நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகுமா ? என்பதை அறிவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் கோடிக் கணக்கான படைப்புகளில் மனிதன் சிறந்த படைப்பாகத் திகழ்கிறான். சிந்தித்து உணரும் ஆற்றலையும், தான் உணர்ந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றலையும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக் கொண்டு மனிதன் படைத்த சாதனைகள் மகத்தானவை. தனது கண்டு பிடிப்புகளைப் பார்த்து தானே பிரமிக்கும் அளவுக்கு மனிதனின் அறிவாற்றல் சிறந்து விளங்குகிறது.
இது மனிதனின் ஒரு பக்கமாக இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் மனிதனின் அறிவு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
தனக்குப் பயன்படும் பொருட்களைக் கண்டு பிடிப்பதிலும், இவ்வுலகில் சொகுசாக வாழ்வதற்கான சாதனங்களைக் கண்டு பிடிப்பதிலும் மனிதனின் அறிவு மகத்தானதாக இருந்தாலும் சரியான கொள்கை, கோட்பாட்டைக் கண்டறிவதில் பெரும்பாலும் மனிதன் தவறாக முடிவு செய்பவனாகவே இருக்கிறான். இதைப் பல்வேறு சோதனைகள் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
மாமேதைகள், பண்டிதர்கள் என்று வரலாற்றில் போற்றப் படுபவர்களும் நம் கண் முன்னே வாழ்ந்து வருபவர்களும் தாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு கல்லுக்கு முன்னால் கூனி, குறுகி நின்று வழிபாடு நடத்துகின்றனர். இது நாம் செதுக்கிய கல் தானே! இதற்கு எந்த சக்தியும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லையே என்று இவர்களின் அறிவு இவர்களுக்கு வழிகாட்டவில்லை.
பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கிய பலர் கடவுளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் பிறவிப் பாவத்தை அந்த மகன் சுமந்து கொண்டார் என்றும் நம்பி அவரை வழிபடுவோராக இருந்தனர் என்பது வரலாறு.
ஒருவரது பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்ற சாதாரண உண்மையைக் கூட இவர்களின் சக்தி வாய்ந்த மூளையால் கண்டறிய முடியவில்லை.
மற்ற மனிதர்களை ஏமாற்றக் கூடாது; சுரண்டக் கூடாது என்ற சாதாரண உண்மையை படிக்காதவர்கள் அறிந்து கொண்ட அளவுக்கு படித்தவர்கள் அறியவில்லை.
வரதட்சணை வாங்குவது, கலப்படம் செய்வது, மக்களைச் சீரழிக்கும் சினிமாக்களைத் தயாரிப்பது, பெற்றோரைக் கவனிக்காமல் விரட்டியடிப்பது உள்ளிட்ட கொடுஞ்செயல்களை அதிக அறிவு உள்ளவர்கள் தான் அதிக அளவு செய்து வருவதைக் காண்கிறோம்.
மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு சரியான நேர்வழியைக் கண்டறிய முடியாது என்பதற்கு இதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம்.
கம்யூனிஸம், சோஷலிஷம், கேப்பிட்டலிசம், புதிய கேப்பிட்டலிசம் என்று பல்வேறு பொருளாதாரக் கொள்கை கள் உலகில் உள்ளன. ஒவ்வொரு கொள்கையையும் உலகிற்குத் தந்தவர்களும், அவற்றை இன்றளவும் தூக்கிப் பிடிப்பவர்களும் யார்? நல்ல அறிவாளிகள் தான்.
மேற்கண்ட கொள்கைகளில் ஏதோ ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும். ஆனாலும் அனைத்து அறிவாளிகளும் ஒன்று கூடி அந்த ஒரு கொள்கை எது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படி ஆயிரமாயிரம் விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது நிலை தான் சரியானது என்று சாதிக்கின்றனர். முரண்பட்ட இரண்டு விஷயங்களில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும் என்பது தான் அறிவுப்பூர்வமான முடிவாகும்.
அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள விஷயங்களில் ஏதோ ஒன்று தான் சரியானது; மற்றவை தவறானவை என்றால், அறிவுடையவர்கள் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பது பொய் என இதிலிருந்து தெரிகிறது.
சரியான முடிவைக் கண்டறிய முடியாமல் மனிதன் தடுமாறும் தன்மையுள்ளவனாக இருப்பதால் நேர் வழியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை மனிதன் கையில் ஒப்படைக்க முடியாது.
மனிதனைப் படைத்த ஏக இறைவன் தான் அனைத்திலும் சரியான முடிவை அறிபவனாக இருக்கிறான். மனி தனுக்கு நேர் வழி காட்டும் பொறுப்பு அவனிடம் இருப்பது தான் மனிதனுக்குப் பாதுகாப்பானது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
சில விஷயங்களில் மனிதன் சரியான முடிவைக் கண்டறிந்து விட்டாலும் தனது சுய நலம் காரணமாக அந்த வழியை மறைப்பவனாகவும் மனிதன் இருக்கிறான்.
ஆட்சியாளர்களால் தனக்கு ஆபத்து ஏற்படுமோ, தீய செயலைத் தீமையென்று தெளிவுபடுத்தினால் அத்தீமையைச் செய்பவர்களால் தனக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி, தான் கண்டறிந்த சரியான பாதையை மற்றவர்களுக்குச் சொல்லாமல் மனிதன் மறைத்து விடுகிறான்.
தனக்குக் கிடைக்கும் ஆதாயத்துக்காக தீமை தான் என்று திட்டவட்டமாகத் தெரியும் ஒன்றை நன்மை தான் என்று பிரச்சாரம் செய்பவனாகவும் மனிதன் இருக்கிறான்.
இத்தகைய பலவீனம் கொண்டவனிடம் நேர்வழி காட்டும் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.
எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாகிய இறைவன் மட்டும் தான் மனிதனுக்குச் சரியான வழியைக் காட்ட முடியும் என்ற கொள்கையை இஸ்லாம் உலகுக்குச் சொல்கிறது.
எனவே இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற இயலாத எந்த அறிஞரையோ, எந்த நபித்தோழரையோ பின்பற்றக் கூடாது என்பதை இந்த அடிப்படைத் தத்துவத்தில் இருந்து அறியலாம்.
வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்
நேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் இல்லை; அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மண்ணுலகுக்கு வந்த முதல் கட்டளை.
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் இறை வனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். இறைவனது ஆற்றலைக் கண்கூடாகக் கண்டவர்கள். வானவர்களை மிஞ்சும் அளவிற்கு அறிவாற்றல் வழங்கப்பட்டவர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் துணைவியான அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் இறைவனின் ஒரு கட்டளையை மீறி விட்டனர். இதன் காரணமாக அவர்கள் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களை வெளியேற்றும் போது அவர்களிடம் இறைவன் பின்வருமாறு சொல்லி அனுப்பினான்.
இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்..
திருக்குர்ஆன் : 2:38
பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி காட்டினான்.
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார். எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்..
திருக்குர்ஆன் : 20:122, 123, 124
தமக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு மனிதர் கள் நேர்வழியைக் கண்டறிந்து கொள்வார்கள் என்றால் இவ்வாறு இறைவன் சொல்லி அனுப்பத் தேவையில்லை.
உமக்கு நான் அளப்பரிய அறிவைத் தந்துள்ளேன். அந்த அறிவைக் கொண்டு நேர்வழியைக் கண்டுபிடித்து அதன்படி நடந்து கொள் என்று இறைவன் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அந்த நேர்வழியைப் பின்பற்றினால் தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லி அனுப்பினான்.
மனிதர்களிலேயே மாமேதையான ஆதம் நபி அவர்களே சுயமாக நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது; இறைவனிட மிருந்து தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின்படி நடக்க வேண் டும் என்றால் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?
இறைவன் தவிர வேறு எவருடைய கூற்றையும் நடவடிக்கைகளையும் நாம் மார்க்கமாக ஆக்கக் கூடாது என்பது தெரியவில்லையா?
ஆதம் (அலை) அவர்களே இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை - வஹீயை - மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் மற்றவர்களோ அவரை விட உயர்ந்தவர்களா ? இது குறித்து இறைவன் மிகத் தெளிவான வார்த்தைகளால் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.
'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
திருக்குர்ஆன் : 2:170
அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்..
திருக்குர்ஆன் : 3:103
(முஹம்மதே!) உமது இறை வனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
திருக்குர்ஆன் : 6:106
தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்? அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் 'இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது' என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!
உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந் துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் : 6:114,115
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
திருக்குர்ஆன் : 7:3
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்' என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் : 10:15
(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.
(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்..
திருக்குர்ஆன் : 33:2
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் : 39:3
உங்கள் இறை வனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்
திருக்குர்ஆன் : 39:58
தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் : 46:9
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் : 49:16
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்..
திருக்குர்ஆன் : 24:51,52
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்..
திருக்குர்ஆன் : 5:3
இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்..
திருக்குர்ஆன் : 16:116
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக் கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
திருக்குர்ஆன் : 42:21
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்..
திருக்குர்ஆன் : 5:87
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை..
திருக்குர்ஆன் : 6:140
'தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?' என்று கேட்பீராக! 'அவை இவ்வுலக வாழ்க் கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது' எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.!
திருக்குர்ஆன் : 7:32
வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!
திருக்குர்ஆன் : 9:29
(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத் துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனித மற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் : 9:37
அவர்களுக்கு முழுமையான அறிவு இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக் கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!.
திருக்குர்ஆன் : 10:59
உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ் வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.
திருக்குர்ஆன் : 5:48 49
மேற்கண்ட வசனங்கள் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி எந்த மனிதரின் கூற்றையும் பின்பற்றலாகாது என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.
- முன்னோரைப் பின்பற்றலாகாது!
- அல்லாஹ்வின்-கயிறைப்-குர்ஆனை-பிடித்துக் கொள்க!
- இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்டதை மட்டும் பின்பற்றுவீராக!
- வஹீயாக அறிவிக்கப்படுவதைத்தான் நபியே பின்பற்ற வேண்டும்.
- வஹீயை மாற்றி அமைக்க நபிக்கும் அதிகாரம் இல்லை.
- மார்க்கத்தின் உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே.
- அல்லாஹ்வுக்கு மனிதன் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடாது.
- மார்க்கத்தை நானே (அல்லாஹ்) நிறைவாக்கி விட்டேன்.
- நீங்களாக இட்டுக்கட்டி ஹலால் ஹராம் என்று கூறாதீர்கள்!
என்பன போன்ற சொற்கள் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவை அனைத்தும் கூறுவது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட சுயமாக ஒன்றை உருவாக்க அதிகாரம் படைத்தவரில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக அறிவிக்கின்றன.இவ்வளவு தெளிவாக இறைவன் விளக்கிய பிறகும் இறைவனின் வழிகாட்டுதல் போதாது என்று எண்ணுவோர் தான் நபித்தோழர்களையோ, மற்றவர்களையோ பின்பற்ற வேண்டும் என்று வாதிட முடியும்.
-------------------------------------------------------------------------------
Jazakallah http://onlinepj.com/books/nabithozarkalum-namathu-nilaiyum/