை. மாறாக இரண்டை விட்டுச் செல்கிறேன் என்று தான் கூறினார்கள். அவ்விரண்டையும் பின்பற்றும் வரை தான் வழி தவறவே மாட்டீர்கள் என்றும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் சரியற்றது என்று நன்றாகத் தெரிந்த பின்னரும் இது ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் சரியற்றது தான், ஆனால் கஷ்பு என்னும் வெளிப்பாடு உடையவர்களிடத்தில் அது சரியானது தான் என்று கூறி ஷஃரானி போன்றவர்கள் சரி காண முயல்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளில் தங்கள் சுய கருத்துக்களை இடம் பெறச் செய்வதாகும். இது மக்களைத் திசை திருப்பும் செயலாகும்.

ஆக இந்த ஹதீஸ் திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. ஸஹாபாக்களின் மதிப்பு என்பது வேறு!

அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து என்பது வேறு!

அவர்களில் எவரையும் ஆராயாமல் பின்பற்றலாம் என்பது வேறு!

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவோருக்கு நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வன்மையான எச்சரிக்கையை நினைவு படுத்துகிறோம்.

எவன் என் மீது இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.

(ஆதாரம்:புகாரி107

இது சரியற்ற ஹதீஸ் என்று தெளிவாக விளக்கப்பட்ட பின்னரும் இந்த ஹதீஸ் மேடைகளில் சொல்லப்படுமானால் அதைச் சொல்லுகின்றவர்களை அணுகி தக்க ஆதாரங்ளைக் கேட்பது பொதுமக்கள் கடமையாகும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுடைய எச்சரிக்கையை மதித்து பொய்களைக் களைந்து நரகிற்குச் செல்வதிலிருந்து மீட்சி பெற்று ஜன்னத்திற்கு செல்வோமாக.

இது குறித்து அல்ஜன்னத்தில் கேட்கப்பட்ட எதிர்க்கேள்விக்கு பீஜே அளித்த பதில்

என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸின் தவறைச் சுட்டிக் காட்டும் போது விண்மீன்களில் எதைப் பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்து கொள்வது போல் சஹாபாக்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பொதுவாக உவமை கூறும் போது அப்பொருளின் பொதுவான தன்மைகளையே எடுத்துக் கொள்வர். உதாரணமாக கொத்தவரங்காய் போன்றவன் என்றால் ஒல்லியாக இருக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்வோம். பச்சைப் பசேலென்று இருக்கிறான் என யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அது போல விண் மீன்களைப் போன்றவர்கள் என்றால் ஒளி மிக்கவர்கள் என்ற பொதுவாக எல்லா நட்சத்திரங்களுக்கும் இல்லாத அம்சத்தை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்.கிஷார் முஹம்மது நதீம், நாகர் கோவில்.

உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்குமுன் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் நினைவு படுத்திக் கொள்கிறோம். விமர்சனத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட அந்த ஹதீஸ் தவறானது என்பதற்கு நீங்கள் சுட்டிக் காட்டியது மட்டும் காரணமல்ல. வேறுபல காரணங்களையும் நாம் எழுதி இருக்கிறோம். முக்கியமாக அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் அல்ல. அடுத்து பல குர்ஆன் வசனங்களுடனும் நபிமொழிகளுடனும் அது நேரடியாக மோதுகின்றது. இந்தக் காரணங்களுக்காகத் தான் அந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது.

உவமை கூறப்படும் போது பொதுவான அம்சங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. கொத்தவரங்காய் சமாச்சாரத்திலும் நமக்கு ஆட்சேபணை இல்லை.

திசை காட்டுபவை என்பதைக் கருத்தாகக் கொண்டதற்கு நியாயமான காரணம் உண்டு. என் தோழர்கள் விண்மீன்கள் போன்றவர்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் ஒளிமிக்கவர்கள் என்று நாம் கருத்துக் கொள்ளலாம். என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்று கூறிவிட்டு எனவே அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வாக்கிய அமைப்பின்படி எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடைவதற்கு முதலில் கூறப்பட்ட உவமையே ஆதாரமாக்கப்படுகிறது.

அதாவது அவர்கள் விண் மீன்களைப் போல் இருக்கின்ற காரணத்தால் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று அந்த வாக்கியம் விளக்குகின்றது. எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற கருத்துக்கு அந்த உவமை ஆதாரமாக்கப்படுவதால் விண் மீன்களில் அந்தத் தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். எந்த விண்மீனும் வழிகாட்டும் தன்மை பெற்றிருக்க வேண்டும். விண்மீன்களில் அத்தகைய தன்மை இல்லை. எனவே உவமை பொருந்தவில்லை என்று நாம் எழுதினோம் இந்தக் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நாம் சுட்டிக்காட்டிய மற்ற காரணங்களால் சரியானதல்ல என்று உணரலாம்.

________________________________
Jazakallah : By onlinepj.com

August 25, 2012

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா ? ..




உளூ இல்லாதவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர் ஆனைத் தொடலாமா ? என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்.

அல்குர்ஆன் (56 : 79)

குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை அவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ளவர்கள் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்று முடிவு செய்ய இடம் தருவது போல் தோன்றுகிறது..

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும் நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்களைத் தவிர யாரும் அதைத் தொட மாட்டார்கள் என்பதில் தூய்மையானவர்கள் என்றால் யார் என்பதையும், இதைத் தொட மாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் முதலில் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56 : 79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

அல்குர்ஆன் (56 : 77. 79)

56 : 79 வசனத்திற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.

அல்குர்ஆன் (80 : 11-16)

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

குரைஷிக் குல இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

அல்குர்ஆன் (26 : 210 212)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள். தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும்,

அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும்

ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகின்றன. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது. ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம்.

__________________________________
Jazakallah : by onlinepj.com

August 23, 2012

கரண்டைக்கு கீழால் ஆடை அணியலாமா ?



கரண்டைக் காலில் ஆடை படும் வகையில் கீழாடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாக பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது.

ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறிக் கொண்டு வருகிறோம்.

நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது என்றும் கரண்டைக்கு மேல் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

பெருமை உள்ளவரும் பெருமை இல்லாதவரும் அனைவரும் இவ்வாறே அணிய வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

பெருமையை மையமாக வைத்து சட்டம் மாறுபடுவதாக நாம் கூறுகின்ற கருத்தை இன்றைக்கு பலர் விமர்சனம் செய்து கரண்டையில் ஆடை படவே கூடாது என்ற தங்களது கருத்து தான் சரியானது என்று வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் கருத்தை நம்பிய பலர் தங்களுடைய கீழாடை கரண்டையில் படாத அளவிற்கு அதன் நீளத்தை குறைத்துக் கொண்டனர். இவ்வாறே ஆடை அணிய வேண்டும் என்று மற்றவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். கரண்டையில் ஆடை படும் வகையில் ஆடை அணிபவர்களை விமர்சித்தும் வருகின்றனர்.

பெருமையுடன் அணிவது கூடாது; பெருமையின்றி அணியலாம் என நாம் வேறுபடுத்துவது தவறு என்ற இவர்களின் விமர்சனம் சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு பேச்சுக்கு இவ்வாறு வேறுபடுத்துவது தவறு என்று ஏற்றால் கூட ஆடை கரண்டையில் கீழாடை படக்கூடாது என்று கூற முடியாது. மாறாக கீழாடை கரண்டையில் படுவதாலோ கரண்டையை மூடினாலோ தரையில் இழுபடாத வரை தவறில்லை என்ற நமது கருத்தே அப்போதும் மேலோங்கி நிற்கும்.

இதை விளக்குவதற்காக இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஆடையைக் கீழே தொங்க விடுவது தொடர்பாக வரும் ஹதீஸ்களில்

ஜர்ரு (ஆடையை தரையில் படுமாறு இழுத்துச் செல்வது) மற்றும்

இஸ்பால் (தரையில் படுமளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது)

ஆகிய இரண்டும் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு அரபுச் சொற்களுக்கு அரபு அகராதியில் என்ன பொருள் என்று பார்த்தாலே இப்பிரச்சனைக்கு இலகுவாக முடிவு கண்டு விடலாம்.

ஜர்ரு மற்றும் இஸ்பால் என்பதன் பொருள்

ஜர்ரு என்றால் இழுத்துச் செல்லுதல் என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளை தரை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொருளை நகர்த்துவதற்கே இழுத்துச் செல்லுதல் என்று கூறப்படுகிறது.

பின்வரும் செய்தியில் ஜர்ரு (ஆடையை இழுத்துச் செல்வது) கண்டிக்கப்படுகின்றது.

5783 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 5783

தரையில் படுமாறு இழுத்துச் செல்லுதல் என்ற அர்த்தத்தில் ஜர்ரு என்ற வார்த்தை பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு இதுவே சரியான பொருள் என்பதை அரபு படித்த அனைவரும் அறிவர். நமது கருத்துக்கு எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் கூட இந்த வார்த்தைக்கு நாம் கூறும் அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். அடுத்து இஸ்பால் என்ற வார்த்தையின் பொருளைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கரண்டைகள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம்

நூல் : அபூதாவூத் (3562)

மேற்கண்ட செய்தி இஸ்பால் செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஒருவர் தன் ஆடையை இஸ்பால் செய்தார் என்றால் அதன் பொருள் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விட்டார் என்பதாகும்.

லிசானுல் அரப் (பாகம் : 11 பக்கம் : 319)

நடக்கும் போது தன் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுபவரே இஸ்பால் செய்பவர்.

நூல் : அந்நிஹாயது ஃபீ ஃகரீபில் அஸர் (பாகம் : 2 பக்கம் : 846)

இஸ்பால் என்றால் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்று கத்தாபீ என்பவர் கூறியுள்ளார்.

நூல் : துஹ்ஃபதுல் அஹ்வதீ (பாகம் : 1 பக்கம் : 407)

இஸ்பால் என்றால் நடக்கும் போது ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுவதாகும்.

நூல் : அவ்னுல் மஃபூத் (பாகம் : 2 பக்கம் : 340)

எனவே இஸ்பால் என்றாலும் ஜர்ரு என்றாலும் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுவதே இவ்விரு வார்த்தைகளின் பொருளாகும். இந்த அடிப்படையில் இவையிரண்டும் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளாகும். இவ்வாறு ஆடை அணிவது கூடாது என்றே ஹதீஸ்கள் கூறுகின்றன.

இதை இங்கே நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்பால் என்றால் கரண்டையைத் தொடுமாறு ஆடை அணியுதல் என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இஸ்பால் செய்வது ஹதீஸ்களில் கண்டிக்கப்படுவதால் கரண்டையில் ஆடை செல்லக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதம் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன

கரண்டையைத் தாண்டி தரையில் இழுபடுவதைத் தடுக்கும் ஹதீஸ்களை கரண்டையில் படுவதைத் தடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.

கீழாடை கணுக்கால்களைத் தொடலாமா?

கீழாடையின் எல்லையைப் பற்றி பேசும் ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளன. இந்த ஹதீஸ்கள் யாவும் கரண்டையில் ஆடை படவே கூடாது என்று கூறவில்லை. மாறாக கரண்டையையும் சேர்த்து அதை மூடும் வகையில் ஆடை அணிந்தால் தவறில்லை என்றே கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் கீழாடை நரகத்திற்குச் செல்லும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (5787)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கணுக்கால்களுக்கு கீழே செல்லும் கீழாடை நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும்.

