October 19, 2011

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா ?...(தொடர்-1)




  • குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும். 

குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பிய போது இந்த வழிகேட்டிலிருந்து அவர்களையும் அவர்களிடமிருந்து மக்களையும் காப்பாற்றுவதற்காக விவாதங்களை நடத்தினோம். இதன் விளைவாக ஹதீஸின் அவசியத்தை மக்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். 

ஆயினும் மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம். 

இதைப் புரிந்து கொள்ளாத சிலர், ஹதீஸை மறுப்பதற்கான வழியை நாம் திறந்து விடுவதாகவும் மனோ இச்சையின் அடிப்படையில் ஹதீஸை மறுப்பதாகவும் நமக்கு முன்பு இந்தக் கருத்தை யாரும் கூறியதில்லை என்றும் ஹதீஸை மறுப்பதற்கு இப்படியொரு விதி ஹதீஸ் கலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள். 

தாம் அறியாத விசயத்திற்கு மக்கள் எதிரிகளாக இருப்பார்கள் என்பதற்கிணங்க இவர்களுக்கு உண்மை தெரியாத காரணத்தினால் நாம் கூறுகின்ற இந்த உண்மையை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதோடு இவர்களது பிரச்சாரத்தால் குழம்பிய மக்களுக்கு தெளிவான வழியைக் காட்டுவதற்காகவும், குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களை நபியவர்கள் கூறியதாக பொது மக்கள் எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. 

இதில் தவறுகள் ஏதும் இருந்தால் அதை எங்களுக்கு நீங்கள் சுட்டிக் காட்டலாம். இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வோம். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேரான வழியைக் காட்டுவானாக. 
நபி (ஸல்) அவர்களின் கூற்று குர்ஆனுடன் முரண்படாது

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் (16 : 44)

வேதத்தை மக்களுக்கு விளக்குவதற்காக போதனையை அதாவது ஹதீஸை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். ஹதீஸிற்கும் குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இவ்வசனம் எடுத்துரைக்கிறது. 

நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனிற்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்று கூறுவதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது. 

குர்ஆன் மட்டும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே. இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் (53 : 4)

குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வருவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில் முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அவனுடைய கருத்துக்களில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன. 

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். 
அல்குர்ஆன் (4 : 82)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
அல்குர்ஆன் (41 : 42)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் இந்த முரண்பாடே அது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகிவிடும்.
தன் பெயரால் அறிவிக்கப்படும் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார். 
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல் : முஸ்லிம் (1)

திருக்குர்ஆன் கூறும் இக்கருத்தையே நாமும் கூறுகிறோம்.
நபி (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை குர்ஆன் அடிப்படையில் தான் அமைந்திருந்தது. அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு ஒத்திருக்கும். அல்லது குர்ஆனிற்கு விளக்கமாக இருக்கும். குர்ஆனிற்கு மாற்றமாக அவர்களின் வாழ்க்கையில் எந்த சிறு அம்சத்தையும் காண முடியாது. 

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : சஃத் பின் ஹிஷாம் 
நூல் : அஹ்மத் (24139)

நபித்தோழர்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா?
_________________________________________

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதியை யாரும் கூறியதில்லை: அதனடிப்படையில் செயல்படவுமில்லை என நம்மை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸைப் பாதுகாப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததே இந்த விபரீத விமர்சனத்திற்குக் காரணம். நாம் கூறும் இந்த அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததைப் பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

  • உமர் (ரலி) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை 

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒரேயடியாக தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை. (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்) என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (2953)

அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது : நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ‘ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை. ஜீவனாம்சமும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்’ என்ற ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். (அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எரிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள். உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. பகிரங்கமான வெக்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65 : 1) என்று வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஇஸ்ஹாக் (ரஹ்)
நூல் : முஸ்லிம் (2963)

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்குக் கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது. எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். 

ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத் தன்மையில் உமர் அவர்கள் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒரு போதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். 

இந்தச் சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் எந்த வாதத்தை முன் வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம். இப்போது ஹதீஸின் போலிப் பாதுகாவலர்கள் நம்மை விமர்சனம் செய்ததைப் போல் “உமர் ஹதீஸை மறுத்து விட்டார். அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார். இவர் வழிகெட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்” என்றெல்லாம் விமர்சனம் செய்வார்களா? 

சுருக்கமாக இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் “எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அது சரியா? தவறா? என்ற ஆய்வுக்குள் செல்ல மாட்டோம். அந்தக் கருத்தை இதற்கு முன்னால் யாராவது சொன்னார்களா என்றே கேட்போம்” என்கிறார்கள். 

இந்த நிகழ்வுகளைக் கூட நாம் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் சஹாபாக்களின் செயல்பாடுகள் ஆதாரத்திற்குரியது என்பதற்காக அல்ல. முன்னோர்கள் யாராவது சொல்லியிருந்தால் தான் சரி என மத்ஹப் வாதிகள் சென்ற பாதையில் இன்றைக்குச் சென்று கொண்டிருக்கிற இவர்களுக்கு முன்னோர்களும் நமது வழிமுறையைக் கடைப்பிடித்துள்ளார்கள் என்று உரைப்பதற்காகத் தான் இதைக் கூறுகிறோம். 

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றும் கொள்கையில் இருப்பவர்களுக்கு நாம் முதலில் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனமே நம்பிக்கை கொள்வதற்குப் போதுமானது. 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி குர்ஆனுக்கு முரண்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிப்பாகக் கூறியிருக்க மாட்டார்கள். அந்தச் செய்தியை அறிவித்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து தான் தவறு ஏற்பட்டிருக்கும் என்ற இந்த நியாயமான கருத்தை உமர் அவர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான ஹதீஸ்களை நம் சமுதாயத்திற்குத் தந்த அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களும் முன் வைத்துள்ளார்கள். 

  • அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை 

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸுஹைபே எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)

அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா? என்றார்கள். 
உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53 : 43) ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35 : 18) (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (1694)

உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது : இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதின் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க) நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார். 

நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள். 

(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27 : 80)

(நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35 : 22) 
அறிவிப்பவர் : உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)
நூல் : முஸ்லிம் (1697) 

உமர் மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டிய போது பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப்பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : காசிம் பின் முஹம்மத் (ரஹ்)
நூல் : முஸ்லிம் (1693)

குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச்சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக ஆயிஷா அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்வார்களா? 

இதே கோணத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்)
நூல் : அஹ்மத் (24894)

ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் (2858) (5093) (5753) (5772) ஆகிய எண்களிலும் முஸ்லிமில் (4127) (4128) ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது. 

யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. வீடு பெண் கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்; எனவே இம்மூன்றிலும் சகுணம் பார்க்கலாம் என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாதம். 

இந்த மூன்று செய்திகளிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள். 

ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் மட்டும் கூறவில்லை. நமக்கு முன்பு நபித்தோழர்களும் கூறியுள்ளார்கள் என்பதற்காகத் தான் இவற்றைக் கூறியுள்ளோம்.

ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?
___________________________________

குர்ஆனைப் படிக்காத ஒருவர் குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது என்று சொல்பவர்களைப் பார்த்து யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள் என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் சொல்லப்படவில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களும் அறியாமையில் தான் இருக்கிறார்கள். 

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம் பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை. 

  • இமாம் ஷாஃபியின் கூற்று

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.
நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438 

  • இமாம் குர்துபீயின் கூற்று

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به. 
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.
நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

  • இமாம் ஜுர்ஜானியின் கூற்று 

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும். 
நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

  • இமாம் சுயூத்தியின் கூற்று

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும். 
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276 

  • இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று 

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும். 
நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

فصل مخالفة الحديث الموضوع لصريح القرآن ومنها مخالفة الحديث لصريح القرآن 

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று. 
நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218 

  • இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று

فأما الوجه الاول وهو ما إذا كان الحديث مخالفا لكتاب الله تعالى فإنه لا يكون مقبولا ولا حجة للعمل به
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது. 
நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364 

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

وَذَلِكَ أَرْبَعَةُ أَوْجُهٍ أَيْضًا مَا خَالَفَ كِتَابَ اللَّهِ

இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும். 
நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492 

وَالْأَوَّلُ عَلَى أَرْبَعَةِ أَوْجُهٍ : إمَّا أَنْ يَكُونَ مُعَارِضًا لِلْكِتَابِ 

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும். 

நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

  • இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث يباين المعقول أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277 

وقال ابن الجوزي الحديث المنكر يقشعر له جلد الطالب للعلم وينفر منه قلبه في الغالب    

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!. 
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275

  • அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று 

 عن الربيع بن خثيم قال إن من الحديث حديثا له ضوء كضوء النهار نعرفه به وأن من الحديث حديثا له ظلمة كظلمة الليل نعرفه بها

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.
நூல் : மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62

  • முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்று :

இந்த அறிஞரின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள். 

الإحكام لابن حزم ள جزء 2 - صفحة 209 ன 
 وقال محمد بن عبد الله بن مسرة الحديث ثلاثة أقسام فحديث موافق لما في القرآن فالأخذ به فرض وحديث زائد على ما في القرآن فهو مضاف إلى ما في القرآن والأخذ به فرض وحديث مخالف لما في القرآن فهو مطرح

  • முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் மூன்று வகையாகும். 

1.குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம். 

2. குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

3.குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது. 
நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

தொடரும் ...
 ________________________________________
ஜசாகல்லாஹ் www.onlinpj.com