- நபித் தோழர்கள் என்போர் யார்?
நபித் தோழர்களைப் பின்பற்றலாமா? கூடாதா? என்ற தலைப்புக்குச் செல்வதற்கு முன்னால் நபித் தோழர்கள் என்பதன் இலக்கணத்தை அறிந்து கொள்வோம்.தமிழ் மொழியில் தோழர்கள் என்ற சொல் நெருக்க மான நண்பர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.ஒரே ஊரையும், ஒரே தெருவையும் சேர்ந்த இருவர் நெருங்கிய நண்பர்களாக இல்லாவிட்டால் அவர்களைத் தோழர்கள் என்று நாம் குறிப்பிடுவதில்லை.ஒரு கல்வி நிலையத்தில் பயிலும் நூற்றுக் கணக்கா னோர் தினமும் பல முறை சந்தித்துக் கொண்டாலும், அவர்களிடையே நல்ல அறிமுகம் இருந்தாலும் தோழர்கள் என்று கூறுவதில்லை. நூற்றுக் கணக்கான மாணவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தான் ஒருவர் தோழர் என்று கூறுவார்.நபித் தோழர்கள் என்பதை நாம் இவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாதுஅரபு மொழியில் சாஹிப், சஹாபி என்று ஒருமையி லும், சஹாபா, அஹாப் என்று பன்மையிலும் குறிப்பிடப் படுவதைத் தான் தமிழில் நபித் தோழர் என்று குறிப்பிடுகிறோம்.அரபு மொழியில் இச்சொல்லுக்கு ஆழமான நட்பைக் குறிக்கும் தோழமை என்பது பொருளல்ல.ஒரு பள்ளிக் கூடத்தில் ஒரு கால கட்டத்தில் படிக்கும் அனைவருமே அஹாப், சஹாபா என்ற பெயரால் குறிப்பிடப்படுவார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தாலே இவருக்கு அவர் சஹாபி என்று கூறலாம். நாம் அமர்ந் திருக்கும் சபையில் நமக்கருகே ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கும், நமக்கும் எந்த அறிமுகமும் இல்லை என்ற போதும் எனது சாஹிப் அல்லது சஹாபி என்று அவரைக் குறிப்பிடலாம்.இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. அரபு மொழி வழக்கத்தையும், நபிமொழிகளையும் ஆதாரமாகக் கொண்டே இவ்வாறு கூறுகிறோம்.இரண்டு முஸ்லிம்கள் வாள் முனையில் சந்தித்துக் கொண்டால் கொன்றவனும், கொல்லப்பட்டவனும் நரகத்தி லிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் ``அல்லாஹ்வின் தூதரே! கொலை செய்தவன் நரகம் செல்வது சரி. கொல்லப் பட்டவனின் நிலை எப்படி? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டவன் தனது சஹாபியை (தோழரை) கொல்வதில் ஆர்வமுள்ளவனாகத் தானே இருந்தான் என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர் : அபூ பக்ர் (ரலி),நூல் : புகாரி 31, 6875, 7083வாள் முனையில் சந்தித்து சண்டையிட்ட இரு வரையும் ஒருவருக்கு மற்றவர் சாஹிப் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.'வெள்ளிக் கிழமை இமாம் உரை நிகழ்த்தும் போது உனது சாஹிபை (அருகில் இருப்பவரை) பார்த்து வாயை மூடு என்று நீ கூறினால் நீ பாழக்கி விட்டாய்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)நூல் : புகாரி 934ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்துள்ள மற்றவர் சாஹிப் என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இது போல நூற்றுக் கணக்கான சான்றுகளை நாம் காண முடியும்.ஒரு காலத்தில் வாழ்ந்து எதிரிகளாக இருப்பவர்கள் கூட சாஹிப் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் பைத்தியம் என்று பட்டம் சூட்டியதைக் கண்டிக்கும் போது
’இவர்களுடைய சாஹிபுக்கு (தோழருக்கு) பைத்தியம் இல்லை என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா? என்று அல்லாஹ் கூறுகிறான்.பார்க்க : திருக்குர்ஆன் 7:184, 34:46, 53:2, 81:22யூசுப் நபியுடன் சிறையில் இருந்த இருவரைப் பற்றிக் கூறும் போது தமது சாஹிப்கள் என்று யூசுப் நபி கூறியதாக அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.பார்க்க : திருக்குர்ஆன் 12 : 39-41சம காலத்தில் வாழ்ந்த ஒரு கெட்டவனையும், நல்லவனையும் குறிப்பிடும் போது ``அவனது சாஹிப் கூறினான் என்று அல்லாஹ் கூறுகிறான்.பார்க்க : திருக்குர்ஆன் 18:34-37சஹாபி என்ற சொல் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கும் சொல் அல்ல. அறிமுகமான இருவரைக் குறிக்கும் சொல் தான் அது.அறிமுகமான இருவருக்கிடையே ஆழமான நட்பு இருந்தாலும், சிறிய அளவிலான நெருக்கம் இருந்தாலும், பகைமை இருந்தாலும் அனைவருமே சாஹிப் என்ற சொல்லால், சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்படுவார்கள்.அகராதியின்படி இச்சொல்லின் பொருள் இது தான் என்றாலும் சஹாபி என்ற சொல்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைச் சேர்த்து 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சஹாபி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாஹிப்' என்று பயன்படுத்தும் போது இவ்வாறு பொருள் கொள்வதில்லை.
- அறிமுகமான எதிரி
- அறிமுகமான உயிர் நண்பன்
- எதிரியும், நண்பனும் இல்லாமல் அறிமுகமானவர்
ஆகிய மூன்று பொருள்களில் சஹாபி என்ற சொல்லை அகராதியின்படி பயன்படுத்தலாம் என்றாலும் நபியின் சஹாபி என்று பயன்படுத்தும் போது முதல் அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. மற்ற இரண்டு அர்த்தங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வளவு அறிமுகமானவராக இருந்தாலும் சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்பட மாட்டார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய நண்பரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஓரிரு முறை சந்தித்துக் கொண்ட முஸ்லிமும் சஹாபி என்ற சொல்லில் அடங்குவார்கள்.இதனால் தான் சஹாபி என்பதற்கு இலக்கணம் கூறும் அறிஞர்கள் முஸ்லிமாக இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு தடவையாவது கண்ணால் கண்டவர் என்று கூறுகின்றனர்.
- இந்த இலக்கணத்தின் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர் களின் உற்ற தோழர்களாகத் திகழ்ந்த அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) போன்றவர்களும் சஹாபி என்பதில் அடங்குவார்கள்.
- முஸ்லிமாக இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு தடவை சந்தித்தவரும் இதில் அடங்குவார்கள்.
நபித் தோழர்கள் என்று கூறப்படும் எத்தனையோ பேரின் பெயர்களோ அவர்களைப் பற்றி மற்ற விபரங்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன. இவர்கள் முஸ்லிம்கள் என்பது மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியும். இத்தகையோரும் சஹாபி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர்.இவ்விரு வகையினரையும் தான் நபித் தோழர்கள் என்று நாம் குறிப்பிடுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்
- நபித் தோழர்களின் சிறப்புகள்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித் தோழர்கள் இலாத்தை ஏற்றதால் பல வகையில் மற்றவர்களை விட அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக் கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.திருக்குர்ஆன் : 7:157கிராம வாசிகளில் அல்லாஹ் வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.திருக்குர்ஆன் : 9:99,100அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.திருக்குர்ஆன் : 9:108இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித் தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.திருக்குர்ஆன் : 9:117,118அல்லாஹ்வின் பாதையில் செலவிடா திருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.திருக்குர்ஆன் : 57:10அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்..திருக்குர்ஆன் : 59:9நபித் தோழர்களின் நம்பிக்கை, கொள்கை உறுதி, மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையை மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் புகழ்ந்து போற்றுகிறான்.'என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)நூல் : புகாரி : 3673என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)நூல் : திர்மிதி : 3797உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப் படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695நபித் தோழர்களைச் சிறப்பித்துக் கூறும் இது போன்ற வசனங்களும், நபிமொழிகளும் உள்ளதால் நபித் தோழர்களை நாமும் மதிக்கிறோம்.மனிதர்கள் என்ற வகையில் நபித் தோழர்களிடம் எத்தகைய பாரதூரமான காரியங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களின் தியாகத்தைக் கவனத்தில் கொண்டு அவர் களை அல்லாஹ் மன்னிப்பான் என்று நாம் நம்புகிறோம்.சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட நபித் தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போர் செய்து கொண்டாலும் அந்தச் செயலை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டோமே தவிர அவர்கள் தவறுகள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திலேயே சஹாபாக்கள் சிறந்தவர்கள் என்பதே நமது நிலைபாடு.சஹாபாக்களைக் கண்ணியப்படுத்தி மதிப்பது வேறு! அவர்களைப் பின்பற்றி நடப்பது வேறு. குர்ஆனுக்கும், நபிமொழிக்கும் முரணாக எவ்வளவு பெரிய நபித் தோழர் நடந்திருந்தாலும் அதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாது.குர்ஆனிலும், நபிவழியிலும் கூறப்படாத வணக் கத்தை எவ்வளவு பெரிய நபித் தோழர் உருவாக்கி அறிமுகப் படுத்தியிருந்தாலும் அதைப் பின்பற்றக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம்.திருக்குர்ஆனும், நபிவழியும் அப்படித் தான் நமக்கு வழிகாட்டுகின்றன என்பதால் அதைப் பின்பற்றியே நாமும் அவ்வாறு கூறுகிறோம்.
____________________________________________________________________
Jazakallah http://onlinepj.com/books/nabithozarkalum-namathu-nilaiyum/