October 20, 2011

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா ?.... (தொடர்-4)















தொடர்-1 : http://ashkarfuard.blogspot.com/2011/10/new-2.html
தொடர்-2 : http://ashkarfuard.blogspot.com/2011/10/new-3.html
தொடர்-3 : http://ashkarfuard.blogspot.com/2011/10/new-4.html


  • நம்பகமானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா?

குர்ஆனிற்கு மாற்றமாக ஹதீஸ் வந்தால் இதில் நம்பகமான ஆட்கள் இருந்தாலும் இவர்களில் யாராவது தவறு செய்திருப்பார்களே தவிர நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம். அது எப்படி நல்லவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் உள்ள அறிவிப்பாளர்களிடமிருந்து தவறு வரும் என்று இதை அங்கீகரிக்காதவர்கள் கேட்கிறார்கள். 

மனிதர்களாகப் பிறந்த எவரும் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க முடியாது. இது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. சாதாரண மனிதன் கூட விளங்கிக் கொண்ட உண்மை இது. இதனால் தான் சில நபித்தோழர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சில ஹதீஸ்களைச் சொல்லும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த நபித்தோழர்கள் நல்லவர்கள் என்று சான்று தந்ததோடு தவறாக விளங்கியிருப்பார்கள் என்று கூறினார்கள். 

இதையெல்லாம் சொன்னாலும் இவர்கள் எதர்கெடுத்தாலும் ஹதீஸ் கலையில் இப்படி உள்ளதா? யாராவது உங்களுக்கு முன்னால் இது போன்று சொல்லியுள்ளார்களா? என்று கேட்பார்கள். எனவே இதற்கான சான்றுகளை ஹதீஸ் கலையிலிருந்து வழங்குவது நல்லதாகும். 

  • இமாம் அஹ்மத் பின் ஹம்பல் :

العلل - (ج 1 / ص 20)
لم يقتصر أهل الحديث على جمع التراجم بل بحثوا دقيقا في مروياتهم حتى روايات الثقات المعروفين منهم ولم يعتمدوا على كونهم ثقات ولم يفعوهم من البحث والنقد. فإن الثقة قد يهم ويخطى، فطرة الله التي فطر الناس عليها. فبحثوا في رواياتهم التي وهموا أو أخطأوا فيها، هذا ما عرف بعلم علل الحديث.

அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார் : ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள். அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை. 

ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான். எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள். இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குب சொல்லப்படும். 
நூல் : அல்இலல் பாகம் : 1 பக்கம் : 20

  • இமாம் தஹபீ :

تهذيب التهذيب ج: 7 ص: 208
والثقة قد يهم في الشيء

நம்பகமானவர் சிலவேளை சில விஷயங்களில் தவறு செய்வார். 

  • இமாம் சுயூத்தி :

تدريب الراوي ج: 1 ص: 75
وإذا قيل هذا حديث صحيح فهذا معناه أي ما اتصل سنده مع الأوصاف المذكورة فقبلناه عملا بظاهر الاسناد لا أنه مقطوع به في نفس الأمر لجواز الخطأ النسيان على الثقة

இது சஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம். எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம். நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம். 
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 75

  • மஹ்மூத் தஹ்ஹான் : 

المراد بقولهم : (هذا حديث صحيح ) أن الشروط الخمسة السابقة قد تحققت فيه لا أنه مقطوع بصحته في نفس الأمر لجواز الخطأ والنسيان على الثقة .

இது சரியான செய்தி என்று அறிஞர்கள் சொன்னால் முன்னால் சென்ற ஐந்து நிபந்தனைகள் இந்தச் செய்தியில் பெறப்பட்டுள்ளது என்பது தான் அதன் பொருள். உண்மையில் அந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது என்ற அர்த்தம் அல்ல. ஏனென்றால் உறுதி மிக்கவரிடத்தில் கூட தவறும் மறதியும் வர வாய்ப்புண்டு. 
நூல் : தய்சீரு முஸ்தலஹில் ஹதீஸ் பக்கம் : 36

நம்பகமானவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக அறிவிக்கும் போது இவர்களில் யாரோ தவறு செய்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து விடுகிறது. குர்ஆனிற்கு முரண்பாடாக அறிவிப்பதை வைத்து இவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்று கூறுகிறோமே தவிர நாமாக யூகமாகக் கூறவில்லை. இந்த அடிப்படையில் தான் குர்ஆனிற்கு மாற்றமாக நம்பகமானவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம். 

நாம் எந்த ஹதீஸ்களைக் குர்ஆனிற்கு மாற்றமாக உள்ளது என்று கூறி மறுக்கிறோமோ அதில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தவறாக விளங்கிவிடக் கூடாது. 

குர்ஆனிற்கு முரண்படாதவாறு நம்பகமானவர்கள் அறிவித்தால் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் இந்த ஹதீஸ்களில் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. நல்லவர்கள் முறையாக அறிவிப்பார்கள் என்ற பொதுவான நிலையைக் கவனித்து அவர்கள் அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்வோம். தவறு செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்தை இங்கு புகுத்தினால் உலகத்தில் யாரும் யாருடைய அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதா?
புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்று இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்ரஸாக்களில் படித்த மார்க்க அறிஞர்களும் இவர்களைப் போன்றே நினைக்கிறார்கள். 

இதனால் தான் புகாரி முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸ்களை நாம் விமர்சிக்கும் போது சொல்லப்படுகின்ற விமர்சனம் சரியா? தவறா? என்று பார்க்காமல் புகாரியில் பதிவு செய்யப்பட்டு விட்டாலே அதை விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். 

புகாரி முஸ்லிமில் உள்ள ஹதீஸ்களைப் பற்றிய முழுமையான அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு கூற மாட்டார்கள். மாபெரும் அறிஞரான இமாம் தாரகுத்னீ அவர்கள் புகாரி இமாம் பதிவு செய்த பல ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்கள். 

புகாரிக்கு விரிவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலைக் கூறினாலும் சில இடங்களில் சொல்லப்பட்ட குறையை ஏற்றுக் கொள்கிறார். அந்தக் குறைகளுக்கு பதில் இல்லை என்றும் ஒத்துக் கொள்கிறார். 

சில நேரத்தில் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறிவிப்பாளரை அறிஞர்கள் விமர்சனம் செய்யும் போது அந்த விமர்சனத்திற்கு முறையான பதில் ஏதும் இப்னு ஹஜர் அவர்களால் சொல்ல முடிவதில்லை. இந்த இடத்தில் இவரிடம் இமாம் புகாரி அவர்கள் குறைவாகத் தான் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதை மட்டும் தான் இப்னு ஹஜர் பதிலாகக் கூறுகிறார்.

புகாரிக்கு மாபெரும் தொண்டாற்றிய மாபெரும் மேதை இப்னு ஹஜர் அவர்களே புகாரியில் உள்ள அனைத்தும் ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக் கொள்ளாத போது இவர்கள் புகாரியில் உள்ள அனைத்தும் சரி என்று இவர்கள் வாதிடுவது தான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 

  • இப்னு ஹஜரின் விளக்கம்

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு எழுதிய விரிவுரையின் முன்னுரையை முறையாகப் படித்தவர்கள் புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது என்றக் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

فتح الباري - ابن حجر ள جزء 1 - صفحة 346 ன 
وقوله في شرح مسلم وقد أجيب عن ذلك أو أكثره هو الصواب فإن منها ما الجواب عنه غير منتهض

இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் : புகாரியில் சொல்லப்பட்ட விமர்சனங்களில் அதிகமானவைகளுக்கு பதில் தரப்பட்டு விட்டது என்று முஸ்லிமுடைய விரிவுரையில் முஹ்யித்தீன் என்பவர் கூறியது தான் சரியானதாகும். ஏனென்றால் இந்த விமர்சனங்களில் சிலவற்றிற்கு பதில் (இன்னும்) கிடைக்கவில்லை. 
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346

فتح الباري - ابن حجر ள جزء 1 - صفحة 385 ன 
وقد تشتد المخالفة أو يضعف الحفظ فيحكم على ما يخالف فيه بكونه منكرا وهذا ليس في الصحيح منه الا نزر يسير

இப்னு ஹஜர் கூறுகிறார் : சில வேளை அறிவிப்பாளர்கள் மிகவும் மோசமாக முரண்பட்டு அறிவிப்பார்கள். அ;ல்லது (அவர்களின்) மனனத்தன்மை பலவீனமாகி விடும். இந்நேரத்தில் (தன்னை விட வலிமையானவர்களுக்கு) மாற்றமாக அறிவிக்கப்படும் செய்திக்கு முன்கர் (மறுக்கப்பட வேண்டியது) என்று முடிவு கட்டப்படும். இது போன்ற செய்தி புகாரியில் குறைவாக தவிர (அதிகமாக) இல்லை. 
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 385

فتح الباري - ابن حجر ள جزء 1 - صفحة 346 ன 
 وقد تعرض لذلك بن الصلاح في قوله إلا مواضع يسيرة انتقدها عليه الدارقطني وغيره وقال في مقدمة شرح مسلم له ما أخذ عليهما يعني على البخاري ومسلم وقدح فيه معتمد من الحفاظ فهو مستثنى مما ذكرناه لعدم الإجماع على تلقيه بالقبول انتهى وهو احتراز حسن

தாரகுத்னீ (புகாரியில்) விமர்சனம் செய்த சில இடங்களைத் தவிர (மற்ற செய்திகள் அனைத்திற்கும் அங்கீகாரம் உண்டு) என்ற கருத்தையே இப்னுஸ்ஸலாஹ் ஏற்றுள்ளார். அவர் முஸ்லிமுடைய விரிவுரையின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார் : புகாரி மற்றும் முஸ்லிமில் நம்பத் தகுந்த அறிஞர் ஒருவர் குறை கூறினால் (அனைத்து சமூகத்தின் அங்கீகாரமும் புகாரிக்கு உண்டு என்று நாம் முன்பு) கூறியதிலிருந்து (குறைகூறப்பட்ட) இந்தச் செய்தி விதிவிலக்கானதாகும். ஏனெனன்றால் இந்த விமர்சிக்கப்பட்ட ஹதீஸில் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

இப்னு ஹஜர் கூறுகிறார் : இவ்வாறு விதிவிலக்கு கொடுப்பது அழகானதாகும். 
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346

فتح الباري - ابن حجر جزء 1 - صفحة 383 
وليست كلها قادحة بل أكثرها الجواب عنه ظاهر والقدح فيه مندفع وبعضها الجواب عنه محتمل واليسير منه في الجواب عنه تعسف

இப்னு ஹஜர் கூறுகிறார் : புகாரியில் சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங்களும் (புகாரியில்) குறை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மாறாக இந்த விமர்சனங்களில் அதிகமானவைகளுக்கு தெளிவாக பதில் உள்ளது. அந்த விமர்சனத்தில் குறை சொல்ல முடியாது. சில விமர்சனங்களுக்கு தெளிவற்ற விதத்தில் பதில் உள்ளது. சில விமர்சனங்களுக்கு பதில் சொல்வது கடினம். 

மேற்கண்ட வாசகங்களையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதிலைத் தரும் முயற்சியில் இறங்கிய கல்வி மேதை இப்னு ஹஜர் அவர்களே சில விமர்சனங்களுக்குப் பதில் சொல்லமுடியவில்லை என்று ஒத்துக் கொண்டு அதைத் தன் நூலில் எழுதியிருக்கும் போது புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது தான் என்று அறிவுள்ளவர்கள் எப்படிக் கூறுவார்கள்?

புகாரியில் நபி (ஸல்) அவர்களுடைய கூற்றுக்கள் மட்டும் பதிவு செய்யப்படவில்லை. நபித்தோழர்களின் கூற்று நபித்தோழர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். 

அம்ர் பின் மைமூன் என்பார் கூறியதாவது : அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். 
அறிவிப்பவர் : அமர் பின் மைமூன் 
நூல் : புகாரி (3849)

இது போன்ற சம்பவம் நடந்தது என்று அறிவுள்ளவர்கள் யாரும் கூற மாட்டார்கள். 

குரங்குகளுக்கு திருமணம் உட்பட எந்த பந்தமும் கிடையாது. மனிதர்களுக்கு சொல்லப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு மிருகங்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவும் இல்லை. மனிதனுக்குச் சொல்லப்பட்ட சட்டத்தை குரங்குகள் நடைமுறைப்படுத்தியது என்பதை நியாயவான்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

தெளிவாகப் பொய் என்று தெரியும் இந்தச் சம்வத்தை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்தார்கள் என்பதற்காக நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? 

ஹதீஸ் தொகுப்பு நூற்களில் சிறந்த நூற்கள் என்று முதலாவதாக புகாரியையும் இரண்டாவதாக முஸ்லிமையும் கூறலாமே தவிர குர்ஆனைப் போன்று ஒரு தவறும் இல்லாத நூல் என்ற சிறப்பை இவைகளுக்குத் தர முடியாது. இச்சிறப்பை இறைவன் தன் வேதத்திற்கும் மட்டும உரியதாக்கியுள்ளான். 

புகாரி மற்றும் முஸ்லிமில் பலவீனமான அறிவிப்பாளர்களும் அறியப்படாதவர்களும் மிகக் குறைவாக இருக்கிறார்கள். மற்ற புத்தகங்களில் இருப்பதைப் போல் மோசமான கருத்தைக் கொண்ட செய்தியும் இவற்றில் குறைவாக இடம்பெற்றுள்ளது. 

எனவே மற்ற புத்தகங்களில் இடம்பெற்ற செய்திகளை ஹதீஸ் கலைக்கு உட்பட்டு அனுகுவதைப் போல் புகாரி முஸ்லிமில் உள்ள செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 
புகாரி இமாம் பதிவு செய்த ஹதீஸ்களை பல அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அது சரியானதா? தவறானதா? என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதற்குப் பல சான்றுகள் நம்மிடம் உள்ளன. 

அஹ்லுல் குர்ஆன் ஏன் தோன்றினார்கள்?
______________________________________

குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதல் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் இரண்டும் மார்க்க ஆதாரம் என்பதிலும் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 

ஆனால் இரண்டும் பாதுகாக்கப்பட்ட விதத்தில் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களைக் கூறுவதால் ஹதீஸ்களைப் பின்தள்ளுகிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. குர்ஆனா ஹதீஸா என்று வரும் போது இரண்டில் எதை எடுப்பது என்ற கேள்விக்கான பதிலாகத் தான் இந்த வித்தியாசங்களைக் கூறுகிறோம். 

1. குர்ஆன் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் அனைத்து நபித்தோழர்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. 

2. நபி (ஸல்) அவர்களின் காலத்திலே குர்ஆனைப் பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டு குழப்பங்கள் பரவுவதற்கு முன்பே உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் நிறைவுக்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆன பிறகு நபி (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டுவது அதிகரித்த காலத்தில் ஹதீஸைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இமாம்கள் ஹதீஸைத் தொகுக்கும் முயற்சியை முடுக்கி விட்டார்கள். பெரும்பாலான அறிஞர்கள் அறிவிப்பாளர் தொடர்களை ஆராய்ந்து பார்த்த அளவிற்கு செய்திகளை ஆராயவில்லை. 

3. குர்ஆனும் ஹதீஸும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹதீஸை எழுதி வைப்பதை ஆரம்பத்தில் தடை செய்தார்கள். முதலில் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக குர்ஆனை மட்டும் எழுதி வைக்கச் சொன்னார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இறங்கிய குர்ஆன் வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக்காட்டுவார். குர்ஆன் தூய வடிவில் முழு பாதுகாப்புடன் விளங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இரு முறை குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள். இது போன்ற சிறப்புக் கவனம் ஹதீஸ்களுக்குக் கொடுக்கப்படவில்லை. 

4.நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே ஒலி வடிவில் பல உள்ளங்களில் குர்ஆன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குர்ஆன் பதிவுசெய்யப்பட்டதைப் போல் பல உள்ளங்களில் ஹதீஸ் பதிவு செய்யப்படவில்லை. 

5.குர்ஆன் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கவனத்திற்கும் காலங்காலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஹதீஸ் இவ்வாறு அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வரப்படவில்லை. 

இது போன்ற வித்தியாசங்களைக் கவனிக்கும் போது பாதுகாக்கப்பட்ட விதத்தில் ஹதீஸை விட குர்ஆன் வலிமை வாய்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த வித்தியாசங்களினால் தான் பல அறிஞர்கள் குர்ஆனிற்கு கதயீ என்றும் ஹதீஸிற்கு லன்னீ என்று பிரித்துக் கூறியுள்ளார்கள். கதயீ என்றால் அதில் ஒரு போதும் எப்போதும் எந்த விதமான தவறுகளும் வராது என்று பொருள். லன்னீ என்றால் அதில் தவறு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று பொருள். 

இதை மையமாக வைத்து குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை அறிவித்தவர்களிடத்தில் தவறு வர வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். குர்ஆனுடன் ஹதீஸ் முரண்படும் போது ஹதீஸை வைத்து குர்ஆனுடைய சட்டத்தையும் மாற்ற மாட்டார்கள். ஹதீஸை விட குர்ஆன் வலிமையானது என்பதே இதற்குக் காரணம். 

நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளில் ஒன்று இன்னொன்றுக்கு முரண்படுவதுண்டு. முரண்படும் செய்திகள் அனைத்தும் ஒன்றை விட இன்னொன்றுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாத விதத்தில் எல்லாம் ஒரே தரத்தில் அமைவதோடு அவைகளை இணைத்து எந்த விளக்கமும் கொடுக்க முடியவில்லையென்றால் இப்போது அறிஞர்கள் இந்த ஹதீஸ்களில் எதையும் ஏற்க மாட்டார்கள். இந்த வகைக்கு முள்தரப் (குளறுபடியுள்ளது) என்று பெயர் வைத்துள்ளார்கள். 

இரண்டு நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி முரண்படும் போது இருவரில் யார் வலிமை மிக்கவர் என்று பார்ப்பார்கள். இருவரும் நல்லவர்கள் வல்லவர்கள் என்றாலும் முரண்பாடு வரும் போது இருவரில் அதிக வலிமையானவர் அறிவிக்கும் செய்திக்கு முன்னுரிமை கொடுத்து அவரை விட வலிமை குறைந்தவர் அறிவிக்கும் அந்தச் செய்தியை பின்தள்ளி விடுவார்கள். 

ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்திக்கு மஹ்ஃபூள் என்றும் பின்தள்ளப்பட்ட செய்திக்கு ஷாத் என்றும் கூறுவார்கள். இதனால் யாருடைய செய்தி பின்தள்ளப் பட்டதோ அவர் அறிவிக்கும் எந்தச் செய்தியையும் ஏற்கக் கூடாது என்ற முடிவுக்கு வர மாட்டார்கள். மாறாக முரண்பாடாக அறிவிக்கும் அந்தச் செய்தியை மாத்திரம் புறக்கணிப்பார்கள். இவ்விதி நம்மை விமர்சிப்பவர்கள் ஒத்துக்கொண்ட விதி தான். ஹதீஸ் கலையில் எழுதப்பட்டது தான். 

நம்பகமானவர்கள் முரண்பாடாக அறிவிக்க மாட்டார்கள் என்று நம்மை விமர்சிப்பவர்கள் கருதுவதால் தான் நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி குர்ஆனுடன் முரண்படாது என்று கூறுகிறார்கள். நம்பகமானவர்களிடத்தில் முரண்பாடு வராது என்பேத இவர்களின் இந்த வாதத்திற்குக் காரணம். 

ஒரு நம்பகமானவர் தன்னைப் போன்ற இன்னொரு நம்பகமானவருக்கோ அல்லது தன்னை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவருக்கோ முரண்பாடாக அறிவிப்பார்கள். அப்படி அறிவித்தால் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கலையின் விதி உணர்த்துகிறது.

அப்படியானால் குர்ஆனிற்கு முரண்பாடாக அவரது செய்தி அமையாது என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? முரண்பாடாக இவரது செய்தி இருப்பதால் இவர் அறிவிக்கும் செய்தியை விட வலிமையான குர்ஆனிற்கு ஏன் முக்கியத்துவம் தரக்கூடாது? 

சுருங்கச் சொல்வதாக இருந்தால் ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீஸிற்கு முரண்படும். ஆனால் ஹதீஸ் குர்ஆனிற்கு ஒரு போதும் முரண்படாது என்று கூற வருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமானது? 

ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக் கொண்டு குர்ஆனிற்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்க மறுக்கிறார்கள். தங்களை அறியாமல் ஹதீஸை ஏற்றுக்கொண்டு குர்ஆனை மறுத்துக் கொண்டு இருக்கிறார்கள். குர்ஆனுடன் மோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமைந்த இந்தச் செய்திகள் தான் ஒருவனை குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளுகிறது.
முரண்படும் இந்தச் சில செய்திகள் ஒட்டுமொத்த ஹதீஸையும் அவன் மறுப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் முரண்படும் அந்த செய்திகள் ஹதீஸ் கலையில் உள்ள விதியின் பிரகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது கிடையாது என்று கூறி நபியின் சொல்லுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தால் அவன் ஒரு போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறவே மாட்டான். 

இனியும் இவர்கள் குர்ஆனிற்கு ஹதீஸ் எதுவும் முரண்படாது என்று வார்த்தை ஜாலம் காட்டி முரண்பட்ட தகவல்களைச் சொல்லுவார்களேயானால் இவர்களின் இந்த நடவடிக்கை தான் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் உருவாகுவதற்குக் காரணமாக அமையும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 

சிந்தனைக்கு எட்டாத மோசமான செய்திகளை நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொன்னால் கேட்பவர் நபி (ஸல்) அவர்களைத் தவறாக மதிப்பிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் சில நபித்தோழர்கள் இது போன்ற செய்திகளைக் கூற வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள். 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது : மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றி பேசி அதனால்) அல்லாஹ்வும் அவன் தூதரும் (அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்ன? 
நூல் : புகாரி (127)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பது அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.
நூல் : முஸ்லிம் (12)

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு இந்த விளக்கங்களை தந்துதவிய சகோதரர் P.ஜைனுல் ஆப்தீன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், மார்கத்தில்  மேலும் தெளிவையும், சமூகத்துக்கு மேலும் விளக்கத்தையும் தந்துதவ அல்லாஹ்வை வேண்டி இத்தொடரை முடிக்கின்றேன்.
________________________________________
ஜசாகல்லாஹ் www.onlinpj.com