அறிவிப்பவர் : சமுரா (ரலி) அவர்கள்

நூல் : அஹ்மது (19309)

இவ்விரு செய்திகளில் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணிவது தான் தவறு என்று கூறப்படுகின்றது. எனவே கணுக்காலில் ஆடை அணிவதை இச்செய்தி அனுமதிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)

நூல் : அபூதாவுத் (3562)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கீழாடை கெண்டைக்காலின் பாதி வரையும் கணுக்கால்கள் வரையும் இருக்கலாம். இதற்குக் கீழே செல்வதில் எந்த நன்மையும் இல்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : அஹ்மது (13115)

கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்று இங்கே கூறப்படுகின்றது. கணுக்கால்கள் வரை என்றால் அதன் முடிவுப் பகுதி வரை அணிந்து கொள்ளலாம் என்பதே இதன் நேரடிப் பொருள். எனவே கீழாடை கணுக்கால்களை தொடும் வகையில் அணிவது தவறல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு முஸ்லிமுடைய கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்க வேண்டும். அல்லது கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும். யார் தனது கீழாடையை ஆணவத்துடன் இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : அபூதாவுத் (3570)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : தப்ரானீ

மேலுள்ள செய்திகள் அனைத்தும் கீழாடை கணுக்கால்களைத் தொடக்கூடாது என்று கூறவில்லை. மாறாக கீழாடை கணுக்கால்களைத் தொடுவதை அனுமதிக்கின்றன. கணுக்கால்களுக்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும் என்ற வாசகம் கணுக்கால்களில் ஆடை பட்டால் தவறில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இந்தச் செய்திகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் இவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் வெவ்வேறான அறிவிப்புக்களாகும். கணுக்கால்களைத் தொடும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று கூறுவோருக்கு மறுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன.

கணுக்கால்களுக்குக் கீழ் என்பதன் விளக்கம்

மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்திகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்றும் கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்பதின் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பது தான். கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற உத்தரவை இந்தக் கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.

ஹுஜைம் குலத்தைச் சார்ந்தவரான ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) நீ கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை உடுத்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால் வரை (உடுத்திக் கொள்). கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

நூல் : பைஹகீ (5853) அபூதாவுத் (3562)

இந்தச் செய்தியில் கணுக்கால் வரை அணியலாம் என்று முதலில் கூறப்படுகின்றது. இதன் பிறகு கீழாடையைத் தரையில் இழுத்துச் செல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்ற வாசகத்தைக் கூற வேண்டிய இடத்தில் தரையில் ஆடையை இழுத்துச் செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றால் தரையில் இழுபடுமாறு அணியக் கூடாது என்பதே அதன் பொருள் என இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.

சுருங்கச் சொல்வதென்றால் ஆடை தரையில் இழுபடாத அளவிற்கு நீட்டிக் கொள்ள நபியவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதே இந்த ஆய்வின் சுருக்கம். அதாவது கணுக்கால்கள் வரை ஆடையை நீட்டலாம் என்பதும் தரையில் இழுபடாமல் ஆடையை அணியலாம் என்பதும் வெவ்வேறான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரே கருத்தாகும்.

தரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்பதே சட்டம். இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு கணுக்கால்கள் வரை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.

ஆடை தரையில் இழுபடாத வகையில் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு கீழே இறக்கினாலும் அவர் கணுக்கால்கள் வரை உடுத்தியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

நபியவர்களால் கண்டிக்கப்பட்டவர்கள்

கணுக்கால்களில் ஆடை படும் வகையில் அணிந்த ஒருவரை நபி (ஸல்) அவர்களோ நபித்தோழர்களோ கண்டித்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.

மாறாக ஆடை தரையில் படுமாறு இழுத்துச் சென்றவரை மட்டுமே நபியவர்கள் கண்டித்ததாக ஆதாரங்கள் உள்ளன. இதே போன்று நபித் தோழர்களும் ஆடையைத் தரையில் இழுத்துச் செல்பவர்களை மட்டுமே கண்டித்துள்ளார்கள்.

ஷரீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

தனது கீழாடையை இழுத்துச் சென்ற ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவரிடம் விரைந்து அல்லது ஓடிச் சென்று அல்லாஹ்வை அஞ்சிக் கொள். உனது கீழாடையை உயர்த்து என்று கூறினார்கள். நான் கவட்டைக் கால்களைக் கொண்டவன். என்னுடைய இரு முட்டுக்களும் மோதிக் கொள்ளும் (எனவே தான் இவ்வாறு அணிந்துள்ளேன்) என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனது கீழாடையை உயர்த்திக் கொள். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வின் படைப்பு அனைத்தும் அழகானதே என்று கூறினார்கள். இதற்குப் பிறகு அம்மனிதரின் கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்கும் நிலையிலேயே அம்மனிதர் தென்பட்டார்.

நூல் : அஹ்மது (18656)

முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, “நீர் யார்?” என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில் படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்’ என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

முஸ்லிம் (4236)

முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்த போது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு “(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்” என்று (இடித்துக்) கூறலானார்கள்.

பிறகு “அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் “அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் (4239)

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

(உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு) இளைஞர் திரும்பிச் சென்ற போது அவரது கீழங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), “எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள்.

புகாரி (3700)

கணுக்காலில் ஆடை படக்கூடாது என்போரின் ஆதாரங்கள்

முதல் ஆதாரம்

ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :

நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மது (15389)

இந்தச் செய்தியில் ஆடையை நீட்டுவதற்குக் கடைசி எல்லையாக கணுக்கால்களின் மேல் பகுதி கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாக வைத்து கணுக்காலில் ஆடை விழக் கூடாது. கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே ஆடையை இறக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

இந்த அறிவிப்பை அபூ தமீமா என்பாரிடமிருந்து அபுஸ்ஸலீல் என்பவர் அறிவிக்கின்றார். இந்தச் செய்தியை அபூ தமீமாவிடமிருந்து அபுஸ் ஸலீல் மட்டும் அறிவிக்கவில்லை. அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் உட்பட காலித் மற்றும் அபூ ஃகிஃபார் ஆகிய மூவர் அறிவித்துள்ளனர்.

இந்த மூவரும் நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அபுஸ்ஸலீல் காலிதுக்கும் அபூ ஃகிஃபாருக்கும் மாற்றமாக இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.

காலிதுடைய அறிவிப்பிலும் அபூஃகிஃபாருடைய அறிவிப்பிலும் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால்களின் மீது ஆடை படுவது தவறல்ல என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பவில் கணுக்கால்கள் மீது ஆடை விழவே கூடாது என்று இதற்கு மாற்றமாகக் கூறப்பட்டுள்ளது.

அபுஸ்ஸலீலை விட காலிதே உறுதியானவர் என்பதாலும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு காலிதுடைய அறிவிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாலும் கீழாடை கணுக்கால்களைத் தொடலாம் என்று கூறும் காலிதுடைய அறிவிப்பே சரியானதாகும். கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய மேற்கண்ட அறிவிப்பு பலவீனமாகும்.

காலிதுடைய அறிவிப்பு

கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மது (22121)

அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு

உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (3562)

அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) அபூசயீத் (ரலி) அனஸ் (ரலி) சமுரா (ரலி) ஆகிய ஐந்து நபித்தோழர்கள் வழியாக வந்த அறிவிப்புகளை முன்னர் பார்த்தோம். இந்த அறிவிப்புகளும் கணுக்காலில் ஆடை படுவதை அனுமதிக்கின்றன.

எனவே கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு காலித் மற்றும் அபூஃகிஃபாருடைய அறிவிப்புக்கும் அந்த ஐந்து நபித்தோழர்கள் வழியாக வரும் அறிவிப்புகளுக்கும் மாற்றமாக இருப்பதால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு தவறானதாகும்.

மேலும் காலித் மற்றும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்படுவதைத் தொடர்ந்து தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்றும் சேர்த்து கூறப்படுகின்றது.

ஆனால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பில் தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்ற தகவல் கூறப்படவில்லை. எனவே அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு முழுமையற்றதாகவும் பிழையானதாகவும் உள்ளது.

பல நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு ஒருவரின் அறிவிப்பு மாற்றமாக இருந்தால் அவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஹதீஸ் கலை விதியின் படி இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது ஆதாரம்

அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக் கால்களின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குக் கீழே கணுக்கால்களுக்கு மேல் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்

நூல் : அஹ்மது (10151)

இந்தச் செய்தியில் கணுக்காலின் மேல் பகுதி இறுதி எல்லையாகக் கூறப்படுவதால் இதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். இந்தச் செய்தியில் முஹம்மது பின் அம்ர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் எனினும் இவரிடமிருந்து தவறுகள் பல ஏற்படும் என்று இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இவர் தவறிழைத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. ஏனென்றால் இந்தச் செய்தியை அவர் அப்துர் ரஹ்மான் பின் யஃகூப் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்.

அப்துர் ரஹ்மான் பின் யஃகூபிடமிருந்து முஹம்மது பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். கீழாடை கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும் என்றே இவரது அறிவிப்பில் உள்ளது. அதாவது கீழாடை கணுக்கால்களைத் தொடுவது தவறல்ல என்றே இவருடைய அறிவிப்பில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மது (7519)

முஹம்மது பின் இப்ராஹீம் உறுதியானவர் நம்பகமானவர். இவர் முஹம்மது பின் அம்ரை விட வலிமையானவர். எனவே இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பை ஏற்க இயலாது.

மேலும் இதே செய்தி அபூ சயீத் மற்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் வழியாகவும் வந்துள்ளது. இந்த சரியான அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அதாவது கணுக்கால்களை கீழாடை தொடலாம் என்றே கூறப்பட்டுள்ளது. கணுக்கால்களுக்கு மேல் வரை அணிய வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த அறிவிப்புகளை முன்பே நாம் பார்த்து விட்டோம்.

எனவே முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பு நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருப்பதால் கணுக்கால்களுக்கு மேல் அணிய வேண்டும் என இவர் தவறுதலாக அறிவித்திருப்பது தெளிவாகி விட்டது. இந்த தவறான அறிவிப்பை ஆதாரமாக எடுக்க இயலாது.

மூன்றாவது ஆதாரம்

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடம். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பா விட்டால் கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி (1705)

இந்தச் செய்தியில் ஹுதைஃபா (ரலி) முஸ்லிம் பின் நதீர் அபூ இஸ்ஹாக் அபுல் அஹ்வஸ் மற்றும் குதைபா ஆகியோர் அறிவிப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இதில் இரண்டாவதாக இடம்பெறும் அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீர் நம்பகமானவர் என்று அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை. இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை எல்லாம் நம்பகமானவர் என்று கூறும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை ஏற்க முடியாது.

நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்ற வாசகத்தால் குறிப்பிடுவது வழக்கம். அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீரை இமாம் இப்னு ஹஜர் மக்பூல் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இவரது அறிவிப்பை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற செய்திகளை வலுவூட்டுவதற்கு துணைச்சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் தஹபீ மற்றும் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

மேற்கண்ட செய்தியை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவிக்கின்றார். அத்துடன் கீழாடை கணுக்கால்களைத் தொடுவதால் தவறல்ல என்று கூறும் ஏராளமான சரியான அறிவிப்புகளுடன் முரண்படும் வகையில் அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவித்தாலே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்தால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பை ஏற்க இயலாது.

இவர் மேற்கண்ட செய்தியைப் பிழையாக அறிவித்திருந்தாலும் வேறு ஒரு நேரத்தில் சரியாக அறிவித்துள்ளார்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி (1705)

இந்த அறிவிப்பில் கணுக்கால்களுக்குக் கீழே எந்த உரிமையும் இல்லை என முஸ்லிம் பின் நதீர் சரியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே மற்ற சரியான ஆதரங்களுடன் ஒத்துப் போகின்றது. எனவே கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் அறிவித்தது தவறு என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.
ஆய்வின் சுருக்கம்

கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.

கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.

அதே நேரத்தில் ஆடையை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் காட்டிலும் மேலே உயர்த்தி அணிவது சிறந்ததாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்காலின் பாதி வரை அணிய வேண்டும் என்பதை முதல் உத்தரவாக பிறப்பிக்கின்றார்கள். இதை விரும்பா விட்டாலே இதற்கு அடுத்த நிலையை கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்கள். எனவே ஆடையை உயர்த்திக் கட்டுவது மார்க்கத்தில் சிறந்த நிலையாகும்.

Jazakallah By onlinepj.com

August 17, 2012

பெருநாள் வாழ்த்து ‘ஈத் முபாரக்’ என்று சொல்வது சுன்னத்தா ?..




பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.

ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்கு முரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும், மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் மறுப்பு இல்லை.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.

ஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை. அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அப்படியே அரபு மொழியில் சொல்ல வேண்டும். மற்ற விஷயங்கள் அவரவர் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்.

அப்போது தான் அது ஒரு சுன்னத் என்ற நிலையை அடையாது.

யாரோ ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கிய ஒரு சொல் அனைத்து முஸ்லிம்களாலும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் இதை எப்படிச் சகிக்க முடியும்? நபியின் இடத்தில் யாரையும் நாம் வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் அவரவர் மொழியில் தான் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்

வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.

ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லைக் கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது. ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள் தினத்திலும் துஆச் செய்யலாம். இந்தப் பொருளை மனதில் கொண்டு வாழ்த்துக்கள் என்றோ வாழ்த்துகிறேன் என்றோ கூறலாம்.

ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித்அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால் தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும்.

ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது என்பதே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.

ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்டால் இது கூட பித்அத்தாக மாறிவிடும். நான் காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன். அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நஃபில் தொழ வேண்டும் என்று ஒருவர் கூறினால் – அல்லது அவர் கூறுவதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினால் – அது பித்அத் ஆகிவிடும்.

நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் படுத்தினாலலோ அதுவும் பித்அத் ஆகி விடும்.

ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுத்தால் அவரோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார்.

அவர் செய்கிறார் என்பதற்காக அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்பட்டால் அல்லாஹ்வின் துதருடைய இடத்தை அந்த மனிதருக்கு அளித்து விட்டார்கள் என்பது பொருள். அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ்இ பராஅத் இரவுகளில் நோன்பு கூடாது என்று கூறுகிறோம். இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.

ஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.

அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.

ஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது? அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முகமன் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின் அர்த்தத்துக்காகச் சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டது என்று ஆகிவிடும்.

எவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுவதை அனுமதிப்பது மார்க்கத்துக்கு ஆபத்தாகும்.

ஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான், ஹேப்பி பக்ரீத், பெருநாள் வாழ்த்து, குல்ல ஆமின் அன்தும் பி கைர் என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது.

ஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குரிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும். இது போன்ற விஷயங்களைப் பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகி விட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர்.

பத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப் பழக்கமான, பராஅத், மிஃராஜ், மீலாது உள்ளிட்ட பித்அத்களை மக்கள் விட்டு விட வேண்டும் கூறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.

மிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று இவர்கள் கேட்கின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான். அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அதைவிட முக்கியமானது.

ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ என்பதால் தான் அது பித்அத் ஆகிறது. அது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رواه عبد الله بن جعفر المخرمي وعبد الواحد بن أبي عون عن سعد بن إبراهيم 2697

இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி- நூல் : புகாரி 2697

குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் ஆசிவழங்கும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.

பித்அத் என்பது நுணுக்கமான இன்னும் பல தன்மைகளைக் கொண்டதாகும். அதில் காலை வைக்கமல் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

_____________________________________
Jazakallah By : sltjweb.com

August 16, 2012

பிறையை கண்களால் பார்த்து தீர்மானிப்பதே பிறை .. !

A :

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்
(திருக்குர்ஆன் : 2:185)

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது. திருக்குர்ஆன் ஏக இறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது.

“ஃபமன் ஷஹித மின் கும் அல் ஷஹ்ர“ (உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ)

ஆகிய ஏழு வார்த்தைகள் தேவையை விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது. இந்த வார்த்தைகள் ஒரு பயனும் இல்லாமல் ஒரு கருத்தையும் கூறாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வார்த்தையும் பொருளற்றதல்ல.

ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன்.

"உங்களில் அம்மாதத்தை அடைபவர்"

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது.

இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும் .

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும்.

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ ((திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.

ஆக

#அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

#ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

மேலும் சூரிய சந்திர கிரகணத்தில் புரிந்துகொண்ட நாம் :

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

"நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால்" (இவ்விடத்தில் முழு உலகமும் என்று எடுத்துக்கொள்ளலாமா?....)

கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா?

சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.

விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.

1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.

லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.

இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.

கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?

இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

-------------------------------------------------------
B:

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத், நஸயீயின்

பிறையைப் பார்த்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு கூட்டத்தினர் தெரிவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தினர் மதீனாவுக்கு அருகில் உள்ள ஊரிலிருந்து நிச்சயம் வந்திருக்க முடியாது.

அருகில் உள்ள ஊரிலிருந்து வந்திருந்தால் பிறை பார்த்தவுடன் அன்றிரவே வந்திருக்க முடியும். இரவில் ஓய்வு எடுத்துக் கொண்டால் கூட அதிகாலையில் புறப்பட்டு முற்பகலில் வந்திருக்கலாம். ஆனால் இக்கூட்டத்தினர் பகலின் கடைசி நேரத்தில் வந்ததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அஸரிலிருந்து மக்ரிபுக்குள் உள்ள நேரம் தான் பகலின் கடைசிப் பகுதியாகும்.

இவ்வளவு தாமதமாக வந்துள்ளார்கள் என்றால் அதிகமான தொலைவிலிருந்து பயணம் செய்து தான் இவர்கள் வந்திருக்க வேண்டும். நடந்து வந்த காரணத்தால் தாமதமாக வந்திருப்பார்களோ என்றும் கருத முடியாது. வாகனக் கூட்டம் என்று ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுகிறது. வாகனத்தில் வந்திருந்தும் மாலை நேரத்தில் தான் மதீனாவை வந்தடைகிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் அதிகமான தொலைவிலிருந்து தான் மதீனாவுக்கு வந்துள்ளனர் என்பது உறுதியான விஷயமாகும்.

எங்களுக்குப் பிறை தெரியாததால் நாங்கள் நோன்பு நோற்றோம் என்று தன்னிலையாக ஹதீஸ் ஆரம்பிக்கிறது.

வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதிக் கட்டத்தில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று கூறுகிறார்கள்.

இவர்களது கூற்றை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்ட கட்டளை எவ்வாறு அமைந்தது என்பது தான் கவனிக்க வேண்டிய, பலரும் கவனிக்கத் தவறிய அம்சமாகும்.

A -மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறு நாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

B - மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைகிறோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

C - மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் அவர்களது தொழும் திடலுக்கு அவர்கள் மறுநாள் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இங்கே நாம் சுட்டிக்காட்டிய மூன்று வாக்கிய அமைப்புகளில் முதலிரண்டு அமைப்புகளில் இந்த ஹதீஸ் அமைந்திருந்தால் இவர்களின் வாதம் ஏற்கக் கூடியது தான். ஆனால் நாம் மூன்றாவதாகக் குறிப்பிட்ட அமைப்பில் தான் ஹதீஸ் அமைந்துள்ளது.

நாங்கள் நோன்பு நோற்றோம்.
எங்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்றால் வெளியூர் சாட்சியத்தை ஏற்று உள்ளூர் மக்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

அல்லது மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தால் வெளியூர் கூட்டம் வந்து அளித்த சாட்சியத்தை ஏற்று எல்லா மக்களையும் நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்

மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்

யார் சாட்சியம் அளித்தார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது

தங்கள் ஊரில் பிறை பார்த்த பிறகும் பெருநாள் தொழுகையைத் தொழாமல், நோன்பையும் பிடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக இவர்கள் வந்துள்ளனர். பிறை பார்த்த பின்பும் நோன்பு நோற்றதும், பெருநாள் தொழுகையை விட்டதும் சரியில்லை என்பதால் அவர்களது நோன்பை முறிக்குமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அவர்களது தொழும் திடலுக்கு மறு நாள் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றால் கட்டளை யாருக்கு என்பது தெளிவாகவே விளங்குகிறது. பிறை பார்த்தவர்களுக்குத் தான் அந்தக் கட்டளையே தவிர பிறை பார்க்காமல் மேக மூட்டம் காரணமாக முப்பதாம் நோன்பு வைத்த உள்ளூர் மக்களுக்கு அல்ல!

அவர்களுக்கும் எங்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூட ஹதீஸில் கூறப்படவில்லை.

நாங்கள் என்று இவ்வாசகம் ஆரம்பமாகிறது. நாங்கள் என்று யார் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும். கூறப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டு சாராருக்கும் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்கும் அவர்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.
நாங்கள் அவர்கள் என்று இரு சாரார் பற்றிக் கூறும் போது அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறினால் நாங்கள் எனக் கூறியவர்களை அது கட்டுப்படுத்தாது என்பது யாருக்கும் தெரிந்த உண்மை!

----------------------------------------------------
C:

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பி
றையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம்

தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

குரைபுடைய கேள்வியே பெருநாளைப் பற்றியது தான். முஆவியா (ரலி) பிறை பார்த்த அடிப்படையில் முப்பது நாட்கள் பூர்த்தியாகின்றதே! அது உங்களுக்குப் போதாதா? என்ற கருத்தில் தான் குரைப் கேட்கிறார். அதற்குத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) போதாது. இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.

மதீனாவை விட சிரியாவில் ஒரு நாள் முன்னதாக பிறை பார்த்திருக்கிறார்கள். சிரியாவில் முப்பது நாட்களைப் பூர்த்தி செய்யும் போது மதீனவில் 29 நாட்கள் தான் பூர்த்தியாகியுள்ளது. சிரியாவில் பெருநாள் என்று உறுதியாகத் தெரிந்த பின்னரும் இப்னு அப்பாஸ் (ரலி) அதை ஏற்றுக் கொள்ளாமல், எங்களுக்கு 29 நாட்கள் தான் ஆகிறது. எனவே நாங்கள் பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்கள் பூர்த்தியாகும் வரை நோன்பு நோற்போம்' என்று கூறுகின்றார்கள்.

சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலைத் தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம். அதை இப்னு அப்பாஸ் (ரலி) மறுக்கின்றார் என்றால் தெலை தூரத்தில் பிறை பார்க்கப்பட்டால் அதை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியவில்லையா?

----------------------------------------------------
D:

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக்
கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் முப்பதாம் நாள் சுப்ஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: தாரகுத்னீ

இங்கே கிராம வாசிகள் (அஃராபிகள்) வந்து சாட்சி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. அஃராபிகள் என்றால் யார்?

ஒரு நகரத்தைச் சுற்றி வாழ்பவர்கள், எல்லா முக்கியத் தேவைகளுக்கும் அந்த நகரத்தையே சார்ந்திருப்பவர்கள் ஆகியோரே அஃராபிகளாவர். கிராமப்புறத்தார்கள் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இவர்கள் அதிகாலையிலேயே வந்து தகவல் கூறி விட்டதால் தொலைவிலிருந்து வரவில்லை. அருகிலிருந்து தான் வந்தனர் என்பது தெரிகிறது.

பயணக் கூட்டம் சம்பந்தமான ஹதீஸில் உள்ளது போல் இவர்கள் தொலைவிலிருந்து வரவில்லை.

# வாகனத்தில் வரவில்லை
# பகலின் கடைசி நேரத்திலும் வரவில்லை.

ஒரு வேளை மதீனாவில் ஜும்ஆ தொழும் இவர்கள் பெருநாள் தொழுவதற்காக மதீனா வந்திருக்கவும் அங்கே நோன்பு வைத்திருப்பதைக் கண்டதும் பிறை பார்த்த செய்தியைச் சொல்லி இருக்கவும் சாத்தியமுள்ளது.

இந்தச் சாத்தியத்தை ஏற்காவிட்டாலும் அஃராபுகள் என்போர் மதீனா நகரைச் சுற்றி வாழ்ந்த கிராமத்தார்கள் தான் என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு ஒவ்வொரு நகரத்தைச் சுற்றியும் அஃராபுகள் வாழ்ந்தாலும் மதீனாவுக்கு வந்தவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்தவர்களே.

இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இரண்டு நிகழ்ச்சிகளும் முரண்பட்டவையல்ல என்று பிரித்தறியலாம்.

கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு பொருள் கொண்டால் இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

முந்தைய நிகழ்ச்சி தூரத்தில் உள்ள வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்கலாகாது எனக் கூறுகிறது. பிந்தைய நிகழ்ச்சி ஓர் ஊரை ஒட்டிய கிராமத்தார் பிறை பார்ப்பது அந்த ஊரையும் கட்டுப்படுத்தும் என்பதைக் கூறுகிறது.

ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------
E:

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை.

மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.

பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள்.

சுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதை விட இந்த ஹதீஸ் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு எந்த வியாக்கியானமும் கூற முடியாது.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படா விட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம்.

மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பு நோற்பவர்களுக்கு இந்த ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.

பிறை பார்க்கத் தேவையில்லை. நாம் வானியல் அறிவின் துணை கொண்டு கணித்து விடலாம் என்று வாதிடக் கூடியவர்களுக்கும் இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளது.

---------------------------------------------------------------------
F:

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி - 1907

இந்த நபிமொழியும் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்குரிய ஆதாரங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது.

இந்த நபிமொழியின் கருத்துப்படி எந்த மாதத்துக்கும் 28 நாட்களோ அல்லது 31 நாட்களோ இருக்க முடியாது. மாதத்தின் குறைந்த பட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்ச அளவு 30 நாட்கள்; இதைத் தவிர வேறில்லை. நோன்பின் எண்ணிக்கை 29ஐ விடக் குறைவாகவோ, 30ஐ விட அதிகமாகவோ இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.

ஒருவர் எடுக்கும் ஒரு முடிவின் காரணமாக ரமளான் மாதத்துக்கு 28 நோன்பு என்ற நிலை வருமானால் அல்லது 31 நோன்பு என்ற நிலை ஏற்படுமானால் நிச்சயமாக அந்த முடிவு தவறான முடிவாகத் தான் இருக்க முடியும்.

உதாரணமாக சவூதியில் ஜனவரி முதல் தேதியன்று மாலை 7 மணிக்கு தலைப்பிறையைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகம் முழுவதற்கும் அது தான் தலைப்பிறை என்ற வாதத்தின் படி ஏற்படும் விளைவைப் பார்ப்போம்.

சவூதியில் 7 மணியாக இருக்கும் போது லண்டனில் மாலை நான்கு மணியாக இருக்கும். அதாவது லண்டனில் மாலை நான்கு மணிக்கு ரமளான் துவங்குகிறது.

இவர்களின் வாதப்படி ரமளான் மாதத்தின் பகல் நேரத்தை லண்டன் மக்கள் அடைந்து விட்டதால் நான்கு மணி முதல் சூரியன் மறையும் வரை நோன்பு நோற்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும்.

நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)
நூல்: நஸயீ

எனவே லண்டனில் நான்கு மணியை அடைந்தவர் பிறை தோன்றுமா தோன்றாதா என்பது தெரியாத நிலையில் கடந்த இரவே நோன்பு நோற்பதாகத் தீர்மானம் செய்திருக்க முடியாது.

இவர்களின் வாதப்படி நான்கு மணிக்கு லண்டன்வாசி ரமளானை அடைந்து விட்டார். ஆனாலும் இந்த நோன்பை அவர் நோற்கத் தேவையில்லை என்ற முடிவைத் தான் கூற வேண்டி வரும். அதாவது ரமளானை அவர் அடைந்தும் நோன்பு நோற்காத நிலை அவருக்கு ஏற்படுகிறது. இதனால் யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற திருக்குர்ஆன் வசனம் மீறப்படுகிறது.


இப்படியே 29 நாட்கள் கழிகின்றன. 29ல் மாதம் முடிந்து அன்று இரவு சவூதியில் ஷவ்வால் பிறை தோன்றி விட்டது. இந்த நேரத்தில் லண்டன் மக்கள் மாலை நான்கு மணியை அடைந்திருப்பார்கள்.

இவர்கள் வாதப்படி மாலை நான்கு மணிக்கு ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை லண்டன் மக்கள் அடைந்து விட்டார்கள். அதாவது நோன்புப் பெருநாள் தினத்தை அவர்கள் அடைந்து விட்டார்கள். நோன்புப் பெருநாளில் நோன்பு நோற்பது ஹராம் என்பதை அனைவரும் அறிவோம்.

எனவே அவர்கள் நான்கு மணிக்கு நோன்பை முறித்து விட வேண்டும். அதாவது 29வது நோன்பை முறித்து விட வேண்டும். இந்தக் கணக்குப்படி 28 நோன்பு தான் இவர்கள் நோற்றுள்ளனர்.

குறைந்த பட்சம் 29 நோன்புகள் நோற்க வேண்டும் என்ற நபிமொழிக்கு மாற்றமான நிலை இங்கே ஏற்படுகிறது நாம் பார்த்த பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று கூறினால் உலகின் பல பகுதியினர் 28 நோன்பு தான் பிடிக்க முடியும். ஏதோ தவறுதலாக எப்போதோ 28 நோன்பு பிடிப்பது போன்றதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. எந்த மாதம் 29 நாட்களுடன் முடிகின்றதோ அந்த மாதங்களில் காலமெல்லாம் இந்தத் தவறை உலகில் பாதிப்பேர் செய்து கொண்டிருப்பார்கள்.

ஒரு நாள் என்று சொன்னால் அதற்கு ஆரம்ப நேரம் ஒன்று இருக்க வேண்டும்; முடிவு நேரம் ஒன்று இருக்க வேண்டும். உதாரணமாக, ஆங்கில நாள் என்பது நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் ஆரம்பமாகிறது. நமது ஊரில் நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் உலக மக்கள் அனைவரும் மறு நாளில் நுழைந்து விட்டார்கள் என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் ஒவ்வொருவருக்கும் நாளின் துவக்கம் வெவ்வேறாக அமைந்து விடும்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பதும் இல்லாமல் போய் விடும்.

எனவே சவூதியில் பிறை பார்த்தவுடன் அவர்களுக்கு நாள் மாறி விட்டது என்பது உண்மை! இதன் காரணமாக அமெரிக்காவிலும் நாள் மாறி விட்டது என்று கூறினால் அவர்களுக்குக் காலையிலிருந்து நாள் ஆரம்பமாகும் நிலை ஏற்படும். மேலும் முதல் நாளில் அவர்களுக்கு 12 மணி நேரம் தான் கிடைக்கும். எனவே எந்த ஊரில் பிறை பார்க்கப்பட்டதோ அவர்களுக்குத் தான் நாள் துவங்குகிறது என்று கூறினால் அந்தக் குழப்பம் ஏற்படாது.

-----------------------------------------------------------------
G:

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
அல்குர்ஆன் 6:96

உலகமெல்லாம் ஒரே சூரியன், உலகமெல்லாம் ஒரே சந்திரன் ?...........

உலகத்தில் ஒரே சந்திரன் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சந்திரன் எப்படி உலகுக்கெல்லாம் ஒன்று தான் உள்ளதோ அது போல் உலகம் முழுவதற்கும் ஒரு சூரியன் தான் உள்ளது. சந்திரன் எப்படி காலத்தைக் காட்டுவதாக உள்ளதோ அது போல் தான் சூரியனும் நமக்குக் காலம் காட்டியாக உள்ளது.

சூரியன் நமக்கு இரவு, பகலைக் காட்டுகிறது. காலை, மாலை, நண்பகல் போன்ற நேரங்களையும் காட்டுகிறது. எப்படிக் காட்டுகிறது என்றால் நமது ஊரிலிருந்து அது எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலத்தைக் காட்டுமே தவிர சூரியனே காலத்தைக் காட்டாது.

நமது தலைக்கு நேராக 0 டிகிரியில் அது இருந்தால் நண்பகல் என்கிறோம்.நமது தலையிலிருந்து கிழக்கே 90 டிகிரியில் இருந்தால் அதை அதிகாலை என்கிறோம்.
நமது தலையிலிருந்து மேற்கே 90 டிகிரியில் இருந்தால் அதை இரவின் துவக்கம் என்கிறோம்.

சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது, நமக்குக் கிழக்கே 90 டிகிரியில் உள்ளவர்களின் பார்வையில் மறைந்து கொண்டிருப்பதாகக் காட்சியளிக்கும். அதாவது அவர்கள் இரவின் துவக்கத்தை அடைவார்கள்.

நம் தலைக்கு மேல் உள்ள இதே சூரியன், நமக்கு மேற்கே 90 டிகிரியில் வாழ்கின்ற மக்களுக்கு, அப்போது தான் உதிப்பதாகக் காட்சியளிக்கும்.

உலகத்துக்கு எல்லாம் ஒரே சூரியன் தான். ஆனால் அது நமக்கு நண்பகல் நேரத்தைக் காட்டும் போது சிலருக்கு அதிகாலை நேரத்தைக் காட்டுகிறது. மற்றும் சிலருக்கு அந்தி மாலை நேரத்தைக் காட்டுகிறது.

நமக்கு நண்பகலைக் காட்டும் நேரத்தில் பாதி உலகுக்கு அது அறவே தென்படாமல் இரவைக் காட்டிக் கொண்டிருக்கும்.

எனக்கு நண்பகல் என்பதால் அது முழு உலகுக்கும் நண்பகல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.

நமது நண்பர் சவூதியில் இருக்கிறார். சென்னையில் சூரியன் மறைந்தவுடன் நாம் நோன்பு துறக்க வேண்டும். நமது சவூதி நண்பருக்குப் போன் செய்து, சூரியன் மறைந்து விட்டது; நோன்பு துறங்கள்' என்று கூற மாட்டோம். கூறினால் அவர் கேட்க மாட்டார். ஏனெனில் நாம் நோன்பு துறக்கும் நேரத்தில் தான் அவர் அஸர் தொழுதிருப்பார்.

இதன் காரணமாகவே ஒரே சூரியன் என்பதை மறுத்ததாக ஆகுமா?........

இதே போல் தான் சந்திரனும் காலம் காட்டும்.

சவூதியில் காட்சி தந்த சந்திரன் அத்தோடு உலகை விட்டு ஓடி ஒளிந்து விடாது. சூரியனைப் போன்று ஒவ்வொரு வினாடியும் பூமியைச் சுற்றி, பூமி முழுமைக்கும் காட்சி தர தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்தச் சந்திரன் நமக்கு நேராக எப்போது வருகிறதோ அப்போது தான் அது நமக்குக் காலத்தைக் காட்டும்.

# சூரியன் காலம் காட்டுகிறது என்றால் சூரியனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

# சந்திரன் காலம் காட்டுகிறது என்றால் சந்திரனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

இந்த அறிவியல் உண்மை விளங்காத காரணத்தால் தான் உலகமெல்லாம் ஒரே பிறை என்று அறிவீனமான உளறலை, அறிவியல் முகமூடி அணிந்து மக்களைச் சிலர் வழி கெடுக்கின்றனர்.

____________________________________________
Jazakallah : onlinepj.com