August 16, 2012

பிறையை கண்களால் பார்த்து தீர்மானிப்பதே பிறை .. !

A :

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்
(திருக்குர்ஆன் : 2:185)

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது. திருக்குர்ஆன் ஏக இறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது.

“ஃபமன் ஷஹித மின் கும் அல் ஷஹ்ர“ (உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ)

ஆகிய ஏழு வார்த்தைகள் தேவையை விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது. இந்த வார்த்தைகள் ஒரு பயனும் இல்லாமல் ஒரு கருத்தையும் கூறாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வார்த்தையும் பொருளற்றதல்ல.

ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன்.

"உங்களில் அம்மாதத்தை அடைபவர்"

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது.

இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும் .

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும்.

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ ((திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.

ஆக

#அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

#ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

மேலும் சூரிய சந்திர கிரகணத்தில் புரிந்துகொண்ட நாம் :

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

"நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால்" (இவ்விடத்தில் முழு உலகமும் என்று எடுத்துக்கொள்ளலாமா?....)

கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா?

சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.

விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.

1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.

லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.

இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.

கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?

இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

-------------------------------------------------------
B:

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத், நஸயீயின்

பிறையைப் பார்த்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு கூட்டத்தினர் தெரிவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தினர் மதீனாவுக்கு அருகில் உள்ள ஊரிலிருந்து நிச்சயம் வந்திருக்க முடியாது.

அருகில் உள்ள ஊரிலிருந்து வந்திருந்தால் பிறை பார்த்தவுடன் அன்றிரவே வந்திருக்க முடியும். இரவில் ஓய்வு எடுத்துக் கொண்டால் கூட அதிகாலையில் புறப்பட்டு முற்பகலில் வந்திருக்கலாம். ஆனால் இக்கூட்டத்தினர் பகலின் கடைசி நேரத்தில் வந்ததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அஸரிலிருந்து மக்ரிபுக்குள் உள்ள நேரம் தான் பகலின் கடைசிப் பகுதியாகும்.

இவ்வளவு தாமதமாக வந்துள்ளார்கள் என்றால் அதிகமான தொலைவிலிருந்து பயணம் செய்து தான் இவர்கள் வந்திருக்க வேண்டும். நடந்து வந்த காரணத்தால் தாமதமாக வந்திருப்பார்களோ என்றும் கருத முடியாது. வாகனக் கூட்டம் என்று ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுகிறது. வாகனத்தில் வந்திருந்தும் மாலை நேரத்தில் தான் மதீனாவை வந்தடைகிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் அதிகமான தொலைவிலிருந்து தான் மதீனாவுக்கு வந்துள்ளனர் என்பது உறுதியான விஷயமாகும்.

எங்களுக்குப் பிறை தெரியாததால் நாங்கள் நோன்பு நோற்றோம் என்று தன்னிலையாக ஹதீஸ் ஆரம்பிக்கிறது.

வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதிக் கட்டத்தில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று கூறுகிறார்கள்.

இவர்களது கூற்றை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்ட கட்டளை எவ்வாறு அமைந்தது என்பது தான் கவனிக்க வேண்டிய, பலரும் கவனிக்கத் தவறிய அம்சமாகும்.

A -மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறு நாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

B - மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைகிறோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுகை தொழுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

C - மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்றனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் அவர்களது தொழும் திடலுக்கு அவர்கள் மறுநாள் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இங்கே நாம் சுட்டிக்காட்டிய மூன்று வாக்கிய அமைப்புகளில் முதலிரண்டு அமைப்புகளில் இந்த ஹதீஸ் அமைந்திருந்தால் இவர்களின் வாதம் ஏற்கக் கூடியது தான். ஆனால் நாம் மூன்றாவதாகக் குறிப்பிட்ட அமைப்பில் தான் ஹதீஸ் அமைந்துள்ளது.

நாங்கள் நோன்பு நோற்றோம்.
எங்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்றால் வெளியூர் சாட்சியத்தை ஏற்று உள்ளூர் மக்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

அல்லது மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தால் வெளியூர் கூட்டம் வந்து அளித்த சாட்சியத்தை ஏற்று எல்லா மக்களையும் நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்

மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்

யார் சாட்சியம் அளித்தார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது

தங்கள் ஊரில் பிறை பார்த்த பிறகும் பெருநாள் தொழுகையைத் தொழாமல், நோன்பையும் பிடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக இவர்கள் வந்துள்ளனர். பிறை பார்த்த பின்பும் நோன்பு நோற்றதும், பெருநாள் தொழுகையை விட்டதும் சரியில்லை என்பதால் அவர்களது நோன்பை முறிக்குமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அவர்களது தொழும் திடலுக்கு மறு நாள் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றால் கட்டளை யாருக்கு என்பது தெளிவாகவே விளங்குகிறது. பிறை பார்த்தவர்களுக்குத் தான் அந்தக் கட்டளையே தவிர பிறை பார்க்காமல் மேக மூட்டம் காரணமாக முப்பதாம் நோன்பு வைத்த உள்ளூர் மக்களுக்கு அல்ல!

அவர்களுக்கும் எங்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூட ஹதீஸில் கூறப்படவில்லை.

நாங்கள் என்று இவ்வாசகம் ஆரம்பமாகிறது. நாங்கள் என்று யார் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும். கூறப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டு சாராருக்கும் கட்டளையிட்டிருந்தால் எங்களுக்கும் அவர்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.
நாங்கள் அவர்கள் என்று இரு சாரார் பற்றிக் கூறும் போது அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறினால் நாங்கள் எனக் கூறியவர்களை அது கட்டுப்படுத்தாது என்பது யாருக்கும் தெரிந்த உண்மை!

----------------------------------------------------
C:

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பி
றையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம்

தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

குரைபுடைய கேள்வியே பெருநாளைப் பற்றியது தான். முஆவியா (ரலி) பிறை பார்த்த அடிப்படையில் முப்பது நாட்கள் பூர்த்தியாகின்றதே! அது உங்களுக்குப் போதாதா? என்ற கருத்தில் தான் குரைப் கேட்கிறார். அதற்குத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) போதாது. இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.

மதீனாவை விட சிரியாவில் ஒரு நாள் முன்னதாக பிறை பார்த்திருக்கிறார்கள். சிரியாவில் முப்பது நாட்களைப் பூர்த்தி செய்யும் போது மதீனவில் 29 நாட்கள் தான் பூர்த்தியாகியுள்ளது. சிரியாவில் பெருநாள் என்று உறுதியாகத் தெரிந்த பின்னரும் இப்னு அப்பாஸ் (ரலி) அதை ஏற்றுக் கொள்ளாமல், எங்களுக்கு 29 நாட்கள் தான் ஆகிறது. எனவே நாங்கள் பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்கள் பூர்த்தியாகும் வரை நோன்பு நோற்போம்' என்று கூறுகின்றார்கள்.

சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலைத் தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம். அதை இப்னு அப்பாஸ் (ரலி) மறுக்கின்றார் என்றால் தெலை தூரத்தில் பிறை பார்க்கப்பட்டால் அதை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியவில்லையா?

----------------------------------------------------
D:

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக்
கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் முப்பதாம் நாள் சுப்ஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: தாரகுத்னீ

இங்கே கிராம வாசிகள் (அஃராபிகள்) வந்து சாட்சி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. அஃராபிகள் என்றால் யார்?

ஒரு நகரத்தைச் சுற்றி வாழ்பவர்கள், எல்லா முக்கியத் தேவைகளுக்கும் அந்த நகரத்தையே சார்ந்திருப்பவர்கள் ஆகியோரே அஃராபிகளாவர். கிராமப்புறத்தார்கள் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இவர்கள் அதிகாலையிலேயே வந்து தகவல் கூறி விட்டதால் தொலைவிலிருந்து வரவில்லை. அருகிலிருந்து தான் வந்தனர் என்பது தெரிகிறது.

பயணக் கூட்டம் சம்பந்தமான ஹதீஸில் உள்ளது போல் இவர்கள் தொலைவிலிருந்து வரவில்லை.

# வாகனத்தில் வரவில்லை
# பகலின் கடைசி நேரத்திலும் வரவில்லை.

ஒரு வேளை மதீனாவில் ஜும்ஆ தொழும் இவர்கள் பெருநாள் தொழுவதற்காக மதீனா வந்திருக்கவும் அங்கே நோன்பு வைத்திருப்பதைக் கண்டதும் பிறை பார்த்த செய்தியைச் சொல்லி இருக்கவும் சாத்தியமுள்ளது.

இந்தச் சாத்தியத்தை ஏற்காவிட்டாலும் அஃராபுகள் என்போர் மதீனா நகரைச் சுற்றி வாழ்ந்த கிராமத்தார்கள் தான் என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு ஒவ்வொரு நகரத்தைச் சுற்றியும் அஃராபுகள் வாழ்ந்தாலும் மதீனாவுக்கு வந்தவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்தவர்களே.

இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இரண்டு நிகழ்ச்சிகளும் முரண்பட்டவையல்ல என்று பிரித்தறியலாம்.

கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு பொருள் கொண்டால் இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

முந்தைய நிகழ்ச்சி தூரத்தில் உள்ள வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்கலாகாது எனக் கூறுகிறது. பிந்தைய நிகழ்ச்சி ஓர் ஊரை ஒட்டிய கிராமத்தார் பிறை பார்ப்பது அந்த ஊரையும் கட்டுப்படுத்தும் என்பதைக் கூறுகிறது.

ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------
E:

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை.

மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.

பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள்.

சுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதை விட இந்த ஹதீஸ் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு எந்த வியாக்கியானமும் கூற முடியாது.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படா விட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம்.

மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பு நோற்பவர்களுக்கு இந்த ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.

பிறை பார்க்கத் தேவையில்லை. நாம் வானியல் அறிவின் துணை கொண்டு கணித்து விடலாம் என்று வாதிடக் கூடியவர்களுக்கும் இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளது.

---------------------------------------------------------------------
F:

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி - 1907

இந்த நபிமொழியும் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்குரிய ஆதாரங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது.

இந்த நபிமொழியின் கருத்துப்படி எந்த மாதத்துக்கும் 28 நாட்களோ அல்லது 31 நாட்களோ இருக்க முடியாது. மாதத்தின் குறைந்த பட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்ச அளவு 30 நாட்கள்; இதைத் தவிர வேறில்லை. நோன்பின் எண்ணிக்கை 29ஐ விடக் குறைவாகவோ, 30ஐ விட அதிகமாகவோ இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.

ஒருவர் எடுக்கும் ஒரு முடிவின் காரணமாக ரமளான் மாதத்துக்கு 28 நோன்பு என்ற நிலை வருமானால் அல்லது 31 நோன்பு என்ற நிலை ஏற்படுமானால் நிச்சயமாக அந்த முடிவு தவறான முடிவாகத் தான் இருக்க முடியும்.

உதாரணமாக சவூதியில் ஜனவரி முதல் தேதியன்று மாலை 7 மணிக்கு தலைப்பிறையைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகம் முழுவதற்கும் அது தான் தலைப்பிறை என்ற வாதத்தின் படி ஏற்படும் விளைவைப் பார்ப்போம்.

சவூதியில் 7 மணியாக இருக்கும் போது லண்டனில் மாலை நான்கு மணியாக இருக்கும். அதாவது லண்டனில் மாலை நான்கு மணிக்கு ரமளான் துவங்குகிறது.

இவர்களின் வாதப்படி ரமளான் மாதத்தின் பகல் நேரத்தை லண்டன் மக்கள் அடைந்து விட்டதால் நான்கு மணி முதல் சூரியன் மறையும் வரை நோன்பு நோற்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும்.

நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)
நூல்: நஸயீ

எனவே லண்டனில் நான்கு மணியை அடைந்தவர் பிறை தோன்றுமா தோன்றாதா என்பது தெரியாத நிலையில் கடந்த இரவே நோன்பு நோற்பதாகத் தீர்மானம் செய்திருக்க முடியாது.

இவர்களின் வாதப்படி நான்கு மணிக்கு லண்டன்வாசி ரமளானை அடைந்து விட்டார். ஆனாலும் இந்த நோன்பை அவர் நோற்கத் தேவையில்லை என்ற முடிவைத் தான் கூற வேண்டி வரும். அதாவது ரமளானை அவர் அடைந்தும் நோன்பு நோற்காத நிலை அவருக்கு ஏற்படுகிறது. இதனால் யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற திருக்குர்ஆன் வசனம் மீறப்படுகிறது.


இப்படியே 29 நாட்கள் கழிகின்றன. 29ல் மாதம் முடிந்து அன்று இரவு சவூதியில் ஷவ்வால் பிறை தோன்றி விட்டது. இந்த நேரத்தில் லண்டன் மக்கள் மாலை நான்கு மணியை அடைந்திருப்பார்கள்.

இவர்கள் வாதப்படி மாலை நான்கு மணிக்கு ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை லண்டன் மக்கள் அடைந்து விட்டார்கள். அதாவது நோன்புப் பெருநாள் தினத்தை அவர்கள் அடைந்து விட்டார்கள். நோன்புப் பெருநாளில் நோன்பு நோற்பது ஹராம் என்பதை அனைவரும் அறிவோம்.

எனவே அவர்கள் நான்கு மணிக்கு நோன்பை முறித்து விட வேண்டும். அதாவது 29வது நோன்பை முறித்து விட வேண்டும். இந்தக் கணக்குப்படி 28 நோன்பு தான் இவர்கள் நோற்றுள்ளனர்.

குறைந்த பட்சம் 29 நோன்புகள் நோற்க வேண்டும் என்ற நபிமொழிக்கு மாற்றமான நிலை இங்கே ஏற்படுகிறது நாம் பார்த்த பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று கூறினால் உலகின் பல பகுதியினர் 28 நோன்பு தான் பிடிக்க முடியும். ஏதோ தவறுதலாக எப்போதோ 28 நோன்பு பிடிப்பது போன்றதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. எந்த மாதம் 29 நாட்களுடன் முடிகின்றதோ அந்த மாதங்களில் காலமெல்லாம் இந்தத் தவறை உலகில் பாதிப்பேர் செய்து கொண்டிருப்பார்கள்.

ஒரு நாள் என்று சொன்னால் அதற்கு ஆரம்ப நேரம் ஒன்று இருக்க வேண்டும்; முடிவு நேரம் ஒன்று இருக்க வேண்டும். உதாரணமாக, ஆங்கில நாள் என்பது நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் ஆரம்பமாகிறது. நமது ஊரில் நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் உலக மக்கள் அனைவரும் மறு நாளில் நுழைந்து விட்டார்கள் என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் ஒவ்வொருவருக்கும் நாளின் துவக்கம் வெவ்வேறாக அமைந்து விடும்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பதும் இல்லாமல் போய் விடும்.

எனவே சவூதியில் பிறை பார்த்தவுடன் அவர்களுக்கு நாள் மாறி விட்டது என்பது உண்மை! இதன் காரணமாக அமெரிக்காவிலும் நாள் மாறி விட்டது என்று கூறினால் அவர்களுக்குக் காலையிலிருந்து நாள் ஆரம்பமாகும் நிலை ஏற்படும். மேலும் முதல் நாளில் அவர்களுக்கு 12 மணி நேரம் தான் கிடைக்கும். எனவே எந்த ஊரில் பிறை பார்க்கப்பட்டதோ அவர்களுக்குத் தான் நாள் துவங்குகிறது என்று கூறினால் அந்தக் குழப்பம் ஏற்படாது.

-----------------------------------------------------------------
G:

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
அல்குர்ஆன் 6:96

உலகமெல்லாம் ஒரே சூரியன், உலகமெல்லாம் ஒரே சந்திரன் ?...........

உலகத்தில் ஒரே சந்திரன் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சந்திரன் எப்படி உலகுக்கெல்லாம் ஒன்று தான் உள்ளதோ அது போல் உலகம் முழுவதற்கும் ஒரு சூரியன் தான் உள்ளது. சந்திரன் எப்படி காலத்தைக் காட்டுவதாக உள்ளதோ அது போல் தான் சூரியனும் நமக்குக் காலம் காட்டியாக உள்ளது.

சூரியன் நமக்கு இரவு, பகலைக் காட்டுகிறது. காலை, மாலை, நண்பகல் போன்ற நேரங்களையும் காட்டுகிறது. எப்படிக் காட்டுகிறது என்றால் நமது ஊரிலிருந்து அது எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலத்தைக் காட்டுமே தவிர சூரியனே காலத்தைக் காட்டாது.

நமது தலைக்கு நேராக 0 டிகிரியில் அது இருந்தால் நண்பகல் என்கிறோம்.நமது தலையிலிருந்து கிழக்கே 90 டிகிரியில் இருந்தால் அதை அதிகாலை என்கிறோம்.
நமது தலையிலிருந்து மேற்கே 90 டிகிரியில் இருந்தால் அதை இரவின் துவக்கம் என்கிறோம்.

சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது, நமக்குக் கிழக்கே 90 டிகிரியில் உள்ளவர்களின் பார்வையில் மறைந்து கொண்டிருப்பதாகக் காட்சியளிக்கும். அதாவது அவர்கள் இரவின் துவக்கத்தை அடைவார்கள்.

நம் தலைக்கு மேல் உள்ள இதே சூரியன், நமக்கு மேற்கே 90 டிகிரியில் வாழ்கின்ற மக்களுக்கு, அப்போது தான் உதிப்பதாகக் காட்சியளிக்கும்.

உலகத்துக்கு எல்லாம் ஒரே சூரியன் தான். ஆனால் அது நமக்கு நண்பகல் நேரத்தைக் காட்டும் போது சிலருக்கு அதிகாலை நேரத்தைக் காட்டுகிறது. மற்றும் சிலருக்கு அந்தி மாலை நேரத்தைக் காட்டுகிறது.

நமக்கு நண்பகலைக் காட்டும் நேரத்தில் பாதி உலகுக்கு அது அறவே தென்படாமல் இரவைக் காட்டிக் கொண்டிருக்கும்.

எனக்கு நண்பகல் என்பதால் அது முழு உலகுக்கும் நண்பகல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.

நமது நண்பர் சவூதியில் இருக்கிறார். சென்னையில் சூரியன் மறைந்தவுடன் நாம் நோன்பு துறக்க வேண்டும். நமது சவூதி நண்பருக்குப் போன் செய்து, சூரியன் மறைந்து விட்டது; நோன்பு துறங்கள்' என்று கூற மாட்டோம். கூறினால் அவர் கேட்க மாட்டார். ஏனெனில் நாம் நோன்பு துறக்கும் நேரத்தில் தான் அவர் அஸர் தொழுதிருப்பார்.

இதன் காரணமாகவே ஒரே சூரியன் என்பதை மறுத்ததாக ஆகுமா?........

இதே போல் தான் சந்திரனும் காலம் காட்டும்.

சவூதியில் காட்சி தந்த சந்திரன் அத்தோடு உலகை விட்டு ஓடி ஒளிந்து விடாது. சூரியனைப் போன்று ஒவ்வொரு வினாடியும் பூமியைச் சுற்றி, பூமி முழுமைக்கும் காட்சி தர தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்தச் சந்திரன் நமக்கு நேராக எப்போது வருகிறதோ அப்போது தான் அது நமக்குக் காலத்தைக் காட்டும்.

# சூரியன் காலம் காட்டுகிறது என்றால் சூரியனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

# சந்திரன் காலம் காட்டுகிறது என்றால் சந்திரனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

இந்த அறிவியல் உண்மை விளங்காத காரணத்தால் தான் உலகமெல்லாம் ஒரே பிறை என்று அறிவீனமான உளறலை, அறிவியல் முகமூடி அணிந்து மக்களைச் சிலர் வழி கெடுக்கின்றனர்.

____________________________________________
Jazakallah : onlinepj.